Home இலங்கை இந்த அரசாங்கம் எல்லா இலங்கையர்களுக்குமானதல்ல என்பது நிரூபிக்கப்பட்டுகிறது…

இந்த அரசாங்கம் எல்லா இலங்கையர்களுக்குமானதல்ல என்பது நிரூபிக்கப்பட்டுகிறது…

by admin

இந்த அரசாங்கம் எல்லா இலங்கை மக்களுக்குமான அரசாங்கம் அல்ல என்பதை சொல்லிலும் செயலிலும் நிரூபித்து வருகின்றது என யாழ் மாவட்டம் நாடளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் நாட்டின் தற்போதைய நிலை சம்பந்தமான விவாதம்  தொடா்பில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போது தொிவித்துள்ளாா்.

தங்களுக்கு வாக்களித்த பௌத்த சிங்கள மக்களின்
விருப்பங்களுக்கு அமைவாகவே செயற்படமுடியும் என்று ஜனாதிபதி மற்றும் அரசாங்க உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கூறிவருகின்றனர்.


யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட எட்டு தமிழர்களை படுகொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்னாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மன்னிப்பு அளித்து கடந்த வருடம் மார்ச் 26ந் திகதி அன்று
விடுதலை செய்துள்ளார்.

அதுவும் எந்தவித யுத்தமும் இடம் பெறாத இடத்தில் அவர் இந்தப்
படுகொலையைச் செய்திருந்தார். குறிப்பாக சட்டம் ,ஒழுங்கு ,பாதுகாப்பு துறைகளில் வேலை செய்பவர்கள் தவறிழைத்தால்
அவர்களுக்கான தண்டனையைக் கடுமையாக நடைமுறைப் படுத்துவதே வழமையான நடைமுறையாகும். ஆனால் இங்கு
தமிழர்களைப் படுகொலை செய்பவர்களுக்கே பதவி உயர்வுகளும் ,பதக்கங்களும் , மன்னிப்புக்களும்
வழங்கி ஊக்கிவிக்கப்படுகின்றனர்.

இத்தகைய காரணங்களினால்த் தான் கடந்த காலங்களில் எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஒரே நாடு, ஒரே சட்டம் என அரசாங்கத்தின் எல்லா
உறுப்பினர்களும் கூறிவருகின்றனர். ஆனால் நடைமுறையில் எமக்கென வேறு சட்டம் நீதிக்கு முரணான வகையில் பின்பற்றப்படுகின்றது. இதுதான் யதார்த்தம்.

உங்களைப் பொறுத்தவரையில் நாம் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆகவே எமக்கான நீதியை நாம் தான் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக பெற்றுக் கொள்ளவேண்டும்.
எமது இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் நியாயமானது என்பதை இன்று சர்வதேச ரீதியாகஅரசாங்கத்தின் செயற்பாடுகளே நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளன.


நாம் இலங்கையர்களாக முன்னோக்கி செல்லப் போகின்றோமா அல்லது தொடர்ந்தும் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இனங்களாகப் பிரிந்து பின்னோக்கிச் செல்லப்
போகின்றோமா என்பதை ஆட்சியாளர்களே தீர்மானிக்க வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களும் இந்த நாட்டில் உரிய அதிகாரப் பகிர்வைப் பெற்று சமத்துவத்துடன் வாழ வேண்டும்
என்று துணிச்சலுடன் குரல் கொடுக்கும் சிங்கள சகோதர சகோதரிமார் , சிங்கள புத்திஜீவிகள் ,
பௌத்த மதகுருமார் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எனது நன்றிகளை நான் இங்கு கூறி
வைக்கின்றேன்.
தமிழ் அரசியல் கைதிகள் மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதற்கு
பல காரணங்கள் உண்டு –

  1. ஏற்கனவே நாட்டின் அரசாங்கத்தை மாற்றப் போர் புரிந்த ஜே.வீ.பீ யினர் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கியாகிவிட்டது. எமது இளைஞர்கள் தமது உரிமைகளுக்காகவே
    போரிட்டவர்கள். அரசாங்கத்தை மாற்ற அல்ல. ஆகவே அவர்களை விடுவிக்க வேண்டும்.
  2. போரில் தலைமைத்துவம் வகித்தரூபவ் ஆணைகள் இட்ட தமிழ் இயக்க முக்கியஸ்தர்கள் பலர்
    அரசாங்கத்தால் மிக்க நெருக்கத்துடன் அணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால் சாதாரண
    இயக்க அங்கத்தவர்கள் மிகக் கொடூரமாக நடத்தப்பட்டு பல காலமாக சிறையில்
    அடைக்கப்பட்டுள்ளனர். ஏன் என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
  3. கொரோனா தொற்றினால் அவஸ்தைப்படும் தமிழ் சிறைக் கைதிகளைத் தொடர்ந்து
    தென்னாட்டுச் சிறைகளில் வைத்திருப்பது அவர்களுக்கு பல பிரச்சனைகளைத் தந்து வருகின்றது.
    அவர்களை விசேடமாக வட கிழக்கு மாகாணங்களில் வைத்துத் தனிமைப்படுத்தினால் தாங்கள்
    பாதுகாப்பான இடங்களில் இருப்பதாகவாவது அவர்கள் உணர்வார்கள். பல தடவைகள் தமிழ்ச்
    சிறைக் கைதிகளை எங்கள் தென்னகச்சிறைகளில் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை
    உங்கள் எல்லோருக்கும் நினைவிருக்கும்.
  4. போர் முடிவிற்கு வர முன்னர் கைது செய்யப்பட்டு சிறைப்பட்டவர்களை போர் முடிந்து
    பத்து வருடங்களுக்கு மேல் ஆன படியால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதில்
    என்ன பிழை இருக்கின்றது?
  5. இந்தத் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது
    செய்யப்பட்டவர்கள். பயங்கரவாதத் தடைச்சட்டம் பொதுவான எமது சட்டக் கொள்கைகளுக்கு முரணான
    சட்டம். குற்றஏற்பு வாக்குமூலத்தின் அடிப்படையில் சான்றுகள்ரூபவ் சாட்சிகள்
    ஏதுமின்றியே தண்டனை வழங்கப்பட்டவர்கள் அவர்கள். உச்ச நீதிமன்றத்தில் நான்
    அளித்த நாகமணி வழக்கின் சாராம்சத்தை விளங்கிக் கொண்டு குற்ற ஏற்பு வாக்குமூலத்துக்கு மேலதிகமாக சொல்லப்பட்ட குற்றம் உண்மையில் நடந்தது என்பதை உறுதிப்படுத்த
    சாட்சியங்கள் பெறப்பட்டிருந்தால் பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பன. குற்றம் உண்மையில் புரியபட்டதா என்று அறியாமல் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை மட்டும் வைத்து தண்டனை வழங்குவது எவ்வாறு நியாயமாகும் என்பதை எமது ஜனாதிபதியும் அரசாங்க மேல் மட்டமும் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.
  6. பௌத்த நாடு என்று தம்பட்டம் அளிக்கும் இந் நாடு பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற
    சட்டக் கொள்கைகளுக்கு எதிரான சட்டத்தின் அடிப்படையில் அரசியல் காரணங்களுக்காக சிறைக்கைதிகளை தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பதை சரியா பிழையா ,நீதியா
    அநீதியா என்று பரிசீலித்துப் பார்க்க வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டம் அல்லாது நாட்டின் வழமையான சட்டத்தின் கீழ் தமிழ்ச் சிறைக் கைதிகளுக்கு எதிரான வழக்குகள்
    பதியப்பட்டிருந்தால் அத்தனை பேரும் தகுந்த சாட்சியங்கள் இல்லாததால் எப்போதோ விடுதலை செய்யப்பட்டிருப்பர். ஆகவே தமிழ் அரசியற் கைதிகளை உடனே மன்னித்து விடுதலை
    செய்ய வேண்டும் என்று கேட்டு என் பேச்சை முடித்துக் கொள்கின்றேன் எனத் தொிவித்துள்ளாா். #யாழ்_மாவட்டம் #விக்னேஸ்வரன் #பௌத்த_சிங்கள_மக்களின் #மிருசுவில்_படுகொலை #சுனில்ரத்னாயக்க

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More