Home உலகம் பிரிட்டனுடனான கல்விப் பரிமாற்றம் முடிவுக்கு வருகிறது – பிரான்ஸ் மாணவர்களுக்கு இனி வீஸா!

பிரிட்டனுடனான கல்விப் பரிமாற்றம் முடிவுக்கு வருகிறது – பிரான்ஸ் மாணவர்களுக்கு இனி வீஸா!

by admin

ஐரோப்பிய ஒன்றிய மாணவர்களுக்கு குறிப்பாக பிரான்ஸின் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் “பிரெக்ஸிட்” பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஐரோப்பாவுடன் பிரிட்டனின் இணைப்பு முற்றாகத் துண்டிக்கப்படுவதால் எராஸ்மஸ் எனப்படும் (The Erasmus Programme) மாணவர் உயர்கல்விப் பரிமாற்ற உடன்பாட்டில் இருந்து பிரிட்டன் விலக்கிவிட்டது.”எராஸ்மஸ்” பல்கலைக்கழக மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் வருடாந்தம் சுமார் 32ஆயிரம் ஐரோப்பிய மாணவர்கள் பிரிட்டனில் வீஸா இன்றித் தற்காலிகமாகத் தங்கியிருந்து கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் பயிற்சி பெற முடிந்தது.

இந்த திட்டம் பிரான்ஸின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பெரும் நன்மை அளித்து வந்தது.

இனிமேல் பிரான்ஸ் மாணவர்கள் பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து உள்ளகப் பயிற்சி போன்றவற்றில் ஈடுபடவேண்டுமாயின் கட்டணங்களுடன் கூடிய மாணவர் வீஸா பெற்றுக்கொள்ளவேண்டி இருக்கும்.

டிசெம்பர் 31, 2020 திகதிக்கு முன்னர் பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றுடன் இணைந்துள்ள மாணவர்கள் தொடர்ந்தும் அங்கு தங்கி இருந்து தமது பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். “settlement scheme for EU citizens”என்னும் தற்காலிக நிலைமாறுகாலத் திட்டத்தின் கீழ் இதனை பிரிட்டிஷ் அரசு அனுமதித்திருக்கிறது.

ஜனவரி 1, 2021 திகதிக்குப் பின்னர் பல்கலைக்கழகப் பயிற்சிகளுக்காக பிரிட்டனுக்கு செல்லும் மாணவர்கள் ஆறுமாத காலத்துக்கு 390 ஈரோக்கள் செலுத்தி வீஸா பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கும்.

வதிவிடக் கட்டணம் , சுகாதாரக் காப்பீடு, ஆங்கில மொழி அறிவு என வேறு சில கட்டுப்பாடுகளும் இனிமேல் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

1987 இல் ஆரம்பிக்கப்பட்ட “EUropean Community Action Scheme for the Mobility of University Students” என்னும் “ஏராஸ்மஸ்” மாணவர் பரிமாற்றத் திட்டம் நீக்கப்படுவதால் ஜரோப்பாவில் கல்வி பயிலும் பிரிட்டிஷ் மாணவர்களும் இனிமேல் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கவேண்டி இருக்கும்.

குமாரதாஸன். பாரிஸ்.03-01-2021 – FB

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More