பொழுதுபோக்கிற்காகவும் மகிழ்வூட்டல்களுக்காகவும் தோற்றம் பெற்ற ஆற்றுகைக் கலைகள் தற்காலத்தில் பொழுதுபோக்கு மற்றும் மகிழ்வூட்டலாக மாத்திமின்றி சமூகத்தில் நிகழ்கின்ற பிரச்சினைகளை நகைச்சுவைக்கூடாக மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வருகின்ற ஆற்றுகைகளாகவும்; காணப்படுகின்றது. கேலிச் சித்திரங்களின் மூலம் அதிகாரிகளின் அதிகார அடக்குமுறைகள் மற்றும் அரசியல் சார் பிரச்சினைகளை வரைகின்ற தன்மை தற்காலத்தில் காணப்படுகின்றது. அத்தன்மை போன்றே பாரம்பரிய ஆற்றுகைகளும் தற்காலத்தில் நிகழ்த்தப்படுகின்ற போது அது சமூகம் சார் பிரச்சினைகளை கேள்வி கேட்கின்ற விதத்திலும் வெளிக் கொண்டுவருகின்ற விதத்திலும் அமைகின்றது.
ஆற்றுகை மூலமான நகைச்சுவைக்கூடாக ஒருவரைக் கேலி செய்கின்ற போதோ அல்லது அவரது செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டுகின்ற போதோ அவர் ஆற்றுகையாளருக்கு தண்டனை வழங்க முடியாத போக்குக் காணப்படுகின்றது. ஏனெனில் ஆற்றுகையில் குறிப்பிட்ட நபர் தொடர்பான குறியீடுகள் மட்டும் காட்டப்படுமே தவிர தனி ஒருவரை பாதிக்கும் வகையில் ஆற்றுகை அமையாது. இதனடிப்படையில் சமூக அரசியலானது நகைச்சுவையான உரையாடல்கள் மற்றும் அங்கத நடிப்பின் ஊடான ஆற்றுகையின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.
இவ்வாறான சமூக அரசியல் கலந்த அங்க நடிப்பானது மகிடி ஆற்றுகையில் வெளிப்படும் விதம் பற்றிய எனது அனுபவப் பகிர்வுகள் பின்வருமாறு அமைகின்றது. மகிடிக் கூத்தானது மந்திரங்களால் நடாத்தப்படுகின்ற ஒரு சடங்கம்சமாகும். எந்த சமூகத்தில் ஆற்றுகை நிகழ்த்தப்படுகின்றதோ அந்த சமூகத்தினரின் பாரம்பரியமானதும்இ கடவுள் நம்பிக்கைக்கு உரியதாகவும் அமைகின்றது. இருப்பினும் இவ்வாறான சடங்கு சார் அம்சங்கள் மக்களுக்கான மகிழ்வூட்டல் தன்மைகள்; கொண்டதாகக் காணப்படுகின்றது.
நாங்கள் ஆற்றுகை செய்த மகிடி ஆற்றுகையானது மகிழ்வூட்டலுக்கூடாக அதிகாரிகள் மற்றும் உயர் அந்தஸ்த்தில் உள்ளவர்களது தவறான செயற்பாடுகளைக் கேலி, கிண்டல்களுக்கூடாக மக்கள் மத்தியில் வெளிக்கொணர்வதாகவும் அது சார் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது. அது சமூகம் சார் பல விடயங்களைப் பேசியது. மகிடி ஆற்றுகை எந்த சூழலில் நிகழ்த்தப்படுகின்றதோ அந்த சூழ்நிலையைச் சித்தரிக்கின்ற வகையில் ஆற்றுகை செய்யப்பட்டது. மகிடி ஆற்றுகையானது தெய்வங்கள், முனிவர்கள், பூசை முறைகள் போன்ற சடங்கு அம்சங்களைக் கொண்டிருந்தாலும் அதிகாரத்தில் உள்ளவர்களையும், முனிவர்களையும் பகிடி செய்வதான விடயங்களினூடாக அவர்களது தவறான மற்றும் போலியான செயற்பாடுகளை வெளிப்படுத்தும் வகையிலும், சமூகங்களுக்கு நல்ல கருத்துக்களை கூறும் வகையிலும் அமைந்திருந்தது.
உடையார்இ விதானையார், பொலீஸ் அதிகாரி, முனிவர்கள், குறவர்கள் போன்றோர்களின் மூலமே இவ் மகிடி ஆற்றுகையானது கேலி;இ கிண்டல்கள் நிறைந்த நகைச்சுவை ஆற்றுகையாகவும் அந்த மகிழ்வூட்டலுக்கூடாக அதிகார அரசியலை வெளிப்படுத்தும் ஆற்றுகையாகவும் பார்க்கப்படுகின்றது. நகைச்சுவையான உரையாடலுக்கு ஏற்ற வகையில் அவர்களது செயற்பாடுகள் அங்கத நடிப்பாக வெளிப்படுத்தப்பட்டது.
மகிடிக் கூத்தில் உடையார் என்பவர் அதிகாரம் செலுத்தும் ஒருவராகக் காணப்படுகின்றார். இவருடைய பாத்திரப்படைப்பானது உடையாருடைய வேலைகளையும், அதிகாரத்தினையும் கேள்வி கேட்கும் முகமாகவும் சமூகங்களில் காணப்படும் அதிகாரிகளையும் பணம் படைத்தவர்களையும் கேலி செய்யும் வகையில் அங்கத நடிப்பாக அமைகின்றது. உடையார் என்ற பாத்திரம் விதானையார், பொலீஸ் அதிகாரி என்ற பாத்திரத்திரங்களினூடாக கேலிக்கைக்குரிய பாத்திரமாகக் காட்டப்பட்டுள்ளது. அத்தோடு உடையார் தன்னுடைய அதிகாரத் தன்மையை விதானையார், பொலிசாரிடம் திணிப்பதும், தான் பெரியவர் என்பதனை நிரூபித்துக் கொண்டிருப்பதையும் அங்கத நடிப்பினூடாக இந்த ஆற்றுகையில் காணலாம்.
எடுத்துக்காட்டாக:-
மேல எழுதவா கீழ எழுதவா.
நீ பெரியாளா நான் பெரியாளா.
இறந்து கிடக்கும் சீடப் பிள்ளைகளை பார்த்து சீச்சி நாறுது இது யார் தூக்குறது நான் பெரியாள் எப்படி தூக்குவேன்.
போன்றவை உடையாரின் அதிகாரத்தினைக் காட்டும் வகையில் ஆற்றுகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போதான நடிப்பு முறைகளினூடாக இவ் ஆற்றுகையானது சடங்குசார் அம்சங்களில் இருந்து விடுபட்ட சமூக அரசியல் கலந்த அங்கத நடிப்பாக நகைச்சுவைக்கூடாக வெளிப்படுத்தப்பட்டது.
இவ்வாறு உடையார் கூறும் போது சமூகத்தில் உள்ள முதலாளிகளுடைய மறைமுகமான அதிகாரங்கள் கேலி, கிண்டல்களுக்கூடாக ஆற்றுகையாளர்களின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. உடையார் என்பவர் சமூகத்தில் மதிக்கப்படுபவர், அதிகார முடையவர் ஆனால் இங்கு தனக்குத்தான் குடை பிடிக்கவேண்டும், தான் மட்டும்தான் கதிரையில் அமர வேண்டும், தான் எந்த வேலைகளையும் செய்யமாட்டார் என்பதன் மூலம் இவரது செயற்பாடுகள் நகைச்சுவைகளாகவும் அது மக்களை சிரிக்க வைத்தலினூடாக சிந்திக்க வைப்பதாகவும் அமைகின்றது.
உடையார் கதிரையில் இருக்க வரும்போது விதானையார் கதிரையை இழுத்துவிடுவதும், விதானையார் கதிரையில் இருக்கும் போது உடையார் அவரை அடிக்கப்போவதும், உடையார் மேல எழுதவா, கீழ எழுதுவா என்று கேட்டுவிட்டு மேலே என்று கூற முதுகுப் புறத்தை விதானையார் அல்லது பொலிஸ் அதிகாரி காட்ட அதில் வைத்து எழுதுவதும். கீழே என்றதும் தரையில் விழுந்து கிடந்து எழுதுவதும் நதைச்சுவையாகக் காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் உனக்கு யார் வேலை தந்தது என்று உடையார் கேட்கும்போது ‘அவரவர் அவர் தான் தந்தவர்’ என்று சொல்லி விதானையார் உடையாரைச் சமாளிப்பதும். சாமிகளின் பெயர்களைக் கூறி உடையாரைத் திடுக்கிடச் செய்வதும், குறவர்களிடம் நாறுது நாறுது என்று சொல்லிக் கொண்டு ஓடுவதும் நகைச்சுவையான உரையாடலாகவும், நடிப்பாகவும் அனைவரையும் சிரிக்கவைப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது.
மகிடிக் கூத்தில் குறவர்களின் பங்கு மிக முக்கியமானது. இங்கு தாழ்த்தப்பட்ட சமூகம் என கருதப்படும் குறவர்களை அவர்களுடைய நையாண்டி நடிப்புக்கள் மூலம் சமூகத்தில் வெளிக்கொணர்வதாக அமைகின்றது. குறவர்கள் சத்தம் போட்டுக் கொண்டு ஓடித் திரிவதும்இ விதானையார் குறப்பெண்னை பகிடிசெய்து அவள் பின்னால் செல்வதும்இ உடையார், பொலீஸ் அதிகாரி, விதானையார் போன்றோர்கள் வருவதைக் கண்ட குறவர்கள் பயந்து ஓடிப்போய் தங்கள் பந்தலில் அமர்வதும் நகைச்சுவையான நடிப்பாக அமையும். அத்துடன் சீடப்பிள்ளைகள் யாகம் வளர்க்கும் போது குறவர்கள் சென்று அவர்களின் தலையைப் பிடித்து இழுப்பதும், மூக்கைக் கிள்ளுவதும்இ அவர்களைத் தொல்லை செய்வதும் நகைச்சுவையான விடையங்களாகக் காணப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சடங்கு அம்சங்கள் உடைய மகிடி ஆற்றுகையானது சமூக அரசியல் கலந்த அங்கத நடிப்பை உடைய ஆற்றுகையாகப் பார்க்கப்படுகின்றது.
முனிவர்கள் எல்லோராலும் வணங்கத்தக்கவர்கள் ஆனால் இங்கு கேலிக்கைக்குரிய பாத்திரங்களாக அமைகின்றனர். போசடாமுனி, அவரது சீட முனி, வெறும் முனி போன்ற முனிகள் இங்கு காட்டப்பட்டுள்ளனர். இவர்களது செயற்பாடுகள் பார்வையாளர்களான பொதுமக்களை சிரிக்கவைக்கின்றன. முனிவர்கள் தெய்வம் வரப்பெற்று ஆடுவது கடவுள்சார் நம்பிக்கைக்குரிய விடயமாகும். ஆனால் இங்கு கேலி, கிண்டலுக்குரிய நகைச்சுவையான நடிப்பாகக் காட்டப்பட்டுள்ளது. போசடா முனிக்கு உடலில் வித்தியாசமான அங்கங்களை காட்டுவதும். சீடப்பிள்ளை போசடா முனிக்கு வாழைப்பழம் கொடுத்து ஏமாற்றுதல், அவரை சுற்றி வணங்கும் முறைகள், அவரது காலுக்குக் கீழாக செல்வது போன்ற விடயங்களும் நகைச்சுவைத் தன்மையுடைய அங்கத நடிப்பாக அமைகின்றது.
இவ்வாறாக மந்திர தந்திர விளையாட்டுக்களைக் கொண்ட மகிடி ஆற்றுகையானது உடையார், விதானையார் பொலிஸ் அதிகாரி குறவர்கள், முனிவர்கள் போன்றோர்களின் நகைச்சுவையான செயற்பாடுகள் மூலமும் விளையாட்டுக்கள் மூலமும் கேலியும் கிண்டலும் நிறைந்த ஒரு ஆற்றுகையாகவும் சமூக அரசியல் கலந்த அங்கத நடிப்பை வெளிப்படுத்துகின்ற ஆற்றுகையாகவும் காணப்படுகின்றது.
குமரகுரு நிலுஜா
கிழக்குப்பல்கலைக்கழகம்
(நுண்கலைத்துறை)