பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் அவர்கள் எல்லோருக்கும் நல்லவரல்லர். ஆனால் எல்லோருமே வெளிப்படையாகவோ அல்லது தங்களுக்குள்ளேயோ வியந்து கொள்ளும் ஓர் ஆளுமை என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உறுதியானதொரு அடையாளமாக நாற்பது வருட காலமாக இயங்கி வந்த புலமைத் திறனும் நிர்வாகத்திறமையும் வலுவாக வாய்க்கப்பெற்ற முன்மாதிரியான ஆளுமை பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் அவர்கள்.
பன்முக ஆற்றல் கொண்ட பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் அவர்களின் முக்கியமான குணாம்சம் என்னவென்றால் அவரது முடிவெடுக்கும் திறனும் அதற்காக உறுதியாக நின்று கொள்ளும் இயல்பும் ஆகும். தலைமைத்துவத்தின் முக்கியமான பண்பு என்பது தீர்மானம் எடுப்பதும் பொறுப்புக் கூறுவதுமாகும். அத்தகைய ஆற்றல் வாய்க்கப்பெற்ற ஆளுமையாக பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் அவர்களை உறுதியாக அடையாளப்படுத்த முடியும். இன்றைய சூழலில் மிகவும் படிப்பினைக்குரிய விடயமாக இந்த இயல்பு முன்கொண்டு வரப்படுவது அவசியமாக இருக்கிறது.
ஆசிரியராக, அறிஞராக, ஆய்வாளராக, ஒழுங்கமைப்பாளராக, நிர்வாகியாக, தொழிற்சங்கவாதியாக பல பரிமாணங்களை கொண்டு இயங்கியதுடன் தன் துறைக்கும் அப்பால் பல்வேறு துறைசார் அறிவும் இயக்கமும் கொண்டிருப்பவர். இது புலமையாளரின் அவர்தம் புலமைத்துவத்தின் அடிப்படையான விடயமாகும்.
நிர்வாக ஒழுங்கு விதிகள், அதன் நடைமுறைப்படுத்தல் சார்ந்த அவரது இயக்கம் படிப்பினைக்குரியது. மௌனப்பண்பாடும் தற்காப்பு அணுகுமுறைமையுமே முறைமையென்றாகிப் போயிருக்கின்ற கல்வி, நிர்வாகச் சூழலில் அதன் சபைகளில் ஓயாது குரல் கொடுத்து உயிர்க்கொடுத்து வந்திருக்கின்ற, முன்மாதிரியாகக் கொள்ளப்பட வேண்டிய ஆளுமை என்பதை உரத்தும் உறைக்கவும் சொல்ல வேண்டியிருக்கிறது.
வடிவமைக்கப்பட்டுள்ள விரிவுரைகளுக்கும், பதவி உயர்வுகளுக்கும் மட்டுமேயான புலமை நடவடிக்கைகளுக்கும் திறந்து கிடக்கின்ற உயர்க்கல்வி பண்பாட்டுச் சூழலில், சமூகம் சார்ந்து இயங்கி வருகின்ற குறிப்பிடத்தக்க ஆளுமை பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் என்பதும் அழுத்தி குறிப்பிடப்பட வேண்டியது.
குறிப்பாக இடர்க்காலங்களில் இயற்கையாலும் மனிதர்களாலும் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்கள் எதுவாக இருப்பினும் அச்சூழலில் முன்னின்று முகாமைத்துவம் செய்யும் இயல்பு பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் அவர்களுக்குரியது. சவால்களுக்கு முகம்கொடுக்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட அவரது திறன் அனுபவித்து அறிதற்குரியது. அதுபோலவே சவால்களை ஏற்படுத்தும் அவரது வல்லமையும் ஆச்சரியப்படுத்துவது. இது சார்ந்த தேடல், சிந்தனை, அனுபவம், மதிநுட்பம், ஆலோசனை வலையமைப்பு, குழுச் செயற்பாடுகளிலும் பிறரில் தங்கிநில்லாத் தன்மை என்ற பல காரணிகள் அவரது ஆளுமையை நிலைநிறுத்தி வைப்பவை எனக் கூறமுடியும்.
அவரது வாசிப்பும் எழுத்தும் அது சார்ந்த பல தளங்களிலுமான அவரது தொடர்புகளும் உரையாடல்களும் அவருக்கு புலமைத்துவக் குணாதிசய கம்பீரத்தைக் கொடுத்திருக்கின்றன. துறைசார் புலமைத்துவத்துடன் அவரது பரந்துபட்ட அனுபவ அறிவு அவருக்கு வலுவான விவாதிக்கும் திறனைக் கொடுத்திருக்கிறது. இது அவரது சட்டப்படிப்பிற்கும் பயில்வுக்கும் பெரும் வலுவைக் கொடுத்திருப்பதுடன், அவரது சட்ட அறிவு அவரது புலமை சார், நிர்வாகம் சார் உரையாடல்களுக்கும் கனதியைச் சேர்த்திருக்கிறது என்பதும் அறிந்த உண்மை.
சில சந்தர்ப்பங்களில், தான் சார்ந்தோர் நிலைநின்று எடுத்த நிலைப்பாட்டுக்கு வாதிடுகிறார் என்பதும் எனது அவதானமாகும். இதிலும் நான் காணும் அழகு என்னவென்றால் அதன் வெளிப்படைத் தன்மையும் நேரடித் தன்மையும் ஆகும்.
மேலும் அனர்த்த காலங்களில் அவரது இயங்குதிறன் அசாத்தியமானது. ஆபத்தான காலங்களிலும் பாதிக்கப்பட்டோருக்காக இயங்குவது, குரல் கொடுப்பது அவருக்கு இயல்பானது என்பதை அவரை அறிந்தவர்கள் அறிவர். மிகுந்த ஆபத்தான காலகட்டங்களிலும் தனக்குரிய வகையில் ஒழுங்கு விதிமுறைகளுக்கு அமைய, குறிப்பாக கிழக்குப்பல்கலைக்கழக அகதிமுகாமிலிருந்து காணாமலாக்கப்பட்டவர்களது நினைவேந்தலை முன்னெடுத்து வருபவர். தன் ஆத்மார்த்த கடமையாக வருடந் தவறாது ஆபத்துக்கள் கைக்கெட்டுந் தூரத்திலிருப்பினும் காணாமல்லாக்கப்பட்டவரது நினைவை ஏந்தி அணையாது வைத்திருப்பதிலும் அதற்கான நீதி நியாயம் கோரலிலும் அவரது குணாதிசய மிளிர்வைக் காணமுடியும்.
அரைநூற்றாண்டு கால கிழக்கிலும், வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் வாழும் நூலகமாக, ஆவணக் காப்பகமாக, இணையத்தளமாக இயங்கிக் கொண்டிருப்பவர். அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு, ஆக்கபூர்வமான சமூக உருவாக்கங்களுக்கும், பல்கலைச் சமூக உருவாக்கங்களுக்கும் பங்களிப்புச் செய்வதற்கு நிறையவே உண்டு. அதை செய்வது அவரை மாண்பு செய்வது. சமூகங்களை மதிப்பிற்குரியதாக்கி வலுப்படுத்திக் கொள்வது.
பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் என்பவரும் ஒரு மனிதர். எனினும் எங்களுக்கு முன் ஒருபெரும் ஆளுமையாக ஆகர்சித்து நிற்கிறார். அவரது ஆளுமை அதன் சக்தி எங்களையும் மேலும் வலுப்படுத்தி முன்னோக்கி நடக்கச் செய்யும்.
கலாநிதி சி.ஜெயசங்கர்.