இலங்கை பிரதான செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளை மீட்கும் முயற்சியில் ‘குரல் அறவர்களின் குரல்’

நீதியற்ற முறையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளைச் சிறை மீட்கும் விடயத்தில் ஒன்றுபடுமாறு, அரசியல் கட்சி தலைவர்களையும், ஆன்மீகத் தரப்பினரையும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள், நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினர், அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் ஆன்மீகத் தரப்பினரையும் சந்தித்து வருகின்றனர்.

இதற்கமைவாக, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

நல்லூர் திருஞானசம்பந்தர் அதீன பிரதம குருக்கள் வணக்கத்துக்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர், சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளையும் சிவகுரு ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தொடர்ந்து, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி.கே. சிவஞானம் ஆகியோரை தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழ். மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தரப்பில் அருட்பணி ஜெபரணட்னம் அடிகளாரையும் நீதி சமாதானத்துக்கான ஆணைக்குழுவின் தலைவரான அருட்பணி வணக்கத்திற்குரிய மங்களராஜா அடிகளாரையும் அருட்பணி வணக்கத்துக்குரிய இ.ம.வி.ரவிச்சந்திரன் அடிகளாரையும் சந்தித்து விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக, யாழ். நாகவிகாரை பீடாதிபதி வணக்கத்திற்குரிய விமல தேரரையும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துமாறு கோரி நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகனை நேரில் சந்திக்க முயற்சித்த போது அவர் பயணத்தில் இருந்த காரணத்தினால் தொலைபேசி ஊடாக குறித்த விடயங்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு. கோமகன், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் ஒன்றிணைந்த வகையில் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு பரிபூரண ஆதரவைத் தருவதாக கூறியிருந்தார் என்றார்.

இந்நிலையில், அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி ஏனைய தரப்புகளைத் தொடர்ந்தும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

Spread the love
 •   
 •   
 •   
 •   
 •  
 •  
 •  
 •  

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 • 1. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு செய்ய வேண்டிய பணிகள் என்ன?

  2. அவற்றில் விக்னேஸ்வரன், சேனாதிராசா, சிவஞானம், சோமசுந்தர தேசிகர், வேலன், ஞானப்பிரகாசம், ஜெபரணட்னம், மங்களராஜா, ரவிச்சந்திரன், விமல தேரர், திருமுருகன் மற்றும் ஏனையவர்களும் முடிக்க ஒப்புக்கொண்ட பணிகள் என்ன?

  3. பணிகளை எப்பொழுது அவர்கள் ஆரம்பிப்பார்கள் மற்றும் செய்து முடிப்பார்கள்?