இலங்கையில் நீதித்துறையை அவமதித்துப் பேசிய குற்றத்துக்காக நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பேசியவற்றில் சில விடயங்களில் அரைவாசி உண்மையானவை எனவும், சில விடயங்கள் முழுவதும் உண்மையானவை எனவும் ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
“அவர் கூறிய விடயங்களை துரதிஷ்டவசமாக நாடாளுமன்றுக்கு வெளியே சொல்லி விட்டார். அவ்விடயங்கள் அனைத்தையும் நாடாளுமன்றின் உள்ளே சொல்லியிருந்தால், சட்டத்தால் எதுவும் செய்திருக்க முடியாது” என்றும் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் பதியத்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, தனது உரையின்போதே இவ்வாறே பேசியுள்ளார்.
“நான் கூறும் இந்த விடயங்களை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டாலும் எனக்கு பிரச்சினையில்லை. கொழும்பு – மாதிவெலயில் (நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதி அமைந்துள்ள இடம்) ரஞ்சன் ராமநாயக்க எனது பக்கத்து வீட்டில்தான் இருந்தார். அவர் எங்களின் நண்பர்.
அவர் துரோகி என்றும், கெட்டவர் எனவும் இந்த நாட்டிலுள்ள சிலர் கூறுகின்றனர். ஆனால் எனது தனிப்பட்ட கருத்தின்படி, பழகுவதற்கு அவர் நல்ல மனிதர். நான் அறிந்த வரையில் அவர் யாருக்கும் பிழை செய்யவில்லை.
ஆனால் அவர் கூறிய விடயங்களை துரதிஷ்டவசமாக வெளியில் சொல்லி விட்டார். அவர் பேசிய அனைத்தையும் நாடாளுமன்றத்துக்கு உள்ளே கூறியிருந்தால் – சட்டத்தால் எதுவும் செய்ய முடியாது.
அவர் கூறியவற்றில் சில விடயங்கள் அரைவாசி உண்மையானவை, சில விடயங்கள் முழுவதும் உண்மையானவை” எனவும் ராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்க சொன்னது என்ன?
2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதியன்று ஊடகவியலாளர்களிடம் பேசிய ரஞ்சன் ராமநாயக்க, “இலங்கையிலுள்ள பெரும்பாலான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல் மிக்கவர்கள்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இதனையடுத்து ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு கூறிமை தொடர்பில் அவருக்கு எதிராக இரண்டு நபர்கள் வழக்குத் தாக்கல் செய்தனர். ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு கூறியதன் மூலம், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்புக்குட்படுத்தி, நீதித்துறையை அவமதித்து விட்டதாக, அவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கின் தீர்ப்பு, கடந்த மாதம் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
அதற்கிணங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான சர்ச்சை
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையினை அடுத்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விட்டதாக, நாடாளுமன்ற செயலாளருக்கு சட்டமா அதிபர் கடந்த ஜனவரி மாதம் 18ஆம் திகதி அறிவித்தார்.
இந்த நிலையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி, நீதிமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம்; எதிர்வரும் 12ஆம் திகதி வரையில், ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என, நாடாளுமன்ற செயலாளருக்கு கடந்த வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 5) உத்தரவிட்டுள்ளது.
இலங்கையின் சிங்கள திரைத்துறையில் பிரபல நடிகராகவும் ரஞ்சன் ராமநாயக்க அறியப்படுகிறார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான இவர், சிறைத்தண்டனை பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், 40 லட்சம் ரூபா பணத்தை தனக்கு முன்பாக பரப்பி வைத்துக் கொண்டு, அதனை வசதியில்லாதோருக்கு பகிர்ந்தளிக்கப் போவதாக தனது யூடியூப் சேனலில் தோன்றி அறிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டமைக்கான கொடுப்பனவாக, அந்தப் பணம் தனக்கு கிடைத்ததாக, ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.
BBC