கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்படின் கடற்றொழில் அமைச்சுப் பதவியை தூக்கி எறியவும் தயங்கப் போவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இன்று(20.12.2020) அங்கு சென்ற கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்>
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் உணர்வு ரீதியான விடயமாக தனக்கு அமைந்திருப்பதாக தெரிவித்ததுடன் இவ்விடயத்தில் இந்தியத் தரப்பினரே தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை கடந்த காலங்களில் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது தமிழக மக்களினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கள் மறக்க முடியாதவையாக நன்றிக்குரியவையாக இருக்கின்ற போதிலும் எமது மக்களின் வாழ்வாதாரமும் எமது கடல் வளமும் அழிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்குமாறு முனவைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்திருப்பதாவும் குறிப்பிட்டார்.
அத்தடன் எல்லை தாண்டுகின்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தொடர்ந்தும் மேற்கொள்ளுவது தொடர்பாக இன்றும கடற்படை தளபதியுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்> கைது செய்யப்படுகின்றவர்ளை கௌரவமாக நடத்துமாறு கடற்படை தளபதியைக் கேட்டுக் கொண்டதாகவும்> கைது செய்யப்படுகின்றவர்களை தனிமைப்படுத்துவதற்கு பொருத்தமான பாடசாலை ஒன்றினை ஏற்பாடு செய்து தருமாறு வடக்கு ஆளுநரிடம் கோரியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும்> முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சுருக்கு வலை மற்றும் வெளிச்சம் பாயச்சுதல் போன்ற தடை செய்யப்பட்ட தொழில் முறைகளும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர்> கடற்றொழில் திணைக்கள மாவட்ட அதிகாரிகாரிகள் எதிர்காலத்தில் விரைந்து நடவடிக்கைளை மேற்கொள்வார்கள் என்றும் உறுதியளித்தார்.
அதேவேளை தன்னுடைய முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்று ஆறாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கவனயீர்ப்பு போராட்டத்தினை கைவிடுவதா அல்லது தொடர்வதா என்பதை போராட்டக்காரர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்.