இந்த உலகத்தில் மனிதர்களும் இயற்கையும் எதிர்நோக்கி வரும் சவால்கள் அனைத்தையும் கடந்து மனிதர்கள் இயற்கையுடன் இணைந்து மகிழ்வாகவும், சமத்துவமாகவும், சுதந்திரமாகவும், நீதியாகவும், ஆக்கபூர்வமாகவும் வாழுவதற்கான அர்த்தபூர்வமான நடவடிக்கைகள்; பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினைக் காண்கின்றோம்.
குரோதம், வெறுப்பு, பழிக்குப்பழி என்கின்ற குணாதிசயங்களை வலுவிழக்கச் செய்து கொண்டு ஒவ்வொரு உயிர்களினதும் பெறுமதியினை வலியுறுத்தி அன்பையும், சமாதானத்தையும், சமத்துவத்தையும் நிலை நிறுத்தும் வகையில் உலகந்தழுவி பெண்ணிலைவாதிகளின் இடையறாத போராட்டம் தொடர்ந்து வருகின்றது. ஆதிக்கம், அதிகாரம், அடக்குமுறை எனும் பல்வேறு சவால்களையும் அவற்றினால் விளையும் தாக்குதல்கள் பலவற்றையுமந் தாண்டி விழ விழ எழுந்து வளரும், பகுத்தறிவுள்ள மனிதர்கள் எவராலும் நிராகரிக்க முடியாத கேள்விகளுடன் பெண்ணிலைவாதிகள் பயணஞ்செய்து வருகின்றார்கள்.
எனவே இந்த உலகில் அமைதியையும், சமாதானத்தையும், சமத்துவத்தையும், நீதியையும், அன்பையும், மகிழ்ச்சியையும் விரும்புகின்ற ஒவ்வொரு இதயங்களும் பெண்ணிலைவாதம் பற்றியும் பெண்ணிலைவாதச் செயல்வாதங்கள் பற்றியும் ஆழமாகவும் ஆத்மார்த்தமாகவும் விளங்கி உணர்ந்து அச்செயல்வாதங்களுடன் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக உணரப்படுகின்றது.
இன்றைய சூழலில் உலகின் வௌ;வேறு இடங்களிலும் பல்வேறு பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்கள் இயங்கிக்கொண்டிருக்கும் எதார்த்தத்தில் இத்தகைய பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்களையும் அவர்களுடைய நடவடிக்கைகளையும் ஓரணியில் திரளச்செய்யும் உலகந்தழுவிய பொதுச் செயற்பாடாக நூறு கோடி மக்களின் எழுச்சி எனும் செயல்வாதம் இடம்பெற்று வருவதனைக் காண்கின்றோம்.
2013 ஆம் ஆண்டிலிருந்து நூறு கோடி மக்களின் எழுச்சி எனும் செயல்வாதம் உலகம் எங்கும் பெப்ரவரி 14 ஆந் திகதி கொண்டாடப்பட்டு வருவதனைக் காண்கிறோம். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருளில் இச்செயல்வாதம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த வகையில் இந்த 2021 ஆம் வருடத்திற்கான தொனிப்பொருளான ‘பெண்களுக்கும் பூமித்தாய்க்கும் எதிரான வன்முறைகள் அற்ற வாழ்தலைக் கொண்டாடுவோம்! எழுச்சி கொள்வோம்!’ என்பதன் அடிப்படையில் மரபு ரீதியான உணவுகளை நஞ்சற்ற முறைகளில் உற்பத்தி செய்வோம்! தோட்டங்கள் செய்வோம்!, உடல் உள வலுமிக்கவர்களாய் நோய்களின் அச்சம் அற்றவர்களாய் வாழ்வோம்! எனும் செயற்பாடுகளைப் பிரதானப்படுத்தி முன்னெடுக்கப்படுவதனைக் காண முடிகின்றது.
இன்று உலகில் வாழும் மனிதர்கள் எதிர்கொள்ளும் பாரிய அச்சுறுத்தலாக பாதுகாப்பற்ற உணவுப் பயன்பாடு காணப்படுவதாகக் கண்டறியப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கான உணவும், மருத்துவமும் ஏகாதிபத்திய வணிகமாக்கப்பட்டதன் விளைவாகவே உணவுப்பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மனிதர் உண்ணும் உணவில் செயற்கையான இரசாயனக் கலவைகளும், இயற்கைக்கும், இயல்புகளுக்கும் மாற்றான மரபணுமாற்ற உற்பத்திகளின் அதிகரிப்பும் மனிதருக்கு மருந்தாக இருந்து வந்த உணவை நஞ்சாக மாற்றியுள்ளது. இதன் காரணமாக சிறு பராயத்திலிருந்தே மனிதர்கள் பல்வேறு தொற்றா நோய்களுக்கு உட்பட்டுத் தமது வாழ்நாளை நோயாளிகளாகவே வாழ்ந்து நிறைவு செய்யும் துர்ப்பாக்கியம் அதிகரித்து வருகின்றது.
தமது வாழ்நாளில் வௌ;வேறு ஆக்கபூர்வமான காரியங்களுக்காகப் போராட வேண்டிய, புத்தாக்கச் சிந்தனைகளுடன் இயக்கங் கொள்ள வேண்டிய மனிதர்களின் மிகப்பெரும்பாலானோர் தமக்கு ஏற்பட்டுள்ள நோய்களுடன் போராட வேண்டிய அவலம் அதிகரித்து வருகின்றது. இந்த அவலம் இந்த உலகத்தின் மனித குலத்தினுடைய எதிர்கால இருப்பையும் அதன் தொடர்ச்சியையும் கேள்விக்குரியதாக ஆக்கி வருகின்றது.
இத்தகைய உலகளாவிய மனிதப் பேரவலத்திலிருந்து ஒவ்வொரு மனிதரையும் இனி வரப்போகும் எதிர்கால மனிதர்களையும் பாதுகாக்கும் நோக்குடன் மரபு ரீதியான உணவுகளை நஞ்சற்ற முறைகளில் உற்பத்தி செய்வதற்கேதுவாக சிறு தோட்டங்கள் செய்து வாழும் வாழ்க்கைக்கு இட்டுச்செல்வதனை நோக்கமாகக் கொண்டு இவ்வருடத்திற்கான நூறு கோடி மக்களின் எழுச்சிச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இச்செயற்றிட்டமானது மரபணு மாற்றம் செய்யப்படாத பாரம்பரிய விதையினங்களை மீள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதைப் பிரதானப்படுத்திய செயற்பாடுகளை மையமாகக் கொண்ட கலந்துரையாடல், கலையாக்க வெளிப்பாடுகள் ஊடாகவும் குறிப்பாக அனைவரும் சிறு தோட்டங்களையாவது செய்தலையும், மரம் நடுதலையும் பிரதானப்படுத்தியும் மேற்கொள்ளப்படுவதாக முன்னெடுக்கப்படுகின்றது. விசேடமாக இப்பூமியின் வருங்காலத் தலைமுறைகளான இன்றைய சிறுவர்களிடையே இத்தகைய செயற்பாட்டை ஊக்குவிக்கும் செயல்வாதமாக நடைபெற்று வருகின்றது.
நூறு கோடி மக்களின் எழுச்சியில் பங்கெடுக்கும் மனிதர்கள் உலகந்தழுவிய வகையில் தாம் சார்ந்த இயங்கு தளங்களில் தனியாகவும் குழுவாகவும் இச்செயல்பாட்டில் பங்கெடுப்பதாக இது இடம்பெற்று வருகின்றது. இந்தவகையில் மட்டக்களப்பில் மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழுவினரும், சமதை பெண்கள் குழுவினரும் மரபுரீதியான விதையினங்களைக் கண்டறிதல் அவற்றை வீட்டுத் தோட்டங்களில் பயிரிடுதல், இது தொடர்பில் சிறுவர்களோடு கலையாக்கங்களுடாகத் தொடர்பு கொள்ளுதல், நடைமுறைப்படுத்துதல் மூலமாகவும்,
யாழ்ப்பாணத்தில் வல்லமை சமூக மாற்றத்துக்கான இயக்கத்தினர் தெருவெளி ஆற்றுகை ஊடாக விதைகளையும் பயிர்களையும் பகிரும் நடவடிக்கையினையும், மன்னாரில் ‘எங்களால் முடியும்’ மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு, மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினருடன் தமது தோட்ட உற்பத்தி வளாகத்தில் சுவர் ஓவியங்களை வரைதல் மற்றும் பயிரிடல் ஊடாகவும், முல்லைத்தீவில் வீட்டுத் தோட்டங்களை மேற்கொண்டு வரும் தமிழ் முஸ்லிம் பெண்கள் தாம் மேற்கொண்டு வரும் நஞசற்ற பயிர்களையும் விதைகளையும் பொது இடம் ஒன்றில் காட்சிப்படுத்தி பிரச்சாரம் செய்வதாகவும், புத்தளத்தில் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தினர் கலந்துரையாடல் ஊடாக இது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அக்கரைப்பற்று பெண்கள் அரங்கத்தினர் பயிர் பகிர்தல் நடவடிக்கையூடாகவும் தமது வளாகத்தில் போட்டம் மேற்கொள்வதாகவும், அனுராதபுரம், மாத்தளை, மாத்தறை போன்ற மாவட்டங்களில் ‘சாவிஸ்திரி’ எனும் அமைப்பினர் வீட்டுத்தோட்டங்களில் இச்செயற்பாட்டை ஊக்கப்படுத்துவதாகவும், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிலாளர்களுடன் வேலை செய்யும் ‘ஸ்டான்ட் அப்’ இயக்கத்தினர் பயிர் பகிர்தலும் கலந்துரையாடல் மூலமாகவும், ஹற்றனில் சமூக நலன்புரி மன்றத்தினரின் ஏற்பாட்டில் நூறு பெண்கள் பழமரக் கன்றுகளுடன் ஊர்வலம் சென்று தத்தமது தோட்டங்கிளல் அவற்றை நடுவதாகவும், தோட்டங்களில் விழிப்புணர்வை மேற்கொள்வதாகவும் இச்செயல்வாதத்தினை பெப்ரவரி 14 ஆந் திகதி முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளார்கள் என்பதை அறியக் கிடைக்கின்றது.
நூறு கோடி மக்களின் எழுச்சி எனும் நிகழ்ச்சித் திட்டமானது கலையாக்க வழிமுறைகளைப் பிரதானமான சாதனமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு எதிரான
3வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் நோக்குடன் நடைபெறும் இச்செயற்றிட்டத்தில் ஆக்கபூர்வமான சிந்தனையுடன் வாழும் பல்வேறு மனிதர்களும் ஆத்மாத்தமாகப் பங்குதாரர்களாக இணைந்து கொள்ள கலையாக்க உத்திகள் பெரும் வாய்ப்புக்களை வழங்கியுள்ளமை கவனத்திற்குரியது. குறிப்பாகப் படைப்பாக்கத் திறனுள்ள இளந்தலைமுறைக் கலைஞர்கள் பலர் இச்செயல்வாதத்தில் தம்மை இணைத்து செயற்பட்டு வருகின்றார்கள் உதாரணமாக மட்டக்களப்பில் வன்முறைக்கு எதிரான ஓவியர்கள் என்ற பெயரில் இளம் ஓவியர்கள் பலர் இணைந்து தமது படைப்பாக்கங்களுடாக வன்முறைக்கு எதிரான தமது படைப்புக்களை பொது வெளியில் பகிர்ந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த ஓவியர்கள் குழுவின் உருவாக்கமானது நூறு கோடி மக்களின் எழுச்சிக்கான பிரச்சாரத்தை மையமாகக் கொண்டே இடம்பெற்றுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
மட்டக்களப்பில் மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு, சமதை பெண்கள் குழு, சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினர், அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு, வன்முறைக்கு எதிரான ஓவியர்கள் குழு எனப் பல பெண்ணிலைவாதச் செயற்பாட்டார்கள் நூறு கோடி மக்களின் எழுச்சிக்கான பிரச்சாரச் செயல்வாதங்களில் 2013 ஆம் வருடத்திலிருந்து தொடர்ச்சியாகச ஈடுபட்டு வருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது.
இந்தவகையில் இந்த ஆண்டு கொரொனா அனர்த்தச் சூழலில் பாரம்பரியமான, மரபணு மாற்றம் செய்யப்படாத உள்ளுர் விதையினங்களைப் பரவலாக்கம் செய்யும், அதனைப் பயிரிட்டு பயன்பெறும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலான ஆக்கபூர்வமான காரியங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விசேடமாக சிறுவர்களிடையே இந்த விதையினங்கள் பற்றிய கவனிப்பையும் அக்கறையினையும் தூண்டும் வகையில் வீட்டுத் தோட்டம் செய்தல் அதனை மையமாகக் கொண்டு ஓவியங்கள் வரைதல், பாடல்களாக்கிப் பாடுதல் எனும் கலையாக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முன்னெடுப்புக்களின் ஆற்றுகையாக பெப்ரவரி 14 ஆந் திகதியன்று நூறு கோடி மக்களின் எழுச்சியில் இவ்விடயங்கள் பிரதானமாக இடம்பெறவுள்ளன.
து.கௌரீஸ்வரன்