இரு வார பதவிக்காலம் முடிவதற்குள் குற்றப் பிரேரணை மூலம் ட்ரம்பைபதவி நீக்க வோஷிங்டனில் முயற்சி?பதவிக்காலம் முடிவடைய இன்னமும் இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்பை அதிகாரத்துக்கு அருகதை அற்றவர் என அறிவித்து அவரைப் பதவியில் இருந்து அகற்ற முயற்சிகள் முன்னெடுக்கப் படுகின்றன.
அமெரிக்காவின் சில முக்கிய ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டிருக்கின்றன.பதவியில் இருந்துகொண்டே நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிராக ஒரு சதிப் புரட்சிக்கு தனது ஆதரவாளர்களைத் தூண்டியதன் மூலம் அதிபர் ட்ரம்ப் நாட்டை நிர்வகிக்கும் தகுதியை இழந்துவிட்டார் என்று அமெரிக்கப் பிரமுகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2020 தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதற்கும் அது தொடர்பான தொடர் நடவடிக்கைகளைக் கையாள்வதற்கும் இயலாத மனநிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்த லாக உள்ள அவரைப் பதவி நீக்கவேண்டும் என்ற கருத்தை சில அமெரிக்கப் பத்திரிகைகளும் ஊடகங்களும் வெளியிட்டிருக்கின்றன.
அமெரிக்காவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான காங்கிரஸ் கட்டடத்தில் நேற்று நிகழ்ந்த வன்முறைக் கலகங்களுக்கு அதிபர் ட்ரம்ப் தனது ஆதரவாளர்களைத் தூண்டும் விதமாக வெளியிட்ட கருத்துக்களே காரணம் என்று பகிரங்கக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் ட்ரம்ப் தனது கடமைகளை ஆற்றுவதற்குத் தகுதியற்றவர் (unfit) எனத் தெரிவித்து குற்ற விசாரணைப் பிரேரணை (impeachment) ஒன்றைக் கொண்டுவந்து அவரைப் பதவி நீக்குவதற்காக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் நீதி விவகாரக் குழுவில் இடம்பெறும் குடியரசுக் கட்சிப் பிரதிநிதிகள் துணை அதிபர் மைக் பென்ஸை (Mike Pence) தொடர்பு கொண்டுள்ளனர்.
அமெரிக்க அரசமைப்பின் 25 ஆவது திருத்தத்தின்படி அமைச்சரவையின் பெரும்பான்மையுடன் துணை ஜனாதிபதி ஒருவர் அதிபரை நாட்டை ஆள்வதற்கு தகுதியற்றவர் என அறிவிக்க முடியும்.
(25th Amendment to the U.S. Constitution, which allows the vice president and a cabinet majority to declare the president “unfit” to hold office). ஆனால் அரசமைப்பின் படியான இத்தகைய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்பதால் ட்ரம்ப்பின் மிகக் குறுகிய பதவிக்காலத்துக்குள் அது சாத்தியம் அல்ல என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். .காங்கிரஸ் கட்டடத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறைகளில் முன்னாள் படை வீரரான பெண் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.52 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குமாரதாஸன். பாரிஸ்.07-01-2021