Home இலங்கை உலக மக்களின் நலனோம்பும் மட்டுநகர் நரசிங்க வயிரவர் ஆலயத்திற்குரித்தான மாரியம்மன் குளிர்த்திப் பாடல்கள் – ஓர் அவதானம்.

உலக மக்களின் நலனோம்பும் மட்டுநகர் நரசிங்க வயிரவர் ஆலயத்திற்குரித்தான மாரியம்மன் குளிர்த்திப் பாடல்கள் – ஓர் அவதானம்.

by admin


து.கௌரீஸ்வரன்.


கிழக்கிலங்கையில் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மானுடக் குழுமங்களின் அசைவியக்கத்திற் பெரும் செல்வாக்குப் பெற்று வரும் பத்ததிச் சடங்கு வழிபாட்டு முறைகளுள் சடங்குப் பாடல்கள் மிகவும் முக்கியத்துவமுடையனவாகத் திகழ்ந்து வருகின்றன.
பத்ததிச் சடங்கு வழிபாட்டு முறைமைகளின் இலக்கியங்களாக இச்சடங்குப் பாடல்களே கொள்ளப்படத்தக்கன. இப்பாடல்கள் பல்வேறு வித்தியாசமான தன்மைகள் கொண்டவையாகவும் உள்ளன.


கிழக்கிலங்கையில் வாழும் பல்வேறு சமூகக் குழுமங்களினதும் வரலாறு, சமூக நோக்கு, அறம் சார்ந்த சிந்தனை முதலியனவற்றை வெளிப்படுத்தும் படைப்பாக்கங்களாக இப்பாடல்கள் ஒவ்வொரு சமூகத்தவராலும் உருவாக்கப்பட்டு அவை வருடா வருடம் சடங்கு விழாக்களில் பாடப்பட்டு வருவதனைக் காண முடிகின்றது. அதாவது ஒவ்வொரு சமூகத்தவரும் தமது குல தெய்வத்தையோ! அல்லது தம்மால் வழிபடப்பட்டு வரும் தெய்வங்களையோ! வேண்டிப் பாடிய பாடல்கள் ஊடாகத் தமது உலக நோக்குக் குறித்த சிந்தனைகளை வெளிக்காட்டி உள்ளனர்.


இந்தவகையில் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நீண்ட வரலாற்றுப் பெருமையும், தனித்துவமும் கொண்டமைந்த பத்ததிச் சடங்குக் கோவில்களுள் ஒன்றாகவுள்ள மட்டுநகர் எல்லைவீதி மகா நரசிங்க வயிரவ சுவாமி ஆலயத்தின் வருடாந்தச் சடங்கு விழாவில் மாரியம்மனை வேண்டிப் பாடப்படும் பாடல்களில் காணப்படும் உலகந்தழுவிய கருத்தாக்கங்கள் பற்றி இக்குறிப்பில் ஆராயப்படுகின்றது.
இக்கோவில் மட்டக்களப்பு நகரில் மாநகர சபையின் எல்லைக்குள் மட்டுநகர் பிரதான புகையிரத நிலையத்தின் அருகில் எல்லை வீதியில் வயிரவன் காடு என முன்னர் அழைக்கப்பட்ட இடத்தில் அமையப்பெற்றிருக்கின்றது.
இலங்கையில் ஏற்பட்ட புராதன குடிப்பரம்பல் நிகழ்வுகளின் பின்னணியில் பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டு காலப்பகுதிகளில் வடக்கிலிருந்து கிழக்கின் கரையோரப்பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்த நம்பி குலத்தவர் எனப்படும் நளவர் சமூகத்தினரின் ஒரு பகுதியினரால் காடும் காடு சார்ந்த பகுதியுமாக இருந்த இப்பிரதேசத்தில் இக்கோவில் அமைக்கப்பட்டு இதன் சடங்கு வழிபாட்டு முறைமைகள் வடிவமைக்கப்பட்டு தொடரப்பட்டு வருவதாக இவ்வாலயத்தின் வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரந்து வாழும் நம்பி குலத்தவர் வருடாந்தம் இவ்வாலயத்தில் ஒன்று கூடி வருடாந்தச் சடங்கு விழாவினைக் கொண்டாடிச் செல்வதாக இக்கோவிலின் இயக்கம் இடம்பெற்று வருகின்றது.
ஆரம்பத்தில் கந்தன்கதிராமன் (இவரை மொட்டை ஆச்சி எனவும் அழைக்கின்றனர்) என்பவரின் தலைமையிலும் பின்னர் சின்னவியார் என்பவரின் தலைமையிலும் இவ்வாலயத்தின் சடங்கு வழிபாட்டு முறைமைகள், விதிகள் என்பன உருவாக்கப்பட்டுள்ளன. சின்னவியார் என்பவர் தலைமையேற்றிருந்த காலத்திலேயே மாரியம்மன் சடங்கு வழிபாட்டு முறைமைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாரியம்மன் சடங்கு வழிபாட்டில் மாரியம்மனை வேண்டிப் பாடும் மாரியம்மன் குளிர்த்தி ஏடு படித்தல் எனும் நிகழ்ச்சி இவ்வாலயச் சடங்கு விழாவில் முக்கியமான விடயமாக நடைபெற்று வருகின்றது. இக்குளிர்த்திப் பாடல்கள் சின்னவியார் எனும் புலவனால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. வைசூரி எனப்படும் அம்மை நோய்க்குள்ளாகி துன்பமடைந்த சின்னவியார் அவர்கள் மாரியம்மன் அருளால் அந்நோயிலிருந்து மீண்டதன் பின்னர் மாரியம்மனை வேண்டிப் பாடிய பாடல்களின் தொகுப்பாகவே மாரியம்மன் குளிர்த்தி ஏடு ஆக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதன்காரணமாக இக்குளிர்த்திப் பாடல்கள் அடங்கிய ஏடு இவ்வாலயத்திற்கேயுரிய சொத்தாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
ஆனித் திங்களில் உத்தரம் வருகின்ற தினத்தை உள்ளடக்கி ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து அடுத்த வெள்ளிக்கிழமை நிறைவுபெறுவதாக அமையும் வருடாந்தச் சடங்கு விழாவின் ஏழு தினங்களிலும் பின்னிரவு வேளையில் மாரியம்மனை கும்பத்தில் உருவேற்றி வைத்ததன் பின்னர் மாரியம்மனுக்குரிய கூடாரத்திற்குள் ஏடு படித்தல் நிகழ்ச்சி பக்தி சிரத்தையுடன் இடம்பெற்று வருகின்றது. ஏடு படிப்பதில் தேர்ச்சி பெற்ற இவ்வாலயச் சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் இதனைப் பாடி வருகின்றார்கள். உடுக்கிசையில் வௌ;வேறு மெட்டுக்களில் இப்பாடல்கள் பாடப்படுகின்றன. ஏறத்தாழ இரண்டரை மணிநேரம் தொடர்ச்சியாக இப்பாடல்கள் பாடப்படுகின்றன.


இவ்வேட்டில் விருத்தம், கலிப்பா, கழிநெடில் என்பவற்றுடன் இருவரிப் பாடல்களாக அம்மன் தெளிவுப்பாடல்கள், இரக்கம், தணிதல், ஆறுதல், அடைக்கலம், சிங்காசன இருப்பு, கார்த்தல், சரணம், நடை, உல்லாசம், அகவல், மோகினி ஆசரியம், தேர்நடை என்று தலைப்பிடப்பட்டு வௌ;வேறு மெட்டுக்களில் பாடப்பட்டுவரும் 530 வரையான பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. பாரம்பரியமான ஓலைச்சுவடியுடன், கடதாசியில் கையெழுத்தில் எழுதப்பட்ட பிரதியாகவும் ஆலயத்தின் பெட்டகத்தில் இப்பாடல் பனுவல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. ஏடுபடித்துவரும் நபர்களிடமும் கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. தமது சமூகத்தின் தனித்துவமான வழிபாட்டு முறைமையாக ஏடு படித்தலை மேற்கொள்ளுவதில் இவ்வாலயச் சமூகத்தினர் மிகவும் கவனமாக இருந்து வருகின்றனர்.


இவ்விதம் காணப்படும் மாரியம்மன் குளிர்த்தி ஏட்டுப்பாடல்களில் உலகத்தின் மேன்மையினை வேண்டுதல், உலகமக்களின் நல்வாழ்விற்காக பிரார்த்தித்தல் எனும் பொதுநல நோக்கம் பிரதான விடயமாக மேற்கிழம்புவதனைக்காண முடிகின்றது. குறிப்பிட்ட ஓர் இனத்தினதும் குறிப்பிட்ட ஒரு சமூகப்பிரிவினரதும் சமயம் சார்ந்த வழிபாட்டு முறைமையுடனும், வரலாற்றுடனும் சம்பந்தப்பட்டதாக இப்பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும் இச்சடங்குப்பாடல்களினூடாக வலியுறுத்தப்படும் அறவியல் வெளிப்பாடானது உலகந்தழுவிய மானுட நலனுக்காக, உலகத்தின் பொது நலனுக்காகப் பிரார்த்தனை செய்வதாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.
இதனைப் பின்வரும் எடுத்துக்காட்டுக்களினூடாக உறுதிப்படுத்த முடிகின்றது. ஏடு படித்தலின் தொடக்கப் பாடலாக அமையும் காப்பு விருத்தத்தில் முதல் வரியிலேயே


‘சீர்தமிழ் விளங்க நாளுஞ் சிறந்தெழு உலகும் வாழ்க’
என உலகம் வாழ வேண்டும் எனும் வேண்டுதலே பிரதானம் பெறுகின்றது.


வேறு வேறு மெட்டுக்களில் அமையும் ஒவ்வொரு பாடல் வகைகளும் பாடுவதற்கு முன்னர் உச்ச ஓசையுடன் பாடப்படும் பாக்களாக இவ்வேட்டில் தொகுக்கப்பட்டுள்ள விருத்தப்பாக்களில் உலகந்தழுவிய மானுட நலனை வேண்டுதல் வலியுறுத்தப்படுவதனைப் பின்வரும் எடுத்துக்காட்டுக்களூடாக காணலாம்.


‘… தொகையாக மகமாரித் தாயைப் போற்றித் தொல்லுலகோர் தங்கள் பல துயரம் மாற்றி
தயவாக உனது மனமிரங்குமம்மா தாரணியில் மனுவோர்க்குத் தர்மத்தாயே’

‘விளைவான கதிர்பயிர்கள் கருகிவாட மேதினியிலுனது மனமிரங்காதேதோ
தழைவாக உலகமெலாஞ் செழித்துவாழ தன்மமனமிரங்கியுன்தன் சரிதையாக
களையாற பிணிகிலேசக்கவலை தீர கருத்திரங்கியுனது மனக்கருணையாக
மழைமாரி பொழிந்துலகமேழும்வாழ மனம்மகிழ்ந்து காட்சிகொடு மாரித்தாயே’
அடுத்து இவ்வேட்டுப் பாடல்களில் காணப்படும் கலிப்பாக்களில் உலகந்தழுவிய மானுட நலனை வேண்டுதல் வலியுறுத்தப்படுவதனைப் பின்வரும் எடுத்துக்காட்டுக்களூடாக காணலாம்.
‘…அவனியெங்குமலங்காரமாகவே
வஞ்சமான மனத்துயர் மாற்றியே
வாழ்கலோகமடங்கலுங்காரம்மா’
‘செல்வமான செகத்திருமாதேயுன்
செங்கமலத்திருமுகம் நோக்கியே
அல்லல்தீர அவனிகளெங்கனும்
உன்னன்பினாலேயருளுங் கருணையால்
தொல்லை பாவத்துயர்களை மாற்றியே
துலங்கிலோகமடங்கலுங் காரம்மா’
‘…சிந்தை வைத்துத்திருக்கண்ணிரங்கியே
தேசமெங்குஞ் செழிக்கருள் செய்யம்மா…’
அம்மனைத் தெளியச் செய்யும் வேண்டுதலாக அமையும் இருவரிப்பாடல்களில்
‘மானிடமேங்கி வருந்தும் வருத்தம்
அறிந்து மனதிலுருக்கமிரங்கி’
‘அன்பிலுகந்து உலகம் விளங்கத்
தெய்வம்மனே கோபந்தெளிந்தருள்வாயே’
‘தாரணியெங்குந் தழைக்க என்னம்மா
தாயேயுன் கோபந்தெளிந்தருள்வாயே’
எனவும், அம்மனிடம் இரக்கம் கோரிப் பாடப்படும் பாடல்களில்
‘பூலோகமெங்கும் விளங்கவுனது பொற்பிரமான மனமேயிரங்கு’
‘வஞ்சகந்தள்ளி மனுவோர் தமது வருத்தமறிந்துன் மனமேயிரங்கு’
எனவும், அம்மனை ஆறுதலடையச் செய்யும் பாடல்களில்
‘அம்புவியெங்குமடங்கலும் வாழ அம்மனே கோபம் நீராறுமென்னம்மா’
‘சங்கரி நீலி சடாட்சரி மாரி தாயே உலகந்தளம்ப விடாமல்’
‘கன்னநல்லூருறை உக்கிரசக்தி காசினி மீது கடினம் வையாமல்’
‘ஆறுதலாக அவனி விளங்க அம்மனே கோபம் நீராறுமென்னம்மா’
‘வெங்கனல் சிந்தியே அங்ஙனல் மாற்றி மேதினியெங்கும் உன்னன்பேயுகந்து’
‘பூவிநிழமயிலட்சரத்தாளே பூலோகமெங்குந் தளம்ப விடாமல்’
எனவும், அம்மனைச் சிங்காசனத்தில் இருக்கக்கோரும் பாடல்களில்
‘சற்ப அரவின் சிலம்பைத்தரித்து தாரணியெங்குந் தழைத்துக் குளிர’
‘மாதவத்தேவி வைசூரியகற்றி வையகமுய்ய மனதுகுளிர’
‘வீறுள்ள தெய்வங்கள் பேறுடையாளே மேதினியோர்கள் கலக்கமகற்றி’
‘கூவென்றுலகங் குரவையிடாமல் குளிருங்கருணை மனமேயிரங்கி’
எனவும், அம்மனிடம் கார்த்தல் விண்ணப்பங் கோரும் பாடல்களில்
‘வினைசெய் மனக்கவலை வாராமலே இந்த மேதினியிலுன்னடியார்க்காயிரங்கி’
‘நீதிநெறி செங்கோல் நித்தலம் விளங்கி நிற்க நேசமுடனே உலக தேசந்தழைக்க’
‘ஊருலகதேசமதிலுள்ள சனமத்தனையும் உன்னுடைய காவல் கொண்டு காத்தருளும்’
எனவும், அம்மன் நடைப் பாடல்களில்
‘கார்தமிழ் சேர் மகமாரி – அம்மா
காத்தருளும் உலகமெல்லாம்’
‘துன்பதுயர் தானகற்றி – இந்த
தொல்லுலகைக் காருமம்மா’
‘காரணகொங்கைமதியே – அம்மா
காத்தருளும் உலகமெலாம்’
‘வெக்கையனல் துக்க துயர் – இந்த
மேதினியில் வாராமலே’
இவ்வாறாக மட்டுநகர் மகா நரசிங்க வயிரவ சுவாமி ஆலயத்தின் மாரியம்மன் மீது பாடப்பட்டுள்ள குளிர்த்திப் பாடல்களில் உலகத்தின் நன்மைக்காகவும் மானுடர்களின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தல் எனும் உயரிய நோக்கு வெளிப்படுவதனை அறிந்து கொள்ள முடிகின்றது.
ஆதாரங்கள்

  1. மாரியம்மன் குளிர்த்தி ஏடு – கையெழுத்துப் பிரதி, தந்துதவியவர் திரு.செ.சிவநாயகம், வயது 72, ஏட்டண்ணாவியார், (வருடாந்தச் சடங்கு விழாவில் குறித்த பாடல்களைப்பாடி வரும் சிரேஸ்ட பாடுனர்) சீலாமுனை, மட்டக்களப்பு.
  2. அடையாளம், கும்பாபிசேக சிறப்பு மலர், ஸ்ரீ மகா நரசிங்க வயிரவர் ஆலயம், எல்லை வீதி, மட்டக்களப்பு 2012
    கலந்துரையாடியோர் விபரம்
  3. செ.சிவநாயகம், ஏட்டண்ணாவியார், வயது 72, சீலாமுனை,மட்டக்களப்பு
  4. த.ஜெகநாதன், முன்னாள் பிரதம பூசகர், ஸ்ரீ மகா நரசிங்க வயிரவர் ஆலயம்
  5. செ.தயாநிதி, பிரதம பூசகர், ஸ்ரீ மகா நரசிங்க வயிரவர் ஆலயம்
  6. க.கலாமோகன், உதவிப் பூசகர், ஸ்ரீ மகா நரசிங்க வயிரவர் ஆலயம்
  7. சி.ஞானசேகரம், அண்ணாவியார், ஏடு படிக்கும் போது உடுக்கிசைப்பவர், சீலாமுனை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More