கொவிட் 19 தொற்று ஏற்பட்ட சடலங்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து நிச்சமான தீர்மானம் ஒன்று பெற்றுக் கொடுக்கும் வரை குறித்த சடலங்களை குளிரூட்டப்பட்ட கொள்கலனில் வைக்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்படுவதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு, களுத்துறை, கண்டி, நீர்க்கொழும்பு ஆகிய பிரதான சட்ட வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கும் சடலங்களை வைத்திருக்கக்கூடிய குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை பெற்றுத்தருமாறு குறித்த கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு பிரதான சட்டவைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன் வழங்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சடலங்கள் வைக்கப்படுவதை காணக்கூடியதாக இருந்தது.
கொரோனா மரணம் – தகனம் செய்யாமல் குளிரூட்டப்பட்ட அறையில் வைக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவு..
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த காலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருடைய சடலத்தை தகனம் செய்யாமல் குளிரூட்டப்பட்ட அறை ஒன்றில் வைக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் உறவினர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காலி மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி, குறித்த சடலத்தை தகனம் செய்யாமல் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை வரும் வரையில் கராபிட்டிய வைத்தியாசலையில் உள்ள அதி குளிரூட்டப்பட்ட அறையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
காலி, தேதுகொட பகுதியை சேர்ந்த 84 வயதுடைய முஸ்லிம் நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.
குறித்த நபரின் சடலத்தை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் தகனம் செய்யுமாறு கராபிட்டிய வைத்தியசாலையின் திடீர் மரண பரிசோதகர் சந்திரசேன லொகுகே உத்தரவிட்டிருந்ததுடன், உயிரிழந்த நபரை தகனம் செய்வதாயின் சடலத்தை பொறுப்பேற்க முடியாது என அவருடைய மகன் தெரிவித்திருந்தார்.
#கொரோனா_மரணம் #முஸ்லிம்_நபர் #கொரோனா_தொற்று #தகனம்