சவூதி அரேபியா பெண்கள் உரிமை ஆர்வலர் லூஜெய்ன் அல்-ஹத்லூக்கு 5 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்ட உரிமை வேண்டும் என்பது உள்பட பல்வேறு உரிமைகளுக்காக போராடி வந்தவர் லூஜெய்ன் அல்-ஹத்லூ ஆவார். லூஜெய்ன் அல்-ஹத்லூக்கு காவற்துறையினர், மற்றும் அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட துயரங்களை கொடுத்ததாக மனித உரிமைக் குழுக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்,
சவூதி அரேபியா வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் லூஜெய்ன் அல்-ஹத்லூல் சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான உரிமை உள்பட பல்வேறு உரிமைகளுக்காக போராடி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு லூஜெய்ன் அல்-ஹத்லூல் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு ரியாத்தின் சகுற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட லூஜெய்ன் ஹத்லூலிக்கு 5 ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லூஜெய்ன் அல்-ஹத்லூல் இந்த தீர்ப்பை எதிர்த்து அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அவர் எந்தக் குற்றமும் செய்யாவிட்டால் அவர்து தண்டனையை இரண்டு ஆண்டுகள் மற்றும் பத்து மாதங்கள் குறைக்க முடியும்.
கடந்த 2018-ம் ஆண்டு சவூதி அரேபிய பெண்கள் வாகனம் ஓட்டலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை சவுதி நீதிமன்றம் வழங்கியது. லூஜெய்ன் அல்-ஹத்லூல் இந்த தீர்ப்புக்கு முன்பாகவே பெண்களுக்கு வாகனம் ஓட்ட உரிமை வேண்டும் என போராடி வந்தார். ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் லூஜெய்ன் அல்-ஹத்லூலை காவற்துறையினர் கைது செய்தனர்.
மனித உரிமை மீறல், சவுதி அரசியல் அமைப்பை மாற்ற முயன்றது மற்றும் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்ததாக லூஜெய்ன் அல்-ஹத்லூல் மீது தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சவுதி பத்திரிகைகள் சப்க் மற்றும் அல்-ஷார்க் அல்-அவ்சாத் செய்தி வெளியிட்டுள்ளது.
பெண்கள் உரிமை ஆர்வலர் லூஜெய்ன் அல்-ஹத்லூக்கு வழங்கப்பட்ட தண்டனை மனித உரிமை மீறல் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த தீர்ப்பும், தண்டனையும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பிடனுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோ பிடன் மற்றும் சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானின் உறவுக்கு இது மிகவும் சவாலாக விளங்கும் என கூறப்படுகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் காலே பிரவுன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ஹத்லூலின் தண்டனை குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.
சவூதி அரேபியாவில் பெண்களின் உரிமைகளை முன்னேற்றுவதால் சுதந்திரமான வெளிப்பாடு மற்றும் அமைதியான செயல்பாட்டின் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். 2021-ல் இதனை எதிர்பார்க்கிறோம். பிடன்-ஹாரிஸ் அரசு நிர்வாகம் மனித உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும் அவர்களுக்கு எதிராக நிற்கும்.” என்று தெரிவித்து உள்ளார்.
சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும், அங்கு ஆண் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பிரசாரம் செய்த லூஜெய்ன் அல்-ஹத்லூக்கு காவற்துறையினர், அதிகாரிகள் கரண்ட் ஷாக், தடியடி மற்றும் பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக மனித உரிமைக் குழுக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர், ஆனால் சவுதி அரேபிய அதிகாரிகள் இந்த குற்றசாட்டை மறுத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின்(ஐநா) மனித உரிமை வல்லுநர்கள் இந்த குற்றச்சாட்டுகள் மோசமானவை என்று கூறியுள்ளனர். ஐநா மனித உரிமை அலுவலகம் லூஜெய்ன் அல்-ஹத்லூக்கு வழங்கிய இந்த தண்டனை மிகவும் சிக்கலானது என்றும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தெரிவித்துளளது குறிப்பிடத்தக்கது.