Home இலங்கை கற்றல் கற்பித்தல் செயன்முறைகளில் பாடல்கள்! இரா. சுலக்ஷனா.

கற்றல் கற்பித்தல் செயன்முறைகளில் பாடல்கள்! இரா. சுலக்ஷனா.

by admin


இலக்கியங்களுக்கும் பண்பாட்டு உருவாக்கத்திற்கும் இடையிலான தொடர்பு என்பது நிலைபேறுடையதாக இருந்து வந்திருப்பதை, இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.


சங்க இலக்கியங்களில் செய்யுள் யாத்த சங்கப்புலவர்கள் செய்யுள்வழி சொன்னவை வெறும் கற்பனையல்ல; அஃது பண்பாட்டின் ஏதொவொரு அம்சத்தினை அல்லது எல்லாவிதமான கூறுகளை வெளிப்படுத்துபவையாகவே இருக்கின்றன; இருந்துவருகின்றன. சிறப்பாகச் சங்கச் செய்யுள்களில் அகம் பாடிய பொழுதாக இருக்கட்டும், புறம் பாடிய பொழுதாக இருக்கட்டும் அவை அக்கால பண்பாட்டு வெளியைத் தொட்டுச் செல்லாமல் இல்லை.

எடுத்துக்காட்டாக
“ குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்…”
என்ற புறநானூற்றுப் பாடல்வழி சேரமான் கணைக்கால் இரும்பொறை பாடியது சேரனின் புகழ் மட்டுமல்ல அக்காலத்து மரபாக இருந்த குழந்தை இறந்து பிறந்தாலோ அல்லது உருவமில்லாத தசைப்பிண்டமாகப் பிறந்தாலோ அவற்றையும் வாளால் கீறி உடலடக்கம் செய்திடும் மரபையும் சேர்த்துதான்.
பாடி பரிசு பெற்ற பாணன் முதலிய கலைவித்துவம் புரிந்தவர்களும் மன்னர்களின் கொடைத்திறனைஇ வீரசாகசங்களை பாடிய போதிலே நாட்டின் நன்வளம் நவிலாமலில்லை.
“அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொள் முரசின் மூவிரு முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே
இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே…”
என்ற புறநானூற்று பாடல், பாரியின் வீரம் குறித்து மாத்திரம் பாடாமல், நாட்டின் வளமும் பாடிநிற்பதை அறியலாம்.
இப்படி சங்கச் செய்யுள் வழி அகம், புறம் என்னும் இரு திறத்திலும் அக்கால பண்பாட்டு வெளியை நன்கு உணர முடியும். இந்நிலை என்பது எக்காலத்து எழுந்த பாடலாக இருக்கட்டும்; இலக்கியமாக இருக்கட்டும்; எல்லாவகையான கலைஇலக்கியங்களிலும் தொடரத்தான் செய்கின்றது.


பண்பாட்டுவெளியில் நின்றுக் கொண்டு சிந்தித்தலும் எழுதுதலும் தவறென்று இல்லை ஆனால் எதை எழுதுகிறோம் எதற்காக எழுதுகிறோம் என்ற தீர்க்க சிந்தனை எப்போதும் வாய்த்திருத்தல் நலமுடையது. இஃது எந்த கலைப்படைப்பாக்கத்திற்கும் பொருத்தப்பாடுடையதாகிறது.


ஏனெனில் நடைமுறை கல்வி சூழல் இந்நிலையினை ஏற்படுத்துவதில் மந்தகதியிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது; சமுக ஏற்பாடுகளை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. மாறாக சமுகத்திற்கு எதிர்வினையாற்றுவதாக இல்லை.


இந்த நிலையிலேயே கற்பித்தல் ஊடகமாக பயன்படுத்தப்படும் பாடல்களை அணுகிப் பார்க்கின்ற போது, பண்டாட்டம்சங்கள்வழி இளையோர், முளையிலிருந்தே வளர்க்கப்படுவதற்கு அப்பாடல்கள் வழிவகைச் செய்திருப்பதை அறியமுடிகின்றது. அஃது எந்த பண்பாட்டுவெளியில், யார் சார்ந்தநலன் பேணுகையாளர்களாக வளர்வதற்கு வழிவகை செய்திருக்கிறது என்பது ஆராயப்பட வேண்டியது.


ஏனெனில் காலவோட்டத்தில், சற்று பின்நோக்கி சென்று பார்த்தால் பாடல்கள் என்பவை சமுக அசைவியக்கத்தின், சமுக மாற்றத்தின் அடிநாதமாக ஒலித்திருப்பதை அறியமுடிகின்றது. பாடல்களே மக்களை இயக்கமாக ஒன்றுதிரட்டவும், போராடவும், உரிமை கோறவும் வழிவகுத்திருக்கிறது.


இப்படி சமுக அசைவியக்கத்தின் மையமாக இருந்த பாடல்கள், பிரித்தானியக் காலனியத்தில், மேற்குலகை மையப்படுத்திய, வரலாறே வரலாறு என்பதை நிலைநிறுத்திக் கொள்ளும் வண்ணம் மேற்குலக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை பாடலாக்கி, பாடவும் செய்தார்கள், செய்துக் கொண்டிருக்கிறார்கள். தெளிவாகச் சொல்ல இந்த பாடல் பொருத்தமாக இருக்கும்.


“London Bridge is falling down,
Falling down, falling down,
London Bridge is falling down,
My fair Lady”
என்ற பாடல், லண்டன் மரப்பாலம், எரியூட்டப்பட்ட சம்பவ நிகழ்ச்சியை சொல்லுவதாக அமைகின்ற பாடலாகும். ஆனால் இந்த விளக்கத்துடன், இப்பாடல் 18 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இற்றைவரையான காலப்பகுதியில், பாலர் பாடசாலைகளில், காலனிய ஆட்சிக்குட்பட்ட நாடுகளின் பாடசாலைகளில் சொல்லிக் கொடுக்கப்படுகிறதா என்பது கேள்வி. ஆனால், nursery rhymes வரிசையில், பன்னெடுங்காலமாக இந்த பாடல் இடம்பெறுவதை காணலாம்.


அடுத்ததாக
“ Bah, Bah, a black Sheep,
Have you any wool?
Yes old mate I have
Three bags full,
Two for my master,
One for my dame,
None for the little boy
That cries in the lane”
என்ற இந்தப் பாடல், அடிமைத்தனத்தின் உச்சகட்ட நிலையை சொல்லுவதாக இருக்கிறது. 1744 ஆம் ஆண்டு, Tommy Thumb அவர்களின், Pretty song book என்ற நூலில் வெளியாகிய மூலமொழிப் பாடல்வரிகள்; இப்படியான வரிகளைக் கொண்டமைந்ததுடன், அடிமைதனத்தின் உச்சத்தை சொல்லியதாக அமைந்தன. ஆனால் இவற்றின் பொருளறிந்து, பின்னணியறிந்து பாலர் பாடசாலைகளில் இத்தகைய பாடல்கள் பயிற்றுவிக்கப்படுகின்றதா? என்பது கேள்விக்குரிய விடயமாக இருக்கின்றது.


இந்நிலைக்கு மாறாக எமது தமிழ்ப்பண்பாட்டுவெளியில், சிறுவர்களின் மனவுலகமறிந்து அவர்களுக்கேற்றாட் போல் பாடலமைத்த, நவாலியூர் சோமசுந்தரப் புலவர், குழந்தை. அழவள்ளியப்பா போன்றவர்களின் பாடலகள்; இவற்றிலிருந்து வேறுபட்ட தளத்திலே அமைந்திருப்பதை அவதானிக்க முடியும்.
கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா – நின்று
காவல் புரிகின்ற சேவகா
மெத்தக் கவனமாய்க் கூலியும்
வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார்?
உன்னைப் போல்
வேலை புரிபவன் வேறுயார்?…
என்பதாக அமையும் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பாடல், வெருளிகளின் முக்கியத்துவத்தை, அதன் தோற்றத்தை சொல்லுவதோடு மட்டும் நின்றுவிடாமல், அவற்றை உருவாக்கவுமான, சிந்தனை திறனை தூண்டுவதாக அமைந்துவிடுகின்றது. மேற்சொன்னப்பாடல்கள் அத்தகைய சிந்தனையைத் தூண்டவில்லையா என்ற கேள்விஎழின், இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் அவை வெறும் வார்த்தைகளை சொல்லிக் கொடுப்பவையாகவே, என் குழந்தையும் ஆங்கிலத்தில் பாடும் என்ற போலியான பெருமிதத்தை தக்கவைத்துக் கொள்ளுவதற்காக பயிற்றுவிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. அவை சொல்லிக் கொடுக்கப்படும்வழி இதனை நன்குணரமுடியும். பாட்டுக்கும் அவை இசைக்கப்படும் விதத்திற்குமிடையிலானத் தொடர்புதான் அதன் உணர்வினையும், உயிர்நிலையினையும் தக்கவைத்துக் கொள்வதில், இன்றியமையாததாகின்றது. ஆனால் மேற்கண்ட பாடல்கள் எல்லாம் கிட்டதட்ட ஒரே சந்தத்தில் பாடப்படுவதை, அல்லது சொல்லிக் கொடுக்கப்படுவதையே அவதானிக்க முடிகின்றது. அவ்வாறு சொல்லிக் கொடுக்கப்படுவதிலும் ஒருவகை மறைமுக அரசியல் நிலைப்பெறுகின்றது என்பது, உணரப்பட வேண்டியது.


இவ்வகையில், பாடல்கள் என்பவை வலிமையான, சமுகஅசைவியக்கத்தை , பண்பாட்டு உருவாக்கத்தை தகவமைக்கின்றன என்பதை நன்கு விளங்க முடியும். இந்நிலையில், கற்பித்தல் ஊடகமாக பெரும்பாலும் பாலர்வகுப்புகளில், பாடல்கள் இடம்பிடிக்கின்ற நிலையில், அவற்றை குறித்து அறிவதும், பேசவிளைவதும் பொருத்தபாடுடையதாகவே இருக்கும். பாடல்கள் என்பவை வெறுமனே சொற்கோர்வைகள் அல்ல சொற்பொருளறிந்து கோர்க்கப்பட்ட மணிமாலைகளாக அமைகின்றன என்பதும், அத்தகைய பாடல்களே பல்வேறு நிலை சார்ந்து சிந்திப்பதற்கும், சிந்தனை வெளிப்படுத்துகைக்கும், கருத்துபரிமாற்றத்திற்கும், உணர்வெளிப்பாட்டிற்கும், மிகமுக்கியமாக அறிவுருவாக்கத்திற்கும் களம் அமைத்துக் கொடுக்கின்றன.


இவ்வகைப் பாடல்கள், செவிவழியேறலாக, சொல்லுவதை கேட்டுப்பாடுதல் என்பதாகவே பன்னெடுங்காலமாக பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இவ்வகைப்பாடல்கள் கற்பித்தல் ஊடகமாக பயன்படும் போது, அழகியல் பாடங்களில் சங்கீத பாடமாக அன்றி, மிகமுக்கியமாக சிறுவர் மத்தியிலான அறிவுருவாக்கச் செயன்முறையில், பயன்படுத்தப்படுவதே இங்கு பிரதானப்படுத்தப்பட்டு நோக்கப்படுகின்றது.


செவிவழியேறலாகச் சொல்லிக் கொடுக்கப்படும் பாடல்கள் என்பவை, மொழிதிறன் விருத்தி, கணித எண்ணக்கருக்கள், அறவொழுக்க சிந்தனை, சமயசிந்தனை, சூழலியல் கூறுகள் சார்ந்தவை, தொனிகள் சார்ந்தவை என பல்வகைத்திறன் விருத்தியையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவையாக அமைகின்றன. இத்தகைய பாடல்கள் மொழி பற்று, அழகியல் திருப்தி, படைப்பாக்கஉந்து சக்தி முதலிய நிலைப்பாடுகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், சிறந்த ஆளுமைகளின் உருவாக்கத்திற்கு வழிவகை செய்கின்றன.


இன்றைய சூழலிலும் பாடல்கள் என்பவை பெரும்பாலும்,, செவிவழியேறல் வழியாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டாலும், அவை சிறுவர்களின் அகவயமான உலகத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களை, சிறப்பாக பன்னெடுங்காலமாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது (nursery rhymes.. Bah Bah black sheep.. போன்ற பாடல்கள் ) எனவே அதனையே சொல்லிக் கொடுத்தல்தான் முறை என்ற வகையில், சொல்லிக் கொடுக்கப்படுபவையாக அமைவதாலும், மறுபுறம் திரையிசை செல்வாக்கின் காரணமாகவும் ஆக்கப்பூர்வமான ஆளுமைகளின் உருவாக்கத்தில், தேக்கநிலையையே காணமுடிகின்றது. இத்தகைய தேக்கநிலை என்பது, பண்பாட்டிசை மரபுகளின் வழி வளர்கின்ற, சமுதாயத்தின் பெரும்பான்மையாக அமைவதை உணரமுடிகின்றது.


சிறப்பாகச் சொல்லப்போனால், நாட்டார்இசை பாரம்பரியத்தில் வளர்தெடுக்கப்படுகின்ற, அல்லது அப்பாரம்பரியஇசையில் தம்மை விருப்போடு ஈடுப்படுத்திக் கொள்கின்ற தலைமுறை என்பது நிர்க்கதியான நிலையிலேயே இருக்கிறது. செவிவழியேறல்வழியும், உடன்பொழுதுகளில் பாடலாக வெளிகொணரும் திறன்வழியும் சிறப்பிக்கப்படுபவை நாட்டாரிசைப் பாடல்கள். இத்தகைய பாடல்களின் உருவாக்கவெளியாக அமைந்த எமது பண்பாட்டுவெளியில், அதற்கு முரணான மேற்கத்தேய பண்பாட்டுவெளியில், உருவாகிய பாடல்களை பாடவித்து மகிழ்தலும், சொல்லிக்கொடுத்து மகிழ்தலும் எத்தகைய முரண்நகையாக இருக்கும் என்பது சிந்திக்கபட வேண்டியது.
ஆதலின் உணர்விற்கு மதிப்பளித்து, உள்ளத்துக்கிளர்ச்சியை வெளிப்படுத்தி, சமுகத்தின் அசைவியக்கத்தில் மிகமுக்கிய மைல்கல்லாக அமைந்த எமது தமிழ்ப் பண்பாட்டுவெளியில் அமைந்த பாடல்கள், நாள்தோறும் நயக்கும் சிறப்புடையவை என்பதை உணருதலும், பாடல்களின் வழி சமுகமாற்றத்தினை ஏற்படுத்திய ஆளுமைகளை வரலாற்றில் இனங்கண்டறிதலும், கற்றலில் ஊடகமாக பயன்படும் பாடல்வழி மிகப்பூடகமாகச் சொல்லப்படுபவை எவையென அறிந்து கற்றலும், கற்பித்தலும், அதன்வழி நேர்க்கொண்ட பார்வையுடைய சமுகமொன்றின் உருவாக்கத்திற்கு வழித்துனை செய்தல் என்பதும், நீரொழியப் பாலுண் குருகெனவே வாழவும், வளரவும் வழிவகுத்திடும் என்பது திண்ணம்.


இரா. சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More