புத்தாண்டுடன் பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு நேற்று முதலாவது ஈரோஸ்ரார் (Eurostar) ரயில் லண்டனில் இருந்து பாரிஸ் வந்தடைந்தது.நேற்றுப் பகல் 12.49 மணிக்கு பாரிஸ் கார்-து-நோட் (Gare du Nord) ரயில் நிலையத்தில் லண்டன் பயணிகளுக் கான மேடையை வந்தடைந்த ஈரோஸ்ரார் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளுக்கு அங்கு வழமைக்கு மாறான, ஆச்சரியமான பரிசோதனைகள் காத்திருந்தன.
சுங்க அதிகாரிகளையும் அவர்களது சோதனைகளையும் பயணிகள் அங்கு எதிர்கொள்ள நேரிட்டது. மதுவகைகள் மற்றும் சிகரெட் புகையிலைப் பொருள்கள் சோதனையிடப்பட்டன.
300 ஈரோக்களுக்கும் அதிக பெறுமதியான பொருள்களை தமது பொதிகளில் எடுத்துவந்த பயணிகளிடம் அவற்றுக்கான ஆவணங்கள் பரிசோதிக் கப்பட்டன.பழக்கத்தில் இல்லாத இந்தப் புதிய சோதனைகள்(customs checks) பயணிகளுக்கு ஆச்சரியம் அளித்தன. எனினும் தாமதங்கள் ஏதும் இன்றி விரைவாக சோதனைகள் நடத்தப்பட்டன.
பிரிட்டனில் இருந்து வரும் பயணிகள் இறைச்சி, பால் மற்றும் பாற் பொருள்கள் போன்றவற்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைக்குள் எடுத்துவருவது தடைசெய்யப்பட் டுள்ளது. பூக்கள், மரக்கறி, பழங்கள், மரக்கன்றுகள் போன்றன உயிரியல் (phytosanitary) பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படும் புதிய சோதனை நடைமுறைகள் தொடர்பாகச் சுங்கப் பணியாளர்கள் பயணிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
நேற்று (01.01.21) பாரிஸில் இருந்து லண்டன் சென்றடைந்த பயணிகளும் அங்கு இது போன்ற புதிய நடைமுறைகளைக் கடந்து செல்ல நேர்ந்தது எனத் தெரிவிக்கப்படு கிறது.பிரிட்டனில் இருந்து கால்வாயை (Channel Tunnel) தாண்டி வந்த வாகனங்களும் கலே (Calais) பகுதியில் நேற்று சுங்கப் பரிசோதனைகளைச் சந்தித்த பிறகே வெளியேற முடிந்தது. 47 ஆண்டுகால உறவுக்குப் பின்னர் ஜரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் உத்தியோகபூர்வமாக விலகியிருப்பதை அடுத்து இருநாடுகளுக்கும் இடையே இருந்துவந்த கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திரமான பயணிகள் மற்றும் பொருள் போக்குவரத்துகள் முடிவுக்கு வந்துள்ளன.
நன்றி – குமாரதாஸன். பாரிஸ்.02-01-2021 – FB