இயற்கையழகு கொஞ்சும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவளையில் இசைப் பாரம்பரியம் மிக்க கலைக் குடும்பத்தில் கலைமாமணி பொன்னையா சின்னத்தங்கம் தம்பதியினருக்கு புத்திரிகளாக 1953ம் ஆண்டு ஆடி மாதம் 18ம் திகதி புவனேஸ்வரியும், 1955ம் ஆண்டு ஆனி மாதம் 15ம் திகதி பார்வதிதேவியும் அவதரித்தனர். இவர்களுக்கு இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உண்டு.
முள்ளியவளைக் கிராமத்தில் கலையை வளர்த்தவரான, இவரது தந்தையார் பொன்னையாபிள்ளை தனது பிள்ளைகளை கலையில் வளர்த்துவிட வேண்டும் என்று நினைத்து முல்லைச்சகோதரிகளின் தமையனான பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு மிருதங்கத்தையும், முல்லைச்சகோதரிகளான புவனா, பார்வதிதேவி இரண்டு பேருக்கும் வாய்ப்பாட்டையும், மற்றைய சகோதரி இந்திராணி அவர்களுக்கு வயலினையும், அடுத்த சகோதரி புஷ;பராணிக்கு அவர்களுக்கு மிருதங்கத்தையும் பழக்க தந்தையார் ஆசியரை தெரிவு செய்து இவர்களைக் கலைப்பயணத்தில் தொடர விட்டார்.
காலப்போக்கில் ஈழத்திலே தலை சிறந்த மெல்லிசைப் பாடல்களைப் பாடி பிரபலமடைந்த முல்லைச் சகோதரிகள் கர்நாடக இசையிலும், பண்ணிசையிலும் சிறப்பு மிக்கவர்களாகவும் இருந்தனர். சிறுமிகளாக இருக்கும் போதே ஆலயங்களில் தேவாரம் ஓதும் வழக்கம் உடையவர்கள். அத்துடன் இசை, நடனம், மற்றும் நாடகம் போன்ற கலைகளில் பிறப்பிலிருந்து ஆர்வமுடையவர்களாக பல மேடைகளில் தங்களுடைய திறமைகளையும் வெளிக்காட்டியுள்ளனர். நடனக் கலையையும் பயின்ற இவர்கள் கூடுதலாக இசையை மேம்படுத்தி படித்தனர். அத்துடன் 9 வது வயதில் மேடைகளில் பாடினார்கள்.
2
இவர்களது 12 வது வயதில் புவனா, பார்வதிதேவி இருவரையும் சேர்த்து 1962ம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் முள்ளியவளை இயல், இசை, நாடகக் கலாமன்றத்தின் ஸ்தாபகரும் கௌரவ பொதுச் செயலாளருமான சிவநேசன் எஸ்.வி.கந்தையா அவர்களால் இவர்களுக்கு ‘முல்லைச்சகோதரிகள்’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை முல்லைச்சகோதரிகள் என அழைக்கப்படுகின்றனர்.
முல்லைச் சகோதரிகள் என்ற பெயருடன் பல மேடைகளில் கச்சேரிகள், நடனங்களைச் செய்தனர். பின்னர் 1970ம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பாடி அகில இலங்கை ரீதியாக 2ம் இடத்தைப் பெற்றார்கள். இவ்வாறாக இசை உலகில் கால் பதித்தார்கள்.
ஈழத்தில் எழுந்த மெல்லிசைப் பாடல்களை தமது குரலில் 13 வருடங்களாக முல்லைச் சகோதரிகள் பாடி வந்தனர். இவர்கள் பாடியபாடல்கள் மூலம் ஈழத்து மக்கள் அனைவருக்கும் இவர்களைப் பற்றி அறியக் கூடிய சந்தர்ப்பம் உருவாகியது. முல்லைச் சகோதரிகளின் பாடல்களைக் கேட்பதற்கென மிகுந்த ஆர்வத்துடன் மக்கள் இருந்து வந்துள்ளனர்.
பாமர மக்களையும் இசையால் கட்டுண்டு பிரமிக்க வைக்கும் திறன் இவர்களின் தனிச்சிறப்பாகும். சபையிலுள்ள ரசிகர்களின் ரசனையை உணர்ந்து பாடும் திறன் உடையவர்கள். ஒவ்வொரு இசை நிகழ்விலும் எத்தனை வினோதங்கள், எத்தனை புதிய சங்கதிகள், இராக வினோதங்கள், பாடலின் பொருள், உணர்ந்து பாடும் பாவம், ஸ்வரங்களின் கோர்வைகள், சுருதிகள் என்பவற்றையும் அதன் தனித்துவத்தையும் பேணி பார்வையாளர்களை இசையின்ப வெள்ளத்தில் மூழ்கச் செய்வார்கள்.
இவ்வாறாக இவர்களின் கலை வாழ்வு பரந்து விரிந்து பிரபலமானது. காலப்போக்கில் யுத்தத்தில் இடம்பெயர்ந்து பல இன்னல்களைச் சுமந்து முல்லை சகோதரிகளில் ஒருவரான பார்வதிதேவி இவ்வுலகை விட்டுச் சென்றார். யுத்தம் முடிவடைந்து வாழ்வில் பல துன்பங்களைச் சந்தித்தும் இன்றுவரை தமது கலைப்பயணத்தை முல்லைச் சகோதரியிலொருவரான புவனா இரத்தினசிங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இவரது குரலில் வெளியான படைப்புக்களாக 2010ம் ஆண்டில் கண்ணகி அம்மன் பக்தி பாடல்கள் பாகம் – 1 என 12 பாடல்களைக் கொண்ட ஓர் தொகுதியும் இவரது சொந்தக் குரலில் பாடி வெளியிடப்பட்டது. இவற்றிற்கு இசைவாணர் கண்ணன் அவர்களும் இசையமைப்பாளர் முரளி அவர்களும் இசை வழங்கியுள்ளார்கள். இவ் இறுவெட்டுக்கள் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்டது.
அத்துடன் திருகோணமலை ‘சல்லி முத்துமாரியம்மன்’ கோயிலிற்காக அருணா இசைக்குழுவில் இந்திய இசை அமைப்பாளர் மணிசர்மாவின் இசையில் பல பக்திப் பாடல்களைப் பாடி இறுவெட்டாக வெளியிட்டுள்ளார். ஸ்ரீ குமுழமுனை ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் மீது
‘இசை மாலை’ என்னும் பெயரில் ஒரு இசைத் தொகுப்பை பாடி இறுவெட்டாக வெளியிட்டுள்ளார். முள்ளியவளை கல்யாண வேலவர் மீது ‘இசையமுதம்’ என்னும் பெயரில் வெளிவந்த இறுவெட்டிலும் கல்யாண வேலவரின் அழகுச் சிறப்பினை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. காட்டு விநாயகர் ஆலயத்தின் மீதும் பாடல்கள் பாடி இறுவெட்டாக வெளியிட்டுள்ளார். முல்லைத்தீவு வட்டுவாகல் ஏழு கன்னிமார் ஆலயத்தின் மீது வெளியான இறுவெட்டிலும் முல்லைச் சகோதரி புவனா இரத்தினசிங்கம் அவர்கள் பல பாடல்களைப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் இளைய தலைமுறையினரிடம் கேட்டுக் கொள்வது யாதெனில் ‘எந்தவொரு விடயத்தையும் செய்யும் போது ஓர் ஆர்வம் வரவேண்டும். எல்லா மனிதர்களுக்குள்ளும் கலைத்துவம் உள்ளது. எனவே எல்லா சிறார்களும் பாடசாலைக் காலத்திலிருந்தே கலைத்துவத்தைப் பேணி மனதார விரும்பி, இறையாசியுடன் கலையை வளர்க்க வேண்டும்.’ என்பதாகும். இவர் தனது வாழ்நாளை கலைக்காக அர்ப்பணித்ததுடன் தொடர்ந்தும் கலை வளர்க்க உதவி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முல்லைச் சகோதரிகளுக்கு வழங்கப்பட்ட பட்டங்களும், கொளரவங்களும்
1962ல் முல்லைச் சகோரதிகள் எனும் பட்டத்தை பெற்றுக் கொண்டனர்.
1970ல் இலங்கை வானொலியில் அகில இலங்கை கர்நாடக இசையில் 2வது இடத்திற்கான சான்றிதழ் பெற்றுக் கொண்டனர்.
1978ல் யாழ் மயிலணிக் கந்தசாமி கோவிலால் ‘மெல்லிசைச் சுகந்தம்’ என்னும் பட்டத்தினை சூட்டி கௌரவித்தார்கள்.
2004ல் அநநெறி பாடசாலை சைவ மங்கையர்க்கழகத்தால் நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.
2006ல் முள்ளியவளை கல்யாணவேலவர் தேவஸ்தானத்தில் ‘புராண இசையரசி’ என்னும் பட்டத்தைப் பெற்றனர்.
2009ல் வவுனிய் தமிழ்ச் சங்கத்தினால் ‘மதுரை இசைக் கோகிலம்’ என்ற பட்டம் பெற்றனர்.
2013ல் நவோதய இளைஞர் அமைப்பினால் மங்கையர் குலதிலக ‘சங்கீத சானவித்தகி’ என்ற பட்டத்தையும் பெற்றார்.
2015ல் வடக்கு மாகாண முதலைமைச்சர் விருதும், நு-ஊவைல ஆங்கில கல்லூரியினால் ‘இசைப்பேரொளி’ விருதும் கிடைக்கப் பெற்றது.
2016ல் முல்லைத்தீவு மாவட்ட வன்னிக்குறோஸ் கலாசாரப் பேரவையினால் சிறந்த கலைஞருக்கான விருதையும், கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ‘கலாபூசணம் விருது’ விருதையும பெற்றுள்ளார்.
2018ல் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தால் வழங்கப்பட்ட ‘பக்தி இசைமானி’ என்ற பட்டமும் கிடைத்துள்ளது.
2020ல் கலைச்சேவைகளைப் பாராட்டி தாய் தமிழ் பேரவையால் கௌரவிக்கப்பட்டது.
ரதிகலா புவனேந்திரன்
நுண்கலைத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்.