நோர்வே தலைநகர் ஒஸ்லோவுக்கு அருகே உள்ள Gjerdrum பிரதேச வாசிகளுக்குப் புத்தாண்டு பெரும் துயருடன் தொடங்கியிருக்கிறது. உறைபனிக்காலப்பகுதியில் அங்கு திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் டசின் கணக்கான வீடுகள் புதையுண்டுள்ளன.குழந்தைகள், வயோதிபர்கள் உட்பட பத்துக்கு மேற்பட்டோர் வீடுகளுடன் சேர்ந்து உறை கழியில் சிக்குண் டுள்ளனர் என அஞ்சப்படுகிறது.பலத்த காயமடைந்த பத்துப்பேர் ஒஸ்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
நோர்வேயில் புலம்பெயர்ந்து வசிக்கும் ஈழத் தமிழர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை. கடந்த புதன் இரவு நிகழ்ந்த இந்த இயற்கை அனர்த்தத்தில் காணாமற் போனவர்களைத் தேடும்பணியில் ஹெலிகள், ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்களது உதவியுடன் இராணுவத்தினர் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.
புதையுண்டவர்களை உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கை அருகி வருகிறது என இன்று வெள்ளிக்கிழமை வெளியாகிய செய்திகள் தெரிவிக் கின்றன.புதைகுழிப் பகுதியை நெருங்கி தேடுதல் களில் ஈடுபட முடியாத ஆபத்தான நிலைமை இருப்பதால் வான்வழி மீட்பு முயற்சியில் ஹெலிக்கொப்ரர்கள் வெப்ப வீச்சு ஸ்கானிங் மூலம் (heat-scanning technology)புதையுண்ட ஆட்களை அடையாளம்காண முயன்று வருகின் றன.
அனர்த்தம் நிகழ்ந்த Gjerdrum மாநகரசபைப் பகுதிக்கு விஜயம் செய்த நோர்வே பிரதமர் எர்னா சொல்பேர்க் (Erna Solberg) நாட்டில் நிகழ்ந்த மிக மோசமான நிலச்சரிவு இது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தலைநகர் ஒஸ்லோவுக்கு கிழக்கே 15 மைல்கள் தொலைவில் இந்த அனர்த்தம் நடந்த பகுதியில் இருந்து சுமார் ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.சுமை அதிகரிக்கும் போது புதைந்து உருகி விடக்கூடிய தன்மை உடைய தரைப் பிரதேசத்திலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. நோர்வேயின் நீர்வளம் மற்றும் எரிசக்தி மேலாண்மை நிறுவனத்தின் தகவலின்படி “விரைவு கழி” (Quick clay) எனப்படும் கழி மண் நிலத்தில் சுமார் 766 முழம் நீளமான பகுதி புதையுண்டு அங்கு பெரும் ஆழக் குழி ஏற்பட்டிருக்கிறது.
அருகே இருந்த வீடுகள் குழிக்குள் இடிந்து வீழ்ந்துள்ளன. நோர்வே மற்றும் சுவீடன் நாடுகளில் காணப்படும் துரித கழி (Quick clay) எனப்படும் மண் வகை பெரும் சரிவு ஏற்படும் போது உருகி நீராகிவிடும் தன்மை கொண்டது.—-
நன்றி – குமாரதாஸன். பாரிஸ்.01.01-2021 – FB