Home இந்தியா இந்திய பீமா கொரேகான் வன்முறையும், தடுத்து வைக்கப்பட்டு இருக்கும், மனித உரிமைப் போராளிகளும்…

இந்திய பீமா கொரேகான் வன்முறையும், தடுத்து வைக்கப்பட்டு இருக்கும், மனித உரிமைப் போராளிகளும்…

by admin

பீமா – கொரேகான் வன்முறை வழக்கு: 16 பேர் கைது, 10 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை – விரிவான தகவல்

பீமா கொரேகான்

பீமா கொரேகானில் 2018 ஜனவரி 1 ஆம் திகதி வன்முறை மோதல்கள் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுதொடர்பாக சமூகப் போராளிகள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 16 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனந்த் டெல்டும்ப்டே, கௌதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் மற்றும் வேறு சிலரை காவல் துறையினரும், தேசியப் புலனாய்வு ஏஜென்சியினரும் கைது செய்துள்ளனர்.

நாட்டில் சமூக, அரசியல் வட்டாரத்தில் பீமா கொரேகான் வன்முறை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

2018 ஜனவரி 1 ஆம் தேதி, கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் மராட்டியர்களுக்கு இடையிலான போரின் 200வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி நடந்தபோது, பீமா கொரேகானில் வன்முறை வெடித்தது. வெற்றித் தூண் அருகே ஆயிரக்கணக்கான தலித்கள் கூடியிருந்தனர். ஆனால் கலவரம் மற்றும் கல்வீச்சில் பல வாகனங்கள் உடைக்கப்பட்டன. வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்திற்கு ஒரு நாள் முன்னதாக, 2017 டிசம்பர் 31 ஆம் திகதி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சனிவர் வடாவில் எல்கார் பரிஷத் நடத்தப்பட்டது. பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித், சோனி சோரி, பி.ஜி. கோல்சே பாட்டீல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் புனே காவல் துறையினர் விசாரித்த நிலையில், இந்த வழக்கை தேசியப் புலனாய்வு ஏஜென்சியிடம் (என்.ஐ.ஏ.) மத்திய அரசு ஒப்படைத்தது. ஒக்டோபர் இரண்டாவது வாரத்தில் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. சமர்ப்பித்துள்ளது.

இந்த வன்முறை தொடர்பாக புனே காவல் துறையினர் இரு வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 2018 ஜனவரி 2 ஆம் திகதி இந்துத்துவா தலைவர்கள் சம்பாஜி பிடே, மிலிந்த் எக்போட்டே ஆகியோருக்கு எதிராக, பிம்ப்ரி காவல் நிலையத்தில் ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

2018 ஜனவரி 8ம் தேதி எல்கார் பரிஷத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக துஷார் டேம்குடே என்பவர் ஒரு புகாரை அளித்தார். எல்கார் பரிஷத்தில் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் உரைகள் நிகழ்த்தப்பட்டதால் மறுநாள் வன்முறைகள் நடந்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சமூகப் போராளிகள், வழக்கறிஞர்கள், கவிஞர்கள் உள்ளிட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தபிறகு, துணை குற்றப் பத்திரிகையை 2019 பிப்ரவரி 21 ஆம் தேதி சமர்ப்பித்தனர்.

2018 மே 17 ஆம் தேதி உபா (UAPA) சட்டத்தின் 13, 16, 18, 18 B, 20, 39 மற்றும் 40 பிரிவுகளின் கீழ் புனே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. சார்பில், இந்திய குற்றவியல் சட்டத்தின் 153 A, 505 (1) (B), 117 மற்றும் 34 பிரிவுகள் மற்றும் உபா சட்டத்தின் 13, 16, 18, 18B, 20 மற்றும் 39வது பிரிவுகளின் கீழ் 2020 ஜனவரி 24 ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

மகாராஷ்டிராவையும், நாட்டையும் உலுக்கிய இந்தச் சம்பத்திற்குப் பிறகு, அதைத் தொடர்ந்து நாடு முழுக்க தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளுக்குப் பிறகு, அப்போதிருந்து பீமா கொரேகான் வழக்கில் என்ன திருப்பங்கள் நடந்துள்ளன?

என்.ஐ.ஏ. எந்த அளவுக்கு விசாரணையில் முன்னேற்றம் கண்டுள்ளது? எல்லா குற்றப் பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற நடைமுறைகள் பூர்த்தியாகிவிட்டனவா? பீமா கொரேகானில் நடந்த வன்முறைக்கு யார் காரணம்? குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் விசாரணை அமைப்புகள் வெற்றி கண்டுள்ளனவா? இந்த விவரங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் நாம் பார்ப்போம்.

என்.ஐ.ஏ. புலனாய்வு

பீமா கொரேகான்

பீமா- கொரேகான் வன்முறை தொடர்பான வழக்கு 2020 ஜனவரி 24 ஆம் திகதி தேசியப் புலனாய்வு ஏஜென்சியிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கப்பட்டது. என்.ஐ.ஏ. மும்பையில் புதிய முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டனர்.

ஏற்கெனவே இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய பிரிவுகள் தவிர, உபா சட்டத்தின் சில பிரிவுகளையும் என்.ஐ.ஏ. சேர்த்துக் கொண்டது. ஆனால், தேசதுரோகக் குற்றச்சாட்டு தொடர்பான 124 (A) பிரிவு அப்போது சேர்க்கப்படவில்லை.

2020 ஒக்டோபரில், 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்தது. கௌதம் நவ்லகா, ஆனந்த் டெல்டும்ப்டே, ஹனி பாபு, ரமேஷ் காய்ச்சர், ஜோதி ஜக்டப், ஸ்டான் சுவாமி, மிலிந்த் டெல்ட்டும்ப்டே மற்றும் எட்டு பேர் மீது இதில் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.

சமூகப் போராளி கௌதம் நவ்லகா, அறிஞர் ஆனந்த் டெல்ட்டும்ப்டே ஆகியோர் பெயர்களை 2018 ஆகஸ்ட் 22 ஆம் தேதி புனே காவல் துறையினர் இதில் சேர்த்தனர்.

நவ்லகா மற்றும் டெல்ட்டும்ப்டே ஜாமீன் மனுக்களை 2020 ஏப்ரல் 8 ஆம் திகதி நீதிமன்றம் நிராகரித்தது. இருவரும் என்.ஐ.ஏ. முன்பு ஆஜராயினர். 2020 ஏப்ரல் 14 ஆம் தேதி இருவரும் காவலில் வைக்கப்பட்டனர்.

83 வயதான சமூகப் போராளி பாதிரியார் ஸ்டான் சுவாமியை ஒக்டோபர் 2020-ல் ஜார்க்கண்ட்டில் என்.ஐ.ஏ. கைது செய்தது.

என்.ஐ.ஏ.வின் 10 ஆயிரம் பக்க குற்றப் பத்திரிகை

பீமா கொரேகான்

என்.ஐ.ஏ. தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் சமூகப் போராளி கௌதம் நவ்லகாவுக்கு, காஷ்மீரி தீவிரவாதிகள், பாகிஸ்தான் உளவு அமைப்புகள் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீரி அமெரிக்கன் கவுன்சிலில் உரையாற்ற 2010-11 காலத்தில் நவ்லகா மூன்று முறை அமெரிக்கா சென்றிருக்கிறார் என்றும், 2011-ல் குலாப் நபி ஃபாய் -என்பவரை எப்.பி.ஐ. பிரிவினர் கைது செய்தபோது அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு நவ்லகா கடிதம் எழுதியுள்ளார் என்றும் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த சிலருடன் நவ்லகாவுக்கு ஃபாய் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார் என்றும் குற்றப் பத்திரிகை கூறுகிறது.

நவ்லகாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் சாதனங்களை ஆய்வு செய்ததில், மாவோயிஸ்ட்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ. உடன் அவருக்குத் தொடர்புகள் இருப்பது நிரூபணம் ஆகியுள்ளது என்றும் என்.ஐ.ஏ. கூறியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஹனி பாபுவும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தன் மாணவர்களை மாவோயிஸ்ட் சித்தாந்தத்தின்பால் ஈர்ப்பதற்கு அவர் முயற்சித்தார் என்று என்.ஐ.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளது.

கே.சி.எம். ராணுவ விவகாரங்கள் (எம்.சி.) தகவல் மற்றும் விளம்பரப் பிரிவு செயலாளர் பாய்கோம்பா மெட்டேய் உடன் ஹனி பாபுவுக்குத் தொடர்பு இருந்ததாக என்.ஐ.ஏ. கூறியுள்ளது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) தொண்டருக்கு அவர் நிதி வசூல் செய்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஹனி பாபுவின் இமெயில்களை ஆய்வு செய்ததில், சர்ச்சைக்குரிய சில இமெயில்கள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் என்.ஐ.ஏ. குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கும் மாவோயிஸ்ட் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு நடக்க ஹனி பாபு ஏற்பாடு செய்தார் என்றும் என்.ஐ.ஏ. கூறியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் செயல்படும் தடை செய்யப்பட்ட புரட்சிகர ஜனநாயக முன்னணியுடன் இணைந்து ஹனி பாபு செயல்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோர்க்கே, காய்ச்சர், ஜக்டப் ஆகியோர் மாவோயிஸ்ட் பயிற்சி பெற்றவர்கள் என்றும், அவர்கள் கபீர் கலா மஞ்ச் அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பதாகவும் என்.ஐ.ஏ. குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பீமா கொரேகான் சாவுர்யா பிரேர்னா அபியான் ஒருங்கிணைப்பாளர்களில் ஆனந்த் டெல்ட்டும்ப்டேவும் ஒருவர் என்றும், 2017 டிசம்பர் 31 ஆம் தேதி சனிவர் வடா நிகழ்ச்சியில் அவரும் பங்கேற்றிருந்தார் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்கள்

பீமா கொரேகான்
படக்குறிப்பு,செயல்பாட்டாளர் கௌதம் நவ்லகா

கௌதம் நவ்லகா பிணை கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அதுகுறித்த தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பீமா கொரேகான் வன்முறை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள், சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப் படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன. 2020 டிசம்பரில், இந்த விஷயத்தில் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தலோஜா சிறை நிர்வாகத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. சிறையில் படிப்பதற்கான கண்ணாடி நவ்லகாவுக்கு மறுக்கப்பட்டுள்ளது. சிறையில் அவருடைய மூக்குக் கண்ணாடி திருடப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் அனுப்பிய புதிய கண்ணாடியை அவரிடம் தர சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதை நவ்லகாவின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். நவ்லகாவிற்கு 68 வயதாகிறது.

வரவர ராவ்

பீமா கொரேகான்
படக்குறிப்பு,வரவர ராவ்

மூத்த கவிஞர் மற்றும் அறிவுஜீவியான வரவர ராவ் இந்த வழக்கில் கைதாகி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். உடல்நிலை மோசமானதால் இப்போது அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

2020 டிசம்பர் 21 ஆம் தேதி அவரது பிணை மனுவை மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்தது. மருத்துவ காரணங்களின் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்குமாறு அவருடைய மனைவி ஹேமலதா ராவ் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம், நீதிமன்றம் தலையிட்ட பிறகு தான், வரவர ராவ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கல்லீரல் சிக்கல் தொடர்பாக அவர் துன்புற்று வருகிறார். சிறையில் அளிக்கப்படும் சிகிச்சை போதுமானதாக இல்லை என்று அவருடைய மனைவி கூறியுள்ளார். படிப்படியாக அவருடைய உடல்நிலை மோசம் அடைந்ததால், மருத்துவ காரணங்களின் அடிப்படையில் அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருடைய பிணை மனு மீதான அடுத்த விசாரணை 2021 ஜனவரி 7 ஆம் திகதி நடைபெறுகிறது.

இதற்கிடையில், வரவர ராவ் உடல்நிலை நன்றாக உள்ளதால் அவரை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. கூறியுள்ளது.

ஸ்டான் சுவாமி

பீமா கொரேகான்
படக்குறிப்பு,ஸ்டான் ஸ்வாமி

ஸ்டான் சுவாமியை ஒக்டோபர் முதலாவது வாரத்தில் என்.ஐ.ஏ. கைது செய்தது. நக்சலைட்களுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப் படுகிறது. பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருப்பவர்களில், அதிக வயதானவராக இவர் இருக்கிறார். தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் இவர் மறுக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு ஸ்டான் சுவாமிக்கு ஸ்ட்ரா தர மறுத்ததை அடுத்து சிறை நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

83 வயதான பாதிரியார் ஸ்டான் சுவாமி, பார்க்கின்சன் நோயால் அவதிப்பட்டு வருகிறார். கைகள் நடுங்கும் காரணத்தால் அவரால் கோப்பைகளை பிடிக்க முடியாது என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சமூக ஊடக பிரச்சாரம் நடைபெற்று, ஏராளமானவர்கள் தலோஜா சிறைக்கு ஸ்ட்ராக்களை அனுப்பினர். அவருக்கு ஸ்ட்ரா அளிக்க சிறை நிர்வாகம் ஒப்புக்கொண்டதை அடுத்து சுவாமியின் வழக்கறிஞர்கள் மீண்டும் நீதிமன்றம் சென்று தெரிவித்தனர்.

சுதா பரத்வாஜ்

பீமா கொரேகான்
படக்குறிப்பு,சுதா பரத்வாஜ்

சமூகப் போராளியான சுதா பரத்வாத், பைகுலாவில் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் தனக்குப் பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

சுதா பரத்வாஜ், கௌதம் நவல்கா, ஹனிபாபு ஆகியோருக்கு பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களைத் தர சிறை நிர்வாகம் மறுக்கிறது என்று அவர்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் சந்தனி சாவ்லா என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதுதொடர்பாக பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யுமாறு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதில் அடுத்த விசாரணை ஜனவரி 12 ஆம் தேதி நடைபெறுகிறது.

பிணை மனு 60 முறை விசாரணை

சுதா பரத்வாஜ் 2018 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் சார்பில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டு, 60 முறை விசாரணைக்கு வந்தபோதிலும், அது பரிசீலிக்கப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் நிஹல் சிங் ரத்தோட் தெரிவித்தார். 40 முறை, குற்றம்சாட்டப்பட்டவரை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்று ரத்தோட் கூறுகிறார்.

உரிய சமயத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாமல் போனதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை என்று காவல் துறையின் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

புனே காவற்துறை குற்றப் பத்திரிகை என்ன சொல்கிறது?

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் வசமிருந்து கைப்பற்றப்பட்ட ஹார்டு-டிஸ்க், பென்-டிரைவ்கள், மெமரி கார்டுகள், செல்போன்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்தக் குற்றப் பத்திரிகையை தயாரித்திருப்பதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

சுதீர் தாவலே, ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், ஷோமா சென், மகேஷ் ராவுத் ஆகியோருக்கு எதிரான குற்றப் பத்திரிகையில், `தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பினர், கபீர் கலா மஞ்ச் உறுப்பினரான சுதீர் தவாவலே உடன் ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங் மூலமாக தொடர்பில் இருந்தனர் என கூறப்பட்டுள்ளது. கபீர் கலா மஞ்ச் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு அவரை மாவோயிஸ்ட்கள் கேட்டுக் கொண்டனர். பீமா கொரேகான் போரின் இரு நூறாவது ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் தலித் அமைப்பினரை ஒன்று திரட்டி, அரசுக்கு எதிராக தூண்டிவிட வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சிக்கான பின்னணியாக இருந்தது’ என்று குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

தலைமறைவாக இருந்த மிலிந்த் டெல்ட்டும்ப்டே மற்றும் பிரகாஷ் என்கிற ரிதுபர்னா கோஸ்வாமி ஆகியோருடன் சேர்ந்து ரோனா வில்சன், சுதீர் தாவலே ஆகியோர் சதி செய்தார்கள் என்றும் காவல் துறை கூறியுள்ளது.

2017 டிசம்பர் 31 எல்கார் பரிஷத்தில் இவர்கள் உணர்வைத் தூண்டும் வகையில் கோஷங்கள் எழுப்பி, பாடல்கள் பாடி, தெரு நாடகங்கள் நடத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு, கடைசியில் வன்முறையாக வெடித்தது என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.

பீமா கொரேகான்

வரவர ராவ், சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சால்வஸ், அருண் பெரெய்ரா ஆகியோர் கைது செய்யப்பட்ட பிறகு, இந்த வழக்கில் துணை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ரோனா வில்சன் மற்றும் தலைமறைவாக இருந்த கிஷாந்தா என்கிற பிரசாந்த் போஸ் ஆகியோரின் உதவியுடன் ஆயுதங்கள் வாங்குவதற்கு வரவர ராவ் ஏற்பாடு செய்தார் என்று காவல் துறை குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட் அமைப்பில் வரவர ராவ் மூத்த உறுப்பினராக இருக்கிறார் என்றும், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் ராவ் தொடர்பில் இருந்தார் என்றும் காவல் துறை கூறியுள்ளது. ஆயுதங்கள் கொண்டு வருவது தொடர்பாக நேபாள மாவோயிஸ்ட் தலைவர் வசந்த் உடன் வரவர ராவ் தொடர்பில் இருந்தார் என்றும், குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு வரவர ராவ் பணம் அளித்துள்ளார் என்றும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்சால்வஸ் முன்னர் ஆயுத சட்டங்களின் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். மும்பையில் கலா சௌக்கி காவல் நிலையத்தில் அவர் மீது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு வழக்கில் அவர் தண்டனை அனுபவித்துள்ளார். கன்சால்வஸ் இப்போதும் மாவோயிஸ்ட் கட்சியின் தீவிர உறுப்பினராக இருக்கிறார் என காவல் துறை கூறுகிறது.

தடை செய்யப்பட்ட அமைப்பில் கௌதம் நவல்கா முக்கிய பங்கு வகிப்பதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆள் தேர்வு செய்தல், பணம் அளித்தல், திட்டமிடலில் அவருக்கு ஈடுபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. தேச துரோக செயல்கள்களிலும் அவருக்கு ஈடுபாடு இருப்பதாகக் காவல் துறை கூறுகிறது. நவல்காவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில், தீவிரவாதிகள் தலைமறைவாக இருந்து நாட்டுக்கு எதிராக செயல்பட ஊக்கம் தந்திருப்பது தெரிய வந்ததாகவும் காவல் துறை கூறியுள்ளது.

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் கொள்கைகளை ஆனந்த் டெல்ட்டும்ப்டே பிரச்சாரம் செய்து வந்தார் என்றும், மாவோயிஸ்ட் கட்சியிடம் இருந்து அவர் நிதி பெற்றார் என்றும் காவல் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

வழக்கு எப்படி என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது?

பீமா கொரேகான்

முந்தைய காவல் துறை நடவடிக்கைகளின் போது, மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சியில் இருந்தது. ஆனால், பல திருப்பங்களுக்குப் பிறகு 2019 சட்டசபை தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக வென்ற பாஜக ஆட்சியை இழக்க வேண்டியதாயிற்று. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஸ் கூட்டணி ஆட்சியை உருவாக்கின.

எல்கார் பரிஷத் வழக்கில் புனே காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பல சந்தேகங்கள் எழுவதாக 2019 டிசம்பர் 22 ஆம் திகதி செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார். “தேச துரோகக் குற்றச்சாட்டில் சமூகப் போராளிகளைக் கைது செய்வது சரியல்ல. எல்லா வகையான எண்ணங்களையும் வெளிப்படுத்தும் சுதந்திரம் ஜனநாயகத்தில் இருக்க வேண்டும்.

புனே காவல் துறையினரின் நடவடிக்கை தவறானது. பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத் தோன்றுகிறது. சில அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்” என்று பவார் கூறினார். இதனால் சர்ச்சை எழுந்தது. காவல் துறையினரின் நடவடிக்கை சரியானது என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

சில தினங்கள் கழித்து 2020 ஜனவரியில் இந்த வழக்கை புனே காவல் துறையிடம் இருந்து என்.ஐ.ஏ.வுக்கு மாற்றுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சருமான அனில் தேஷ்முக் இதை ஆட்சேபித்தார், இது அரசியல்சட்டத்திற்கு விரோதமானது என்று கூறினார்.

நீதி விசாரணை

அப்போது ஆட்சியில் இருந்த தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு, பீமா கொரேகான் வன்முறை தொடர்பாக விசாரிக்க 2 உறுப்பினர்களைக் கொண்ட நீதித்துறை ஆணையத்தை நியமித்தது. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜே.என். பட்டேல் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்தக் கமிஷன் நான்கு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், பல முறை பதவி நீட்டிப்புத் தந்த பிறகும், இன்னமும் இறுதி அறிக்கையை இந்தக் கமிஷன் சமர்ப்பிக்கவில்லை.

இந்துத்துவா ஆட்கள்

ஒருபுறம், பீமா கொரேகான் வன்முறையில் இடதுசாரி தீவிரவாதிகளுக்குப் பங்கு இருப்பதாக புனே காவல் துறை குற்றஞ்சாட்டுகிறது. 2018 ஜனவரி 1 ஆம் திகதி நடந்த வன்முறைகளின் பின்னணியில் இந்துத்வா தலைவர்களின் மாஸ்டர் பிளான்கள் இருக்கின்றன என்று புனே ஊரக காவல் பிரிவு குற்றஞ்சாட்டுகிறது.

அந்த வன்முறையில் தொடர்புடைய இந்துத்வா நபர்களை `பிடிக்காமல் விட்டுவிட’ அனுமதிக்கப்பட்டு, `தூய்மையானவர்கள் என கூறும்’ நிலை உருவாக்கப்பட்டது. அதேசமயத்தில் இடதுசாரிகள் நியாயமற்ற கடும் நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

சம்பாஜி பிடே மற்றும் மிலிந்த் எக்போடே ஆகியோருக்கு எதிராக பிம்ப்ரி காவல் நிலையத்தில் ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மிலிந்த் எக்போடேவை காவல் துறையினர் இரண்டு முறை காவலில் வைத்தனர். 2018 மார்ச் 14 ஆம் தேதி அவரை காவல் துறையினர் கைது செய்தது. சூறையாடுதல், அட்டூழியமான செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

புனே நீதிமன்றத்தில் 2018 ஏப்ரல் 4 ஆம் தேதி அனிதா சால்வே தாக்கல் செய்த புகார் தொடர்பான வழக்கில், எக்போடே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் வேறொரு வழக்கில் அவரை ஷிக்ரபூர் காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். சம்பவம் நடப்பதற்கு முன்னதாக அந்தப் பகுதியில் எக்போடே மற்றும் அவரது ஆதரவாளர்கள் சில துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர் என்று ஷிக்ரபூர் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 19 ஆம் தேதி புனே செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இன்னொரு நபரான சம்பாஜி பிடே கைது செய்யப்படவே இல்லை. ஆனால், 2018 ஜனவரி 1 ஆம் தேதி பீமா கொரேகானில் தங்கியிருந்து மக்களைத் தூண்டிவிட்டார் என்று அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன, இதுகுறித்து நீதிமன்றத்தையும் நாடியுள்ளன. ஆனால் அந்த வழக்கில் காவல் துறை இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

பீமா கொரேகானின் முக்கியத்துவம்

பீமா கொரேகான்

1818-ல் பேஷ்வாக்களால் தலைமையில் மராட்டியர்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனியாருக்கும் இடையில் நடந்த போர் காரணமாக பீமா கொரேகான் பெயர் பெற்றுள்ளது.

அந்தப் போரில் பேஷ்வா படையினரை வெல்ல பிரிட்டிஷ் படைகளுக்கு மஹர் வீரர்கள் உதவி புரிந்தனர். இறுதியில் மஹர் ரெஜிமென்ட் வீரர்களின் துணிச்சல் காரணமாக கிழக்கிந்திய கம்பெனி படைகள் பேஷ்வாக்களைத் தோற்கடித்தது.

மஹர் வீரர்களின் வீரத்தைப் பாராட்டி, வெற்றித் தூண் ஒன்று நிறுவப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் திகதி ஆயிரக்கணக்கானவர்கள், குறிப்பாக தலித் சமூகத்தவர்கள் அங்கு கூடி 1818 போரில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

அந்தப் போரில் உயிர்த் தியாகம் செய்தவர்களின் பெயர்கள் அந்தத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளன.

நன்றி – உள்ளடக்கம் – பிபிசி தமிழ்…

தலையங்கம் – குளோபல் தமிழ்ச் செய்திகள்…

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More