யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாயிலில் நேற்று முதல் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மாணவர்களுக்கு நீராகாரம் கொடுத்து உணவு தவிர்ப்பை முடித்து வைத்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் 08 ஆம் திகதி கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகப் பேரவையினால் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து, நேற்று 04 ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் தண்டணை வழங்கப்பட்ட மாணவர்கள் தம்மைத் தண்டணைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.
மாணவர்களின் போராட்டத்தை அடுத்து, நேற்று மாலை (04.01.21) பல்கலைக்கழகத் துணைவேந்தர் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, மனிதாபிமான அடிப்படையில் மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக விலக்கிக் கொள்வதாக அறிவித்ததோடு, நேற்று பின்னிரவில் மாணவர்கள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த இடத்துக்கு நேரடியாகச் சென்று தனது நிலைப்பாட்டை விளங்கப்படுத்தியிருந்தார்.
எனினும், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளில் இருந்து தாம் நிபந்தனையற்ற முறையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் இன்று மாலை வரை தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இந்த நிலையில் இன்று மாணவர்கள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த இடத்துக்குச் சென்ற துணைவேந்தர் உணவு தவிர்ப்பை கைவிடுமாறு மாணவர்களிடம் விநயமாகக் கேட்டுக் கொண்டார்.
மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் உள்நுழைவுத் தடையை நீக்கும் அதிகாரம் தனக்குண்டு என்பதையும், மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் வந்து தமது வழமையான செயற்பாடுகளின் மூலம், அந்தந்தத் துறைத் தலைவர்கள் மற்றும் பீடத்தின் விரிவுரையாளர்களின் நல்லெண்ணத்தை வெல்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும், வைத்தியர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மாணவர்கள் தொடர்ந்தும் உணவு தவிர்ப்பில் ஈடுபடுவது ஆரோக்கியமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், மாணவர்கள் உணவு தவிர்ப்பை கைவிட்டு, தன்னால் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தைத் திறவு கோலாகப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து, போராட்டத்தைக் கைவிடுவதற்கு மாணவர்களும் முன் வந்தனர். பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர், மாணவர் நலச் சேவை உதவிப் பதிவாளர், மாணவ ஒழுக்காற்று அதிகாரி மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் துணைவேந்தர் மாணவர்களுக்குப் பால் வழங்கி உணவு தவிர்ப்பை நிறைவுக்குக் கொண்டு வந்தார்.