போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடான வேதா இல்லத்தினை நினைவு இல்லமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளாா்ர்.
வேதா இல்லத்தில் கடந்த 44 ஆண்டுகளாக வசித்து வந்திருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5ம்திகதி உயிாிழந்திருந்தாா்.
இந்தநிலையில் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017-ம் ஆண்டு அறிவித்திருந்தாா்.
இதைத் தொடர்ந்து 2018-19-ம் ஆண்டுக்கான தமிழக வரவுசெலவுத்திடத்தில் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு 20 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பொதுமக்கள், அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்த போதும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், அண்ணன் மகள் தீபா ஆகியோா் அது தங்களது குடும்ப சொத்து எனத் தொிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் வீடு நினைவு இல்லமாக மாற்றுவதற்கான பூர்வாங்க வேலைகள் நடத்தப்பட்டன. பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு வேதா நிலையம் அமைந்துள்ள 24 ஆயிரம் சதுரடி நிலத்திற்கும் வீடு மற்றும் அங்குள்ள மரங்களுக்கும் சேர்த்து 68 கோடி ரூபாவினை இழப்பீடாக நிர்ணயித்து அதற்கான தொகையை நீதிமன்றில் செலுத்திய அரசு அந்த வீட்டையும் அரசு கையகப்படுத்தியது.
ஜெயலலிதாவின் வாரிசுதாரர்கள் முறைப்படி நீதிமன்றினை அணுகி இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்கம், வைரம் நகைகள், அவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் பத்திரப்படுத்தப்பட்டு கலெக்டர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் வீட்டை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விட அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தது.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை இன்று நினைவு இல்லமாக திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த போதும் அதற்கு தீபா, தீபக் எதிர்ப்பு தெரிவித்து தொடா்ந்த வழக்கு நேற்று உயா்நீதிமன்றில் விசாரணைக்கு வந்த நிலையில் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக திறந்து வைக்கும் நிகழ்ச்சியை நிபந்தனைகளுடன் நடத்தலாம் எனவும் பொதுமக்கள் யாரையும் வீட்டை பார்வையிட உள்ளே அனுமதிக்க கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது
அதனைத் தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் போயஸ் கார்டன் வீட்டில் நினைவு இல்ல திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அங்கு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட இருந்த ஜெயலலிதா உருவ படத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் மலர் தூவி வணங்கியதுடன் ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறந்து வைக்கப்பட்டதுடன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்குவதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. #நினைவுஇல்லம் #போயஸ்கார்டன் #ஜெயலலிதா #வேதாஇல்லம்