தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் மர நடுகை நிகழ்வில் ஈடுபட்டமைக்கு, ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன.
பாடசாலைகளில் நடத்தப்படும் அனைத்து விழாக்களையும் மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்குமாறு கல்விச் செயலாளர் உத்தரவிட்டுள்ள விடயத்தையும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாடசாலைகளில் நடத்தப்படும் அனைத்து விழாக்களையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு அனைத்து மாகாண வலய, கல்வி அதிகாரிகள, மற்றும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் நேற்றைய தினம் அறிவுறுத்தியிருந்தார்.
தொற்று நிலவும் ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு மத்தியிலும் பல்வேறு பாடசாலைகள் பல்வேறு விழாக்களை நடத்தி வருவதாகவும், விழாக்களை ஒழுங்கு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார்.
நாட்டில் நிலவும் தொற்றுநோயை எதிர்கொண்டு கல்விச் செயலாளர் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்த மாகாண கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று வலியுறுத்தியுள்ளது.
கொரோனா பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
பாடசாலை விழாக்கள் உட்பட வேறு எந்த வெளிப்புற செயற்பாடுகளையும் நடத்தக்கூடாது என க் கூடாது கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தாலும், அதனை மீறி பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாக ஊடக அறிக்கை ஊடாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 12ஆம் திகதி, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கண்டியில் அமைந்துள்ள கெங்கல மகா வித்தியாலயத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன் ஒரு விழாவை நடத்தியிருந்ததாக ஜோசப் ஸ்டார்லின் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பாடசாலையின் நான்கு மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்ததாக ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அதிகாரிகளிடம் இதுத் தொடர்பில் முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளது.
இவ்வாறான ஒரு சூழலில் பாடசாலைகளில் நடத்தப்படும் அனைத்து விழாக்களையும் மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்குமாறு அனைத்து மாகாண, வலய கல்வி அதிகாரிகள், பிரிவினாக்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். #கெஹலிய #மரநடுகை #பாடசாலை_நிகழ்வு #தடை #தனிமைப்படுத்தல்_விதிமுறை #கொரோனா