நாடாளுமன்றத்திலுள்ள அரசாங்க முதற்கோலாசான் அலுவலகம், உறுப்பினர்களுக்கான சேவை அலுவலகம் என்பன நேற்று முன்தினம் (13) முதல் மூடப்பட்டுள்ளன.
பிரதமரின் மேலதிக செயலாளரும் ஆளும் கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளரின் செயலாளரும் சட்டத்தரணியுமான சமிந்த குலரத்னவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
.
இதனைத் தொடா்ந்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நேற்று முன்தினம் (13) நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் நடைபெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் 18ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொற்றுக்குள்ளான பிரதமரின் மேலதிக செயலாளர், சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் நாடாளுமன்றம் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கட்டாயம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு குறித்த வாரத்தின் ஏனைய அமர்வுகள் தொடர்பில், ஆலோசிக்கப்பட்டு, இறுதித் தீர்மானம் எட்டப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. #நாடாளுமன்றத்தின் #முடக்கம் #கொரோனா
.