பருத்தித்துறை – மருதங்கேணி வீதி தரமற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபை அக்கறை எடுத்து விரைந்து புனரமைப்பு பணியில் ஈடுபடுமாறு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் பரிந்துரை செய்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தையும் ஏனைய பிரதேசங்களையும் இணைக்கும் குறித்த பிரதான வீதி யுத்த காலத்தில் மிக மோசமாக சேதமடைந்த நிலையில் நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் இருந்தது.
மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைவாக , அம்பன் தொடக்கம் மருதங்கேணி வரையிலான வீதி முதல் கட்டமாக புனரமைப்பு செய்து காப்பெற் வீதியாக சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நான்கு வருடங்கள் ஆகியும் சீரமைப்பு பணிகள் முழுமை பெறவில்லை.
இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட காப்பெற் வீதி மோசமாக சேதமடைந்து வருகின்றது. வீதி முழுமையாக சீரமைக்க முதலே , சீரமைக்கப்பட்ட பகுதிகள் சேதமடைந்து வருவதனால் அது குறித்த உரியவர்கள் கவனம் செலுத்தி தரமான வீதி அமைக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி இருந்தனர்.
அந்நிலையில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் குறித்த வீதி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை பரிந்துரைத்த நிலையில் , இன்றைய தினம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சென்று புனரமைப்பு பணி தொடர்பில் ஆராய்ந்த நிலையில், பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். #பருத்தித்துறை #மருதங்கேணிவீதி #வீதிஅபிவிருத்திஅதிகாரசபை #அங்கஜன்_இராமநாதன்