பீமா-கோரேகான் வன்முறைச் சம்பவம் தொடர்பாக 3 வருடங்களாக தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் வரவர ராவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியுள்ளது.
2017ம் ஆண்டு, டிசம்பர் 31ம் திகதி புனேவில் எல்கர் பரிஷத் மாநாடு நடைபெற்றது. இதில் வரவரராவ் பங்கேற்று உரை நிகழ்த்தினார். இதற்கு அடுத்த நாள், கொரேகான்-பீமா போர் நினைவுச் சின்னம் அருகே வன்முறை சம்பவங்கள் பதிவாகின. வரவர ராவ் பேச்சால் உந்துதல் ஏற்பட்டு, வன்முறையாளர்கள் கலவரம் செய்ததாக காவல்துறை சந்தேகித்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 3 வருடங்களாக அவர் சிறையில் அடைபட்டுள்ளார். இதுவரை பிணை கிடைக்கவில்லை. இந்த நிலையில் வரவர ராவ் உடல்நிலை பாதிப்படைந்தது. சிறையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சையளித்தும், பலனில்லை. எனவே, மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், மும்பை மேல் நீதிமன்றம் அவருக்கு 6 மாதங்கள் இடைக்காலபிணை வழங்கியுள்ளது.
நீதிபதிகள் எஸ் எஸ் ஷிண்டே மற்றும் மனிஷ் பிடேல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இந்த பிணை மனுவை விசாரித்தபோது, வரவர ராவிற்கு மருத்துவ பிணை வழங்கவில்லை என்றால், அது மனித உரிமைகளை மீறுவதாகும். ஒரு குடிமகனின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்திற்கான அடிப்படை உரிமைகள் இதில் அடங்கியுள்ளது என்று தெரிவித்தனர்.
ராவ் மும்பையில் இருக்க வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பிணை வழங்கப்பட்டுள்ளது. ரூ.50,000 பிணைத் தொகை செலுத்தி பிணை பெறலாம். இதையடுத்து, ராவின் உடல்நிலையைப் பொறுத்து நானாவதி மருத்துவமனையில் இருந்து விடுவின்னப்படுவார். ஆறு மாத காலத்திற்கு என்ஐஏ நீதிமன்ற மும்பையின் அதிகார எல்லைக்குள் இருப்பார்.