யாழில் நடைபெற்ற சுதந்திர கட்சியின் பேரணியில் கலந்து கொண்ட வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுதந்திர தினத்தினை முன்னிட்டு , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் யாழில் நேற்றைய தினம் வியாழக்கிழமை பேரணி ஒன்று நடைபெற்றது.
வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் காவல்துறையினரினால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த இருவர் குறித்த பேரணியில் கலந்து கொண்டுள்ளார்கள் என யாழ்ப்பாண குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.
அதனை அடுத்து பேரணியில் கலந்து கொண்ட இருவரையும் கைது செய்வதற்கு காவல்துறையினர் முயற்சித்த வேளை ஒருவர் தப்பி சென்றுள்ளார். மற்றைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #ஸ்ரீலங்காசுதந்திரகட்சி #பேரணி #வாள்_வெட்டு #கைது