அமைச்சர் விமல் வீரவன்ச பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் கூறியமைக்கு, மன்னிப்புக் கேட்க தான் தயார் என அமைச்சர் விமல் வீரவன்ச பதில் வழங்கியுள்ளார்.
குறிப்பாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவப் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வழங்க வேண்டும் என விமல் அண்மையில் தெரிவித்த கருத்து ஆளும் கட்சிகளுக்கு இடையில் தற்போது கடுமையான முரண்பாட்டினை எற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கட்சியை மேலும் பலப்படுத்தவே தான் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிவித்துள்ள விமல்வீரவன்ச, தகுந்த காரணங்கள் சிலவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது மகிந்த அலை உருவாக முன்னின்று உழைத்தவன் தான் எனவும் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பாடுபட்டோரில் தானும் ஒருவன் எனவும் கூறியுள்ள அவர் இவை தவறாயின் தான் மன்னிப்புக் கேட்க தயார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நீர்க்கொழும்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். #விமல்வீரவன்ச #மன்னிப்பு #கோட்டாபய_ராஜபக்ஸ