யாதுமாகி நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை எல்லாம் காளி
தெய்வ லீலை அன்றோ
பூதம் ஐந்தும் ஆனாய் காளி
பொறிகள் ஐந்தும் ஆனாய்
போதமாகி நின்றாய் காளி
பொறியை விஞ்சி நின்றாய்
இன்பமாகி விட்டாய் காளி
]என்னுள்ளே புகுந்தாய்
பின்பு நின்னையல்லால் காளி
பிறிதும் நானும் உண்டோ
போதும் இங்கு மாந்தர் வாழும்
பொய்மை வாழ்க்கையெல்லாம்
ஆதி சக்தி தாயே என்மீது
அருள் புரிந்து காப்பாய்
நர்த்தகி அபிராமி தனது இந்த ஆற்றுகைக்கு தேர்ந்து ஒழுங்கு படுத்தி எடுத்த காளி பக்தரான பாரதியாரின் பாடல் இது . ஒரு தடவை அல்ல பல தடவைகள் மீண்டும் மீண்டும் இந்த வரிகளைப் இதனைப் படித்துப்பார்க்க வேண்டும் அப்போதுதான் பாட்டின்பம் அல்லது கவி இன்பம் பெறலாம் முதலில் படிக்கும்போது உங்கள் மனதில் ஒரு கருத்தும் உங்கள் மனக்கண்முன் சில படிமங்களும் தோன்றும்.
மீண்டும் மீன்டும் படிக்கையில் வெவ்வேறு கருத்துகளும் வெவ்வேறு படிமங்களும் தோன்றக் கூடும் கணம் தோறும் வியப்புக்காட்டுவது நல்ல கவிதையின் ஒரு பண்பு இதனைப் படிக்கும் போது பெறும் கருத்துகளும் அககண்முன் காணும் படிமங்களும் அவரவர் அனுபவம் அறிவு கல்வி கேள்விக்கேற்ப பல்வேறு உருவங்கள் கொள்ளும் ஒன்றுபோல ஒன்றிருக்கும் என எதிர்பார்க்கமுடியாது.
ஆனால் உலகின் சில அனுபவங்கள் நடைமுறைகள் பொதுவான படியினால் நமக்கு எற்படும் கருத்துருவாக்கத்திலும் படிமங்களிலும் சில ஒற்றுமைகளும் தோன்றும் இலக்கியத்திற்கு நான் கூறிய இக்கருத்துகள் கலைப்படைப்புக்கும் பொருந்தும் இலக்கியப் படைப்பொன்று கலைப்படைப்பாக அதுவும் ஆற்றுகைக் கலைபடைப்பாக மாறும் ரசவாதம் சுவராஸ்யமானதுடன் முக்கியமானதும் ஆகும்.
ஒரு படைப்பாளியின் படைப்பு இன்னொரு படைப்பாளியால் மீளப் படைக்கப்படும் படைப்பாக மாறும் அதிசயம் அது. படைப்பின் படைப்பு என இதனை நாம் அழைக்கலாம் யாதுமாகிநின்றாய் எனும் இப்பாடல் எனக்கு அறிமுகமானது எனது 12 ஆவது வயதில். வந்தறுமூலை மத்திய கல்லூரியில் விடுதியில் இந்துப் பிள்ளைகளின் காலை இறை வணக்கத்தின் போது இப்பாடலை தேவாரத்திற்குப் பதிலாக நான் பாடியுள்ளேன். அதற்கு ஓர் காரணம் உண்டு அது இங்கு அவசியம் இல்லை எனக்கு இதனை அறிமுகம் செய்தவர் எனது தமிழாசிரியர் யாழ்ப்பாணம் இரத்தினம் சேர் அவர் ஓர் பாரதி பக்தர் நானும் எனது ஊர்க்கோவில் காளிமீது பெரும் பக்தியும் பயமும். கொண்டிருந்தேன். மாரியும் காளியும் எமக்கு இஸ்ட தெய்வங்கள் மாரி அருள்பவள் காளி அழிப்பவள் என்ற எண்ணக்கரு என்னிடம் இருந்தது.
ஓம் அரி ஹரி காளி அட்சரி காளி
திரிபுரை கைலை சென்றிருந்தவளே
சுடலையில் ஆடிப்பாடிய சூரி
சூர சங்காரி வீர கெங்காளி
உருத்திய பார்வையும் உதிர நற்குழலும்
விரித்த சடையும் விளங்கிய மேனியும்
என ஊர்க் கோவில் பூசாரி உடுக்கடித்து காளியை வரவழைப்பதும்
உடுக்கின் உறுமல் ஒலியில் காளி உருக்கொண்ட குழந்தைவேல் அண்ணர் காளி உருவேறி காளி அம்மனாக மாறி நாக்கை வெளியே நீட்டி கண்ணை உருட்டி எமை நோக்கி உறுத்திப்பார்ப்பதும் காளியை குழந்தைவேல் அண்ணரில் கண்டு அனைவரும் அம்மா தாயே என கைகளைசிரமேல் வைத்துச் சப்தமிடுவதும் அப்சப்தம் அக் கோவில் வெளியை நிறைத்து எங்கும் நிறைவதும் இளவயதில் என் மனதில் பதிந்த ஒரு பரவசக் காட்சி. எனது ஆழ்மனதில் அவை படிமங்களாக உறைந்திருக்கவும் கூடும்
இரத்தினம் சேரின் இந்தப்பாடல் அறிமுகமும் அவர் இதனை எனக்கு விளக்கிய விதமும் என்னுள் இன்னொரு காளியைக் கொணர்ந்தது.
அது முன்னர் நான் ஊரில் அறிந்த காளியிலும் வேறானது எனினும் அன்றைய அனுபவத்தில் எனக்கு பொறியை விஞ்சி இறைவியாகிய காளி நிற்றல் மாந்தர் வாழும் பொய்மை வாழ்க்கை என்பன பிடிபடாத விடயங்களாக இருந்தன, வயது 12 அல்லவா? என் அனுபவத்திற்கு ஏற்ப அப்பாடாலை உட்செரித்த வயது அது. அப்பாடலும் அதனை நான் பாடிய விதமும் நன்றாக இருந்ததால் நண்பர்கள் அதனை பாடும்படி வேண்டினர். நானும் பஞ்சபுராணம் பாடியபின் இதனை பாடுவேன், பாடுகையில் மனது உடல் எல்லாம் ஒரு பரவசம் பிறக்கும்.
அன்று காளி என்னுடல் இடம் கொண்ட கதைகள் இவை இப்பாடல் என்னை மெல்ல மெல்ல ஆட்கொண்டது நானும் வளர வளர என் அறிவும் அனுபவமும் வளர வளர இப்பாடலும் பல்வேறு காட்சிகள் காட்டத் தொடங்கின.அப்பாடல் பற்றிய அனுபவமும் என்னுள் வளர்ந்தது.
காளி பற்றிய ஆய்வுகளை எழுத்துகளை தாந்த்ரீக ன் தத்துவத்தை புரிய முயற்சித்தபோது காளி எனக்கு வேறுருவம் காட்டினாள்.
இந்திய அழகியலுக்கு எதிரான இன்னொரு அழகியல் காட்டுபவள் இந்தக்காளி இந்திய பெண்ணுக்கு இந்து தர்மம் பல கட்டுப்பாடுகள் வகித்தன சிவந்த நிறம், அள்ளி முடித்த கொண்டை, அடக்க ஒடுக்கம். ஆணின்முன் அமைதி. மெல்லிய தோற்றம் நாணப் பார்வை
இந்த மென்மை நளினத்திற்கு மாறாக இன்னொரு தோற்றம் காட்டி நிற்பவளாக எனக்கு பின்னாளில் என் காளி காட்சிதந்தாள்
அடக்க அடக்க அடங்காத் பெண்மையின் முழு வீரியத் தோற்றமாக அவள் படிமம் எனக்குள் விரிந்து நிறைத்தது. வீறு கொண்ட கோபம் கொண்ட பெண்ணின் உக்கிரமான அழகிய தோற்றம் அது
தாய்ச் சமூகத்தின் முதல் தெய்வம் அவள் என்பதும் புரிய வந்தது
நான் உள்வாங்கியது போல அபிராமியும் உள்வாங்க வேண்டும் என நான் எப்படி எதிர்பார்க்கமுடியும்?
இங்கே அபிராமி காளியை அந்த பிம்பத்தை இன்னொரு விதமாக உள் வாங்கியுள்ளாள். அபிராமியின் வாழ்வனுபவம்,, இலக்கிய அறிவு சிந்தனை, பல்துறை வாசிப்பு முக்கியமாக அவள் கற்ற நாட்டியம் எனபனவற்றிற் கூடாக அபிராமியின் ஆடலூடாக இன்னொரு காட்சி இங்கு விரிகிறது. இது பாரதியின் வரிகளாயினும் அபிராமிக்கூடாகப் புகுந்து புறப்பட்டுக் காட்சியாக விரிகிறதல்லவா? இது பாரதியை உள்வாங்கிய அபிராமியின் படைப்பு அபிராமியின் வாழ் வனுபவங்களை வைத்து கொண்டு அவர் எவ்வாறு இதனை ஓர் படைபாககொணர்ந்துள்ளார்? அவரது படைப்பு உருவாகும் முறை எப்படி? எனப்பார்ப்போம்
முதலில் அபிராமியின் பாடல்தெரிவும் அதனை அவர் ஒழுங்கு அமைத்த முறையையும் பார்ப்போம். பாரதியார் கவிதைகளில் காளிப் பாட் டு,காளி ஸ்தோத்திரம் என இரண்டு பாடல்கள் வருகின்றன. காளிப் பாட்டில் இரண்டு பாடல்களும் காளி ஸ்தோத்திரத்தில் ஏழு பாடல்களும் உள்ளன. மொத்தமாக ஒன்பது காளிப்பாடல்கள்
தனக்கு இயைந்த வகையில் அந்தப் பாடல்களைத் தெரிவதிலும் பாடல்களைப் பின்னுவதிலும் கழிப்பதிலும் இணைப்பதிலும் அபிராமியின் படைப்புத் தொழில் ஆரம்பமாகிவிடுகிறது. தான் நினைத்த காளியை உருவாக்க அபிராமிக்கு ஒரு பிரதி தேவைப்பட்டது.அதற்கு பரதியை அபிராமி துணைகொண்டாள் என நாம் எடுக்கலாம்
காளிப்பாட்டில் முதல் பாடல்
யாதுமாகிநின்றாய்காளிஎங்கும்நீநிறைந்தாய்
தீதுநன்மைஎல்லாம்காளிதெய்வலீலைஅன்றோ
பூதம்ஐந்தும்ஆனாய்காளிபொறிகள்ஐந்தும்ஆனாய்
போதமாகிநின்றாய்காளிபொறியைவிஞ்சிநின்றாய் என்பதாகும்
அடுத்தபாடல் இன்பமாகிவிட்டாய் காளி என்னுளே புகுந்தாய்
பின்பு நின்னையல்லால் காளி பிறிது தானும் உண்டோ அன்பளித்து விட்டாய் காளி ஆண்மை தந்து விட்டாய் துன்பம் நீக்கி விட்டாய் காளி தொல்லை போக்கி விட்டாய் என்பதாகும். இதில் இரண்டாம் பாடலில் கடைசி இரு வரிகளையும் எடுத்து விட்டு அந்த இடத்தை பாரதியாரின் அடுத்த பாடலான காளி ஸ்தோத்திரத்தில் வரும் பின் வரும் இரண்டு வரிகளைக் கொண்டு அபிராமி நிரப்புகிறார் அந்த வரிகள் போதும் இங்குமாந்தர் வாழும் பொய்மை வாழ்க்கை யெல்லாம் ஆதி சக்தி தாயே என்மீது அருள் புரிந்து காப்பாய் என்பதாகும்
நான் நினைக்கிறேன் அபிராமியின் இந்த நாட்டிய அளிக்கையின் உயிர்வரிகள் இதுதான் என்று. நாட்டியமும் அதனை சுற்றியே அமைந்திருக்கிறது என்பது என் புரிதல் என் புரிதல் என் இன்பம்
போலி மாந்தரின் போலி வாழ்க்கையை பொய்மை வாழ்க்கையை வெறுகின்ற ஓர் அக்கினிக் கோபம் அந்த வரிகளுக்குள் புதைந்து கிடக்கிறது தனது நடுத்தர வயதை அடைந்து வாழ்வின் பல்வேறு சுழல்களுக்குள் அகப்பட்டு பல்வேறு மனிதர்களையும் அவர்களின் குணாம்சங்களையும் புரிந்து கொண்ட அபிராமி பாரதியின் இந்த வரிகளுக்குள் தன் சமூக அனுபவத்தை இனம் கண்டு கொண்டிருக்கலாம் அந்த வரிகள் அவளுக்கு மிகப் பிடித்திருக்கலாம்
தன்னைப்போல பொய்மை வாழ்க்கைக்குள் அகப்பட்டு போதும் போதம் இது. எனக்கு விடுதலை தா அம்மா என காளியை யாசித்த பாரதியின் உணர்வுடன் சமூகத்தால் அலைக்கழிக்கப்பட்ட அபிராமியின் அந்த அலை மனம் தன்னை அடையாளம் கண்டமை வியப்பில்லை இனம் இனத்தை நாடும்தானே
கவிதை வந்து விட்டது அடுத்தது என்ன காட்சிப்படுத்தல்தானே?
நாடகம் நடனம் அசைவு கொண்டு ஓவியம் வரைய ஆரம்பிக்கிறார் அபிராமி நடனம் என்பது உடலால் ஆகாய வெளியில் வரையும் ஓவியம்தானே? நாடகம் என்பது ஓர் காண்பியப் பிரதிதானே (visual text) முதலில் ஒரு பெண் தன் கணவனால் திடீரெனத் தாக்கப்பட்டுகிறாள் அதுவும் மிக மென்மையான அந்தக்கன்னத்தில்.,
அவன் அன்போடு வருடி முத்தமிட்ட கன்னம் அது அதில் அவன் இப்போது தன் அnபைக்காட்டவில்லை. தனது ஆண்மையைக் காட்டுகிறான்,அவள் அதனை எதிர்பார்க்கவில்லை அசந்து விடுகிறாள். சமத்துவத்தைக் கணவனிடம் எதிர்பார்த்த மனைவி எனும் பெண்னுக்கு ஏற்படும் முதல் அதிர்ச்சி இது. ஆனால் அவள் எதிர்த் தாக்குதல் தரவில்லை.அதிர்சியிலிருந்து மீண்ட பின் தானே செயல்படும் உத்வேகம் தோன்றும் இவை யாவும் நாடகத்துள் நடிப்புள் வரும்.
அபிராமியின் கண்களில் அந்த அதிர்ச்சி அழகாக வெளிப்படுகிறது நடிப்பு அபிராமிக்கு அங்கு உதவுகிறது அதன் பின் அவன் தன் தவறை உணர்ந்து அவளுடன் இணையச் செல்கிறான் அதனை அவனது அன்பாக எடுக்க அவளால் முடிய வில்லை. அவனுக்கு தேவை தன் உடல் மட்டும்தானா என்ற ஓர் அருவருப்பு அவள் முகத்தில் தோன்றுகிறது இதுவும் நடிப்புள் வரும்.. அவனை விட்டு அவள் விலகுகிறாள் அவர்களிடையே பிளவு வருகிறது தூரத்தூரத் படுக்கிறார்கள், அவள் தன்னை விட்டு விலகுவதுஅந்த ஆணுக்கு ஓர் சவால் அவன் மீண்டும் அவளை அடக்க வழமையான வன்முறையைக் கையாளுகிறான் அவளது கழுத்தைப்பிடிக்கிறான்.
அவனது வன்முறை அவளுக்குள் இருந்த வன்முறையை தூன்டிவிடுகிறது, அவளுக்குள் இருந்த பெண்மை விழித்து கொள்கிறது அவளும் அவனைப்போல அவன் கழுத்தை பிடித்துத் தள்ளுகிறாள், இவ்வளவும் நாடக பாணி யிலோ அல்லது திரைப்பட பாணியிலோ நடந்து முடிய அடுத்த காட்சி நடன பாணியில் வருகிறது அவள் தனது கோபத்தை ஓரு பெண்ணின் கோபமாக உணர்க்கிறாள் ஆண் ஆதிக்கத்தை எதிர்த்து இன்று வரை அடங்காமல் நிற்கும் காளிதான் அவளது ஆதர்சம் ஏங்கும் நிறைந்த அந்த சக்தியை நினைக்கிறாள் அந்தக் காட்சி வெட்ட வெளியில் ஆகாயமும் நிலமும் சந்திக்கும் பெரு வெளியில் நடக்கிறது. யாதுமாகி நின்ற காளி நம் முன் ஆகாசம் பூமியெல்லாம் நிறைத்து நிற்கிறாள்அவள் வானத்தையும் பூமியையும் இணைத்து நிற்பதுபோல யாதுமாகி நிற்கிறாள் தெய்வ லீலை நடக்கிறது பூதமைந்தும் ஆனவளாக பொறிகள் ஐந்தும் ஆனவளாக பொறியை விஞ்சியளாக போதம் தருகிறாள், காளி அந்த லீலை மஹாசக்தியின் லீலை
அது ஓர் பிரபஞ்ச இன்பம். அந்த இன்பம் தனக்குள் வரவேண்டும் அந்த லீலாவினோதினி அபிராமிக்குள் வரவேண்டும் அவளுள்ளே புக வேண்டும் புகுந்தால் அப்படிபுகுந்தால் அபேத நிலை காளிவேறு அந்தக் குடும்பபெண் வேறு அல்ல இது என்னுள்ளே புகுந்தாய் எனும் பாடலில் காளியின் உணர்வு அபிராமி எனும் பெணுடலுள் புகின்றது
மூன்று நிலைகளில் இங்கு ஓர் பெண்ணைக் காணுகிறோம் ஒரு நிலை குடும்ப பெண் இரண்டாவது நிலை காளியும் காளியின் பிரபஞ்ச லீலாவினோதநடனமும் மூன்றாவது நிலை காளியை உள்வாங்கிய புதுமை பெண் இவள் பழைய குடும்பப்பெண் அல்ல பாரதி கண்ட புதுமைப் பெண்
நாடகம் அல்லது திரைப்பட நடிப்பினால் குடும்பபெண்ணின் குமுறலைக்கொணர்ந்த அபிராமி பின்னர் ஆடலாலும் அசைவுகளாலும் உடைகளாலும் நிறங்களாலும் காளியையும் , காளி புகுந்த புதுமை பெண்ணையும் கொண்டு வர எத்தனிக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது அபிராமியின் அழ்கான ஆனால் மிக அகற்சியான கை கால் மொத்தமாக உடல் அசைவுகள் இங்கு அழகாக வெளிப்பட்டு இந்தியாவின் கோவில்களில் செதுக்கப்பட்ட அழகான நடனசிற்பங்களை நினைவூட்டுகின்றன. கரணகளை ஆடலில் கொணர்ந்த்து மாத்திரமன்றி அதனை ஆய்வும் செய்த முன்னோடி பத்மாசுப்ரமணியம் இந்தியாவில் உயர் கல்வி கற்ற காலத்தில் இச்சிற்பங்களை இதனை அடியொற்றி பிரபல நர்த்தகிகள் ஆடிய ஆடல்களை அவர்களின் உடல் அசைவுகளை அபிராமி கண்டிருக்கவும் கூடும், வானத்திற்கும் பூமிக்குமாக நின்று ஆடிய ஆட்டத்திர்குப் பின்னர்
போதும் இங்கு வாழும் பொய்மை வாழ்க்கையெல்லாம் என்ற பாடல் வரும்போது அது எரியும் நெருப்புக்கு முன் நின்று ஆடும் ஆட்டமாகிவிடுகிறது, பொய்மைகளைபொசுக்கும் நெருப்பாகவும் அதனைப்பார்க்கலாம். பொய்மைகண்டு மனதுள் எழுந்த கோப நெருப்பாகவும் அதனைப் பார்க்கலாம் நெருப்பு ஜுவாலை அங்கு பல அர்த்தங்களைத் தோற்றுவிக்கிறது காட்சி முடிகையில் மூன்று பெண்களின் முகம் பெரிதாக திரையில் வருகின்றன ஒன்று குடும்பபெண் மற்றது காளி உடலிடம் கொண்ட பெண் அடுத்து கரிய உருவிலான காளி கரிய உருவிலான காளியின் அகன்ற உறுத்தும் பெரிய விழிகளுடன் காட்சி முடிகிறது ஆற்றுகையும் மனதில் பதிகிறது பார்ப்போருக்கு பல அர்த்தங்களை எழுப்பி சிந்திக்க வைப்பதும் நல்ல படைப்பாக்கத்தின் ஓர் அம்சமாகும்
காளியை நினைவூட்ட அவளது கரிய தோற்றம் , விரித்த சடை, அம்மன் முடி சிவப்பு உடை, எலுமிச்சம் பழ மாலை சிவப்பு மலர்மாலை என்பன பயன்படுத்தப்படுகின்றன இவற்றினூடாக நமக்குள் ஓர் கலா அனுபவத்தை அவர் அளிக்க முயல்கிறார்
பரத சம்பிரதாயத்தைச் சற்றுமீறிச் செல்கிறார் மீறலே கலைஎன எங்கோ படித்தது ஞாபகம் வருகிறது. ஒன்றைபோலசெய்தல் கைவினை மீறி புதியனபுனைதலே கலையாகும்
உடுக்கின் உறுமல் காளி வருவதற்கான கட்டியம், அவ்வொலி என்னை பின்னோக்கி அழைத்துசென்று குழந்தைவேல் அண்ணர் உடலில் காளி புகுந்த காட்சியையும் அவர் உறுத்திய பார்வையுடன் எம்மை பார்த்த காட்சியையும் நினைவூட்டியது என் ஆழ்மனதில் கிடந்த அந்தக் காட்சியை உசுப்பி முன் கொணர்ந்தது கலை அனுபவம் என்பது இதுதான். நமது அனுபவங்கள் மூலம்தான் கலை அனுபவம் காண்கிறோம் என்பதை நம்மில் பலர் அறிவதில்லை ரசிப்பு காட்சியில் இரும்ந்தாலும் அது உங்களுக்குள்ளும் உறங்கிக் கிடக்கிறது.அந்த உறங்கலை உசுப்பிவிடுவதும் நல்ல கலைபடைப்பின் னோர் அம்சமாகும்
இவை எல்லாவற்ரையும் ரசித்தபின் எனக்குன் ஏதோ ஒன்று சில உறுத்துவதாகத் தெரிகிறதே அவை என்ன? இதில் வரும் மூன்று வகைபெண்களுக்கும் மூன்று வகை நடிப்பும் மூன்று வகை உடல் அசைவும்தேவை முதல் பெண் மனதில் பதிகிறாள் இரண்டாம் பெண் மஹா காளி அவளும் தன் நடன அசைவுகளால் மனதில் பதிகிறாள்
மூன்றாம் பெண் காளி உட்புகுந்த புதுமைபெண்.இந்தபுதுமைபெண் காளி போலவே ஏஎனக்குத் தெரிகிறாள் காளீயுடலிடம் கொண்ட அந்த புதுமை மானிடபெண் எப்படியிருப்பாள்? அபிராமியின் பரத நடன அசைவுகள் அந்த பாத்திரத்தைக் கொண்டு வரச்வில்லையோ என தோன்றியது தொடர்ந்து ஏன் என்ற வினாவும் எழுந்தது.
பரதம் என்ற அந்த உடல்மொழிக்கு ஓர் வரையறையுண்டு அது ஓர் எல்லக்குட்பட்டதே அதற்குள் மாத்திரம் கட்டுப்பட்டால் நாம் விரும்பும் காட்சிகளை முழுமையாக படைக்கமுடியாமல் அதற்குள் சிக்கிக்கொள்ளும் அபாயமுண்டு அந்தபுதுமைப் பெண்ணை எப்படிகொணராலும்? அது படைப்பாளியின் வேலை. பார்ப்போர் அபிப்பிராயமே கூறமுடியும் இதற்கு நாம் பாரதியிடம் இருந்து பாடம் படிக்க வேண்டும்.அவன் தன் மனதுள் கனன்று கொண்டிருந்த மானுட அன்ப்வங்களை மானிட மேன்மைகளை மானிட சின்னத்தனகளை பிரபஞ்ச அனுபவங்களைகொண்டு வர பல வடிவங்கலைத் தேடியவன் செந்நெறி வடிவங்கள் சரிவராதபொது அவன் மக்கள் பாடலானான சிந்து கண்ணி தெம்மாங்கிற்குள் சென்றான் அதுச்வும் சரிவராதபோது அவன் வசனகவிதையைகூடக் கயில் எடுத்தான்
மரபிற்குள் கட்டுப்படாமையே அவனது படைப்பு வீச்சின் பலம்
பாரதியிடம் படிக்க வேண்டியை நிறைய உண்டு அத்தோடு காளியின் அந்த கிரீடம் எனக்குசற்று உறுத்தலாக இருந்தது..இன்னும் அழகியலாக அதனை அமைத்திருக்கலாம் அல்லது அது இல்லமலேயே காளியை அறிமுகம் செய்திருக்க்லாம்.
இத்தனைக்கும் மேலாக ஓர் நல்ல கலைபடைப்பைத் தந்து எம்மை அதில் ஈடுபட வைத்தமைக்கு அபிராமிக்கு எனது வாழ்த்துகள் கூட்டுப் பொறுபின்றி இது அழகாகியிராது. முக்கியமாக இதில் குறிப்பிடக் கூடியது பாடல் ஆகும் அதுவே இவ் ஆடலின் உயிர் நாட்டி. உணர்ச்சி பூர்வமாக பாட்டின் பொருளுணர்ந்து பாடியுள்ளார் யதுநந்தினி ராமநாதன், அவரது மேல் ஸ்தாயி குரல் இசை ஆரம்பத்தில் தரும் அனுபவமே தனி அலாதி பாட்டின் பொருளுணர்ந்து பாடியுள்ளார் ரட்ணம் ரட்ணதுரையின் தோல் வாத்திய இசை பாடலுக்கும் ஆடலுக்கு மெருகூட்டுகிறது. ஒரு கண நேரம் மட்டும் கேட்கும்உடுகின் அந்த உறுமல் இப்போதும் காதுள் ஒலிக்கிறது.
வாகீசன் சிவனாதனின் வீணை இசை பாடலின் இடையில் வந்து பாடலுக்கு அழகும் மணமும் தருகிறது இது தொழிநுட்பத்திற்கூடாக வரும் கலை ஆதலால் அவர்களின் திறமைகள் இதனைப்பளிச்சிட வைக்கின்றன அருமையான எடிட்டிங்,இதற்கான பாராட்டுகள் செந்த்ஊரனுக்கும் அட்கினுக்கும் உரியவை கூட்டுபொறுப்பில் தயாரான இதனுடைய Concept and Choreography அபிராமி ஆவர்
அனைவரையும் ஓர் நேர்கோட்டில் இணைக்கிறார் அபிராமி. அவருக்கு திரைபட அனுபவமும் உண்டு 1993 இல் அபிராமியின் அரங்கேற்றத்தில் கண்ட அனுபவமே இல்லாது ஓமப்புகை நடுவே காதலனை ஆசிரியர் சொல்லிகொடுத்த மாதிரிக் கண்டு ஒரப்புன்னகை செய்த அந்தசிறுமி ஞாபகம் வருகிறாள் 28 வருடங்களுக்குபின்னர் அந்தச் சிறுமி வளர்ந்து நடுத்தர வயதுப் பெண்ணாய் அந்தப் புகை மூட்டம் விலக்கி தன் அனுபவங்கள் மூலம் உலகைப் பார்க்கின்ற அபிராமியை யாதுமாகி நின்றாயில் காண்கிறேன் இந்த இரண்டு அனுபவங்களையும் அடைய வைத்த இயற்கைக்கும் காலத்திற்கும் நன்றி சொல்லத்தானே வேண்டும்