தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் 09 பேர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தரப்புடன் இணைந்து செயற்பட்ட 09 உள்ளூராட்சி உறுப்பினர்களே நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் இடம்பெற்ற யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவு மற்றும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவின் போது , தமது கட்சியின் கொள்கைகளை மீறி , கட்சியின் தீர்மானத்தை மீறி அரசியல் இயக்கத்திற்கு துரோகம் இழைத்த மன்னிக்க முடியாத குற்றங்களை புரிந்த குறித்த ஒன்பது பேரையும் விசாரணைகள் இன்றி மத்திய குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்குவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்கினார்கள். அவர்களில் மணிவண்ணன் உள்ளிட்ட நான்கு உறுப்பினர்களை ஏற்கனவே கட்சியை விட்டு நீக்கி விட்டதாக கட்சி அறிவித்த நிலையில் , அதற்கு எதிராக அவர்கள் நால்வரும் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.
அதன் பிரகாரம் வழக்கு முடிவடையும் வரையில் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நால்வரையும் நீக்க நீதிமன்று தடை விதித்துள்ளது.
இந்நிலையிலையே ஏனைய ஆறு உறுப்பினர்களான வரதராஜன் பார்த்திபன் , சி. தனுஜன் , இ.ஜனன் ப.பத்மமுரளி , அ.சுபாஜினி , இ.ஜெயசீலன் ஆகியோரே நீக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவின் போது , தமது கட்சியினை சேர்ந்த ப. மயூரனுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக அகிலாண்டரூபி , கௌசல்யா மற்றும் தவிசாளர் தெரிவில் போட்டியிட்டவரும் , தற்போதைய தவிசாளருமான ப. மயூரன் உள்ளிட்டோரையே கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.
விசாரணைகள் இன்றி கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக குறித்த 09 உறுப்பினர்களும் நீதிமன்றில் தனித்தனியாக வழக்கு தொடர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது. #தமிழ்தேசியமக்கள்முன்னணி #நீக்கம் #மணிவண்ணன் #யாழ்_மாநகரசபை