பர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயகவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த வழக்கு இன்று (05.02.21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெதிகேவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகள் இருவரும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் வெய்யப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரையும் 5 இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை முடிவடையும் வரையில் அவர்களுக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடைய கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவின் பிரதி ஒன்றை குடிவரவு குடியகழ்வு ஆணையாளர் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில், பேசுபொருளான மொனார்க் தொடர்மாடி சொகுசு குடியிருப்பை மையப்படுத்தி, இலஞ்ச ஊழல் விசாரணை சட்டத்தின் 19 ( உ) பிரிவின் கீழ் முதலாம், 2 ஆம் பிரதிவாதிகளாக முறையே ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜுன அலோசியஸ் ஆகியோர் பெயரிடப்பட்டு இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.