லண்டனில் வைரஸ் தொற்று நிலைவரம் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக அறிவித் திருக்கும் நகரத்தின் மேயர் சாதீக் கான், (Sadiq Khan) அங்கு மருத்துவ சேவை களின் சீர்குலைவைக் குறிக்கும் “மேஜர் இன்ஸிடன்ற்” (‘Major incident’) நிலைவரத் தைப் பிரகடனம் செய்துள்ளார்.
“விரைந்து அவசர நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மருத்துவமனைகள் நிரம்பிப் பெருகிப் பெரும் ஸ்தம்பிதமும் மரணங்களும் நிகழலாம்” என்றும் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sussex மற்றும் Surrey பகுதி மருத்துவ சேவைகளது நிலவரங்களை வைத்தே இந்த “மேஜர் இன்ஸிடன்ற்” பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. சில பகுதிகளில் ஒரு லட்சத்துக்கு ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் தொற்று உச்ச நிலையில் உள்ளதாக எச்சரிக்கப் பட்டுள்ளது.
அவசர நிலைமையை முகாமை செய்யும் குழுக்களை விரைந்து சேவைக்கு அழைக்கவேண்டிய கட்டாயத்தை அல்லது ஒர் அனர்த்த முகாமைத்துவத் தின் அவசிய நிலைமையை ‘Major incident’ குறிக்கிறது.
மனித உயிர்கள், அத்தியாவசிய சேவைகள், சுற்றுச் சூழல், தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு கடும் பாதிப்பு, சேதம், தீங்கு, இடையூறு என்பன ஏற்படும் சமயங்களிலேயே இவ்வாறு அரிதாக “மேஜர் இன்ஸிடன்ற்”(‘Major incident’) நிலைமை பிரகடனப்படுத்தப் படுகிறது.
லண்டன் வாசிகளில் முப்பது பேரில் ஒருவர் என்ற கணக்கில் வைரஸ் தொற்றுப் பரவலடைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 7ஆயிரத்து 34 பேர் நேற்றுவரை லண்டன் மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரலில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவத் தொடங்கிய காலத்துடன் ஒப்பிட்டால் இது 34 வீதம் உயர்ந்த எண்ணிக்கை ஆகும். தற்சமயம் நாளாந்தம் 800 பேர்வரை மருத்துவ மனைகளுக்கு கொண்டுவரப்படுவதால் படுக்கைகள் நிரம்பி பெரும் இடப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
இதேவேளை – பிரித்தானியா எங்கும் ஒரு நாள் உச்ச எண்ணிக்கையாக இன்று 68 ஆயிரத்து 53 தொற்றுக்கள் பதிவாகி இருக்கின்றன. ஓரிரு நாட்களில் ஆயிரத்து 325 மரணங்களும் பதிவாகி இருப்பது மருத்துவ வட்டாரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
குமாரதாஸன். பாரிஸ்.
08-01-2021