இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் கடலில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து இந்த விவகாரம் குறித்து தனது கடும் எதிர்ப்பையும், அதிருப்தியையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிவு செய்துள்ளது.
இந்த சூழலில் 4 தமிழக மீனவர்கள் கடலில் மூழ்கடிகப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த இரண்டு குழுவை இலங்கை அரசு நியமித்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச ஒரு குழுவையும், இலங்கை கடற்தொழில் அமைச்சகம் ஒரு குழுவையும் நியமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டணத்தை சேர்ந்த ஆரோக்கிய சேசு என்பவரின் படக்கில் 4 மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் அவர்கள் கடந்த 4 நாட்களாக காணாமல் போனதால் தீவிர தேடுதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டனர்.
மீனவர்கள் படகில் இலங்கைக் கடற்படை தமது கடற்கலத்தை மோதச்செய்து இந்த விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் பகுதி மீனவர்களும் மீனவ சங்கப் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்களை உடற்கூராய்வு செய்து அனுப்புவதற்கு திட்டமிட்ட இலங்கை பின்னர் உடற்கூராய்வு செய்யாமலேயே அனுப்புவதற்கு இசைவு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மீனவர்களின் உடல்களை தமிழகத்தில் உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்பது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வைக்கும் கோரிக்கையாக உள்ளது.