2020ஆம் ஆண்டு அரச தலைவர்கள், அமைச்சர்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது மக்கள் அதிகம் ஏமாற்றப்பட்ட ஆண்டாகவே காணப்படுவதோடு இதில் அதிகம் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்கள் தமிழ் மக்களாகவே காணப்படுகின்றனர்.
கிழக்கு மாகாண தொல்லியல் திணைக்களத்தின் செயலணி தனிச் சிங்களச் செயலணியாக நியமிக்கப்பட்டதனை சுட்டிக்காட்டியபோது தமிழர் ஒருவர் நியமிக்கப்படுவார் என ஓர் வெற்று வாக்குறுதியளிக்கப்பட்டது. இருப்பினும் அது ஆண்டு இறுதிவரை இடம்பெறவில்லை. ஏனெனில் தகுதியான தமிழர் இல்லையாம். ஆனால் நியமிக்கப்பட்ட சிங்களவர்கள் அனைவரும் தகுதியானவர்கள்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் 2020 ஆம் ஆண்டு மே மாதம் வீசிய அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிற்கு 51.6 இழப்பீடு வழங்கப்படும். அமைச்சரவை அனுமதி கிடைத்தது என்றனர் 2021ஆம் ஆண்டு மே மாதமாவது இழப்பீடு கிடைக்குமா என்கின்றனர் விவசாயிகள்.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி பூட்டப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இதோ டிசம்பர் 26ஆம் திகதி திறக்கப்படுகின்றது என வாய்ச் சவாடல் விட்டனர். அப்போதே கூறினோம் டிசம்பர் 26ஆம் திகதி திறக்கப்படவே மாட்டாது என அதுவே நியமாகியது. தற்போது ஜனவரி 26ஆம் திகதியேனும் திறக்குமா என தமிழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் ஆனால் பதிலளிப்பதற்குத்தான் யாரும் இல்லை.
அரிசி, சீனி, ரின்மீன், தேங்காய்,வெங்காயம் உள்ளிட்ட பொருட்களிற்கு அரச இதழ் மூலம் விலை குறைக்கப்பட்டது. அந்த விலையை பேப்பரிலேயே ஏழை மக்கள் பார்த்தனர் நியத்தில் கான முடியவில்லை. இந்த லட்சணத்தில் தேங்காய் பிடிக்க கம்பி வலயம் தயாரித்தனர்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் இருந்து மீட்போம் என்று தேர்தல் காலத்தில் முழங்கிய அரசு தற்போது கொழும்பு துறைமுகத்திலும் ஒரு பகுதியை இழக்கப் போகின்றது. இது தலப்பாகை எடுக்க கட்டியிருந்த கோவணமும் பறிபோகும் செயலிற்கு ஒப்பானது.
ஜனாதிபதி பதவி ஏற்று ஒரு ஆண்டு நிறைவு பெற்றபோதும் வடக்கு கிழக்கு மாகாணத்தை எட்டியும் பார்க்கவில்லை. இதன் மூலம் வாக்களிக்காத மக்களை மாற்றான்தாய் பிள்ளை என்பதனை நிரூபிக்கின்றார்.
200 ரூபா விற்பனை செய்த மஞ்சள் இலங்கையின் வரலாற்றில் 5 ஆயிரம் விற்ற ஆண்டாகவும் உழுந்து ஆயிரத்து ஐநூறு ரூபாவாக விற்பனை செய்த ஆண்டாகவும் சரித்திரத்தில் இடம்பெற்றது.
சிவில் நிர்வாகத்தில் அதிகமாக ஓய்வு பெற்ற இராணுவத் தளபதிகள் நியமிக்கப்பட்ட ஆண்டாக காணப்பட்ட ஓர் ஆண்டு எனில் அது 2020 ஆம் ஆண்டாகவே கருத முடியும்.
2020 பெப்ரவரியில் இந்தியாவின் கைதராபாத்தில் இந்தியப் பிரதமரின் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் நிறைவில் வடக்கு மீனவர்களின் பிரச்சணையை உடன் தீர்ப்பேன் என்றார் இலங்கை பிரதமர். இதற்கு பொருத்தமாக தமிழர் ஒருவரையும் அமைச்சராக நியமித்தும் இன்றுவரை எந்த தீர்வும் இல்லை . டிசம்பர் 30ம் திகதி பேச்சு வார்தை என்றனர். இறுதியாக அதிகாரிகள் கணணியில் முகம்பார்த்தமையே மிச்சம். இலங்கையின் இறையாண்மை தொடர்பில் பேசும் அரசு வாய்மூடியுள்ளது. வடக்கு மாகாணத்திற்குள் இந்திய மீனவர்கள் ஊடுருவுவதை கை கட்டி வேடிக்கை பார்க்கும் அரசு நீர்கொழும்பு அல்லது அம்பாந்தோட்டை கடலிற்குள் ஊடுருவியிருந்தால் இவ்வாறு வேடிக்கை பார்க்குமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
2020 ஆம் ஆண்டில் தற்போதைய அரசினால் தேர்தலிற்காக வந்த சப்ரிகமவைத் தவிர எந்த திட்டமும் தற்போதைய அரசின் திட்டம் கிடையாது . அமைச்சர்கள் திறக்கும் அலுவலகங்கள் முதல் ஐ றோட் வரை எத்தனையோ ஆண்டிற்கு முற்பட்வை. இருப்பினும் ஆளும் அரசு என்ற வகையில் திறப்புவிழாக்கள் மட்டும் இடம்பெற்றது.
இலங்கையில் இருந்து வெளிநாடுகளிற்கு பயணிக்கும் பயணி ஒருவருக்கு விமான நிலைய கட்டணமாக 50 டொலர் அறவிடுகின்றபோதும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணியிடம் 100 டொலர் அறவிடுவதனாலேயே யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியா பயணிக்கும் விமானச் சிட்டை அதிகரித்த பெறுமதியில் உள்ளது. இதனையும் 50 டொலர் அல்லது 3 ஆண்டுகளிற்கு முழுமையான விலக்கு அளிக்குமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையம் முழுமையாக மூடப்பட்ட அதேநேரம் கட்டுநாயக்கா, மத்தள, இரத்மலானை ஆகிய விமான நிலையங்களிற்கு 2020-12-26 முதல் முழுமையான வரி வலக்கு அளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியின்போது யாழ்ப்பாணம் மறக்கப்பட்டு விட்டது.
ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் போரால் பாதித்த வடக்கு கிழக்கிற்கு விசேட சலுகை என்றனர். அதன்பின்பு ஒரு கிராம சேவகர் பிரிவிற்கு தலா 10 நியமனம் என்றனர். வடக்கின் 5 மாவட்டத்தில் இரு பிரதேச செயலாளர் பிரிவில் மட்டுமே அந்த விதிமுறை கடைப்பிடிக்கப்படுகின்றது. ஏனெனில் அந்த இரு பிரதேச செயலாளர் பிரிவும் தனியே சிங்கள மக்கள் வாழ்கின்றனர் என்பதனால். இதேநேரம் தேர்தல் நோக்கத்திற்காக பணியில் இருந்த அதிகாரிகள் தூக்கி எறியப்பட்டும் இரவோடு இரவாக இடம் மாற்றப்பட்ட ஆண்டாகவும் காணப்பட்டது.
இவ்வாறு மக்கள் வஞ்சிக்கப்பட்ட ஆண்டாக 2020ஆம் ஆண்டு கடந்து செல்கையில் 2021 ஆம் ஆண்டு வஞ்சனைக்கு தீர்வாக அமையுமா அல்லது வஞ்சணையின் பட்டியல் நீளுமா என்பதே கேள்விக்குறியாகவுள்ளது.
1 comment
சில நாடுகள் இனவெறியர்களால் ஆட்சி செய்யப்படுகின்றது. இவர்கள் குறிப்பிட்ட குடிமக்களை ஏமாற்றி, அடக்கி அழிக்கின்றார்கள்.
இத்துடன் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பை மிகவும் பலவீனமாக்கி சர்வதேச சட்டங்களை மீறி மற்றவர்களையும் பாதுகாப்பு அற்றவர்களாக மாற்றுகின்றார்கள்.
இப்படிப்பட்ட இனவாத அரசுகளை தோல்வியுற்ற மற்றும் கள்ள அரசுகள் என்று அழைக்க முடியும். இதை மாற்றி அமைக்க அணைத்து குடிமக்களையும் சமமாக நடத்தக்கூடிய மற்றும் சர்வதேச சட்டங்களை மதிக்கின்ற தலைவர்கள் உருவாகி நாட்டை ஆட்சி செய்ய வேண்டும்.