Home உலகம் “போல் எம்புளுவா” முகவர் உட்பட இரு பெண்கள் சுட்டுக்கொலை!

“போல் எம்புளுவா” முகவர் உட்பட இரு பெண்கள் சுட்டுக்கொலை!

by admin

பிரான்ஸின் தென்கிழக்குப் பகுதியில் தொழில் இழந்த 45 வயதான முன்னாள் பொறியியலாளர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் பணியாளர்கள் இருவர் உயிரிழந்திருக்கின்றனர்.

குறுகிய நேர இடைவெளியில் வெவ் வேறு இடங்களில் அமைந்திருக்கும் இரண்டு பணியிடங்களுக்குள் துப்பாக்கியுடன் பிரவேசித்து அந்நபர் கடமையில் இருந்த பெண்களைச் சுட்டுவிட்டுக் காரில் தப்பிச் செல்ல முற்பட்டபோது பொலீஸாரால் இடைமறித்துக் கைது செய்யப்பட்டி ருக்கிறார்.

வலோன்ஸ் நகரில் (Valence – Drôme) இன்றுகாலை ‘போல் எம்புளுவா’ (Pôle Emploi) எனப்படும் தொழில் தேடுவோரது நலன்களைக் கவனிக்கும் அரச முகவர் பணிமனைக்குள் முதலில் பிரவேசித்த அந்த நபர் திடீரென அங்கிருந்த முகவரான (conseillère Pôle Emploi) 53 வயதுடைய பெண்ணை தலையில் கைத்துப்பாக்கியால் சுட்டார்.

அதனால் அங்கிருந்தோர் பெரும் பீதியடைந்து பாதுகாப்புத் தேடி ஓடி ஒளிந்தனர். காயமடைந்த அந்தப் பெண் பின்னர் உயிரிழந்தார்.அங்கிருந்து வெளியேறி அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு சென்ற ஆயுததாரி அங்கு கடமையில் இருந்த மனித வள அலுவலரான இரண்டாவது பெண்ணைச் சுட்டுள்ளார்.

கழிவு அகற்றும் வாகனங்களைத் தயாரிக்கின்ற அத் தொழிற்சாலையில் அந்த நபர் முன்னர் பொறியியலாளராகப் பணியற்றிப் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறது.கொல்லப்பட்ட இரண்டு பெண்களும் தாக்குதலாளிக்கு ஏற்கனவே அறிமுகமானவர்களா அல்லது முதலில் அவரை எதிர்கொண்டு உரையாடிய காரணத்தால் கொல்லப்பட்டார்களா என்பது தெரியவில்லை. இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்று பொலீஸார் உறுதிப்படுத்தி உள்ளனர்.

தொழில் இழப்பினால் அல்லது அது சார்ந்த பிரச்சினைகளால் விரக்தி அடைந்த ஒருவரே பழி வாங்கும் நோக்கில் இத்தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் எலிஸபெத் போன் (Elisabeth Borne) சம்பவம் நடந்த பகுதிக்குச் சென்றுள்ளார். விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சம்பவம் குறித்து தனது அதிர்ச்சியை வெளியிட்டிருக்கின்ற பிரதமர் Jean Castex உயிரிழந்தவர்களது குடும்பங்களுக்கு அனுதாபத்தைத் தெரிவித்திருக்கிறார்.

குமாரதாஸன். பாரிஸ்.28-01-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More