பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டத்தினை மல்லாகம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள்
தடை விதிக்க கோரி சுன்னாகம் காவல்துறையினா் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பத்தினை நீதவான் நிபந்தனைகளுடன் தள்ளுபடி செய்துள்ளார்.
பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின்
கீழ் இந்த விண்ணப்பம் சுன்னாகம் காவல்துறையினரால் கடந்த புதன்கிழமை மாலை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. அன்றைய தினம் குறித்த மனுவினை இன்றைய தினத்திற்கு திகதியிட்டு நீதவான் ஒத்திவைத்தார்.
அதன் பிரகாரம் இன்றைய தினம் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது , மக்களுக்கு பேச்சு, கருத்து மற்றும் ஒன்று கூடும் சுதந்திரம் உண்டு என என சுட்டிக்காட்டிய நீதவான் , பேரணியில் சுகாதார நடைமுறைகளுடன் மக்கள் கலந்து கொள்ள முடியும் என கூறி மனுவினை தள்ளுபடி செய்தார்.
அதேவேளை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்குள், பேரணிக்கு தடை கோரி சாவகச்சேரி காவல்துறையினரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. #பொத்துவில் #பொலிகண்டி #பேரணி #தடை #சாவகச்சேரி #மல்லாகம் #தள்ளுபடி