1992-ம் ஆண்டு 21 வயதான கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில், கத்தோலிக்கப் பாதிரியார் தோமஸ் கோட்டூர் , கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள்சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் குற்றவாளிகள் இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளா கன்னியாஸ்திரி அபயா படுகொலை இருவர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!
December 22, 2020 7:18 am
28 ஆண்டுகளாக நடைபெற்ற கேரளா கன்னியாஸ்திரி அபயா படுகொலை வழக்கில் மதகுரு (பாதிரியார்) தோமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா 1992-ம் ஆண்டு மார்ச் 27-ல் செயின் பயஸ் கொன்வென்ட் கிணறு ஒன்றில் இறந்து கிடந்தார். முதலில் அபயா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
ஆனால் அபயா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிஐ விசாரணையிலும் அபயா தற்கொலை செய்து கொண்டார் என்றே கூறப்பட்டது.
பின்னர் சென்னையை சேர்ந்த சிபிஐ குழுவினரும் அபயா மரண வழக்கை விசாரித்தனர். இந்த குழு விசாரணையிலும் முடிவு எதுவும் தெரியவில்லை.
3-வதாக சிபிஐ-ன் மற்றொரு குழு நடத்திய விசாரணையில்தான் அபயா கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இக்கொலை தொடர்பாக மத குருமார் (பாதிரியார்கள்) தொமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கன்னியாஸ்திரி செபியுடன் மற்ற மதகுருமார்கள் தகாத உறவு வைத்ததை அபயா பார்த்ததால் படுகொலை செய்யப்பட்டார் என்பதும் தெரியவந்தது.
இவ்வழக்கில் பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயில் மட்டும் கேரளா உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை தொடங்கப்பட்டு முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 28 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிபிஐ நீதிமன்றம், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய 2 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. #திருவனந்தபுரம் #கேரளா#கன்னியாஸ்திரி #அபயா #படுகொலை #குற்றவாளிகள்