மியன்மாாில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
மியன்மாாில் அண்மையில் நடைபெற்ற தேர்தலை அடுத்து அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையில் நிலவி வந்த பதட்டத்தை தொடர்ந்து ஆட்சியினை ராணுவம் கைப்பற்றியுள்ளது.
நாட்டின் முக்கிய தலைவர்கள் கைதுசெய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னா் அங்கு ஓராண்டுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் தொலைக்காட்சி மூலம் அறிவித்துள்ளது.
மேலும் தளபதி மின் ஆங் ஹ்லேங்கிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தலைநகரான நேபியேட்டோ மற்றும் முக்கிய நகரமான யாங்கூனின் தெருக்களில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
பர்மா என்றும் அழைக்கப்படும் மியன்மாா் 2011இல் ஜனநாயக சீர்திருத்தங்கள் ஆரம்பமாகும் வரை ராணுவத்தால் ஆளப்பட் வந்தது.
அங்கு கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றதுடன் ராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சிகள் தோல்வி அடைந்தன.
இந்த தேர்தலில் மோசடி நடைபெற்று இருப்பதாக ராணுவம் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தநிலையில் ஆட்சியை ராணுவம் கவிழ்க்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது #மியன்மாா் #ராணுவம் #ஆங்சான்சூச்சி #கைது #அவசரநிலை