இந்திய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்ட உத்திகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய ஆவண தொகுப்பை பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட 22 வயது சமூக செயல்பாட்டாளர் திஷா ரவியை பிணையில் விடுவிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்திய விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை தூண்டும் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக சந்தேகிக்கிறோம் என டெல்லி காவல்துறை ஆணையாளர் ஸ்ரீவாஸ்தவா கடந்த மாதம் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு முன்னதாக, விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வழிமுறைகள் அடங்கிய ஆவணத்தை சர்வதேச சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரெட்டா டூன்பெர்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, விவசாயிகள் போராட்டத்துக்கான தனது ஆதரவை நியாயப்படுத்தினார்.
இந்த நிலையில், பெங்களூருவிலுள்ள தனது வீட்டில் வசித்து வந்த திஷா ரவியை கடந்த வாரம் டெல்லி காவல்துறை கைது செய்தது. காலிஸ்தானி ஆதரவு குழுவான ஜஸ்டின் ஃபவுண்டேஷன் தயாரித்த டூல்கிட் என்ற பெயரிலான அந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் பகிரும் நடவடிக்கையில் இணைந்து செயல்பட்டதாக திஷா ரவி, நிகிதா ஜேக்கப், ஷாந்தனு முலுக் உள்ளிட்டோர் மீதும் காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
காலிஸ்தானி இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க திட்டம்
கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவின்போது விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக அறிவித்த நிலையில், அதை தீவிரப்படுத்தி வன்முறையில் ஈடுபட திஷா ரவி உள்ளிட்டோர் பகிர்ந்த ஆவணம் ஒரு தரப்பினரை தூண்டியதாக காவல்துறை குற்றம்சாட்டியது. மேலும், காலிஸ்தானி ஆதரவு இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் திஷா ரவியின் செயல்பாடுகள் இருப்பதாகவும் காவல்துறை குற்றம்சாட்டியது.
இந்த நிலையில், இந்த வழக்கில் காவல்துறையின் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த திஷா ரவியை நீதிமன்ற காவலில் வைத்திருக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, தன்னை பிணையில் விடுவிக்க வலியுறுத்தி திஷா ரவி தாக்கல் செய்த மனுவை கடந்த வாரம் டெல்லி நீதிமன்றம் விசாரித்தது. அப்போதுதான் திஷா ரவி மீதான குற்றச்சாட்டுகளின் முழு விவரத்தையும் டெல்லி காவல்துறை வெளியிட்டது.
பிரிவினை சக்திகளுடன் கூட்டு சதி
பிரிவினையை ஏற்படுத்தும் சக்திகளுடன் இணைந்து திஷா ரவி குழுவினர் செயல்பட்டதாகவும், இந்திய அரசு மீதான அதிருப்தி நிலையை ஏற்படுத்த இந்தக் குழுவினர் துணை போனதாகவும் காவல்துறை கூறியது. டூல் கிட் ஆவணத்தை சமூக ஊடகங்களில் பகிர்வது தொடர்பாக வாட்ஸ்அப் குழுவில் திஷா ரவி குழுவினர் விவாதித்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தர்மேந்திர ராணா, ஜனவரி 26ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தின்போது நடந்த வன்முறைக்கும் திஷா ரவிக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க வலுவான ஆதாரம் உள்ளதா, அதை சேகரித்தீர்களா? என்று காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார்.
ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகள் அடிப்படையிலேயே இந்த சதியை பார்க்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது. இருப்பினும் காவல்துறையினரின் வாதத்தால் திருப்தி அடையாத நீதிபதி, திஷா ரவிக்கு ரூபாய் ஒரு லட்சம் ரொக்க பிணையிலும் அதே தொகைக்கு இரு நபர் பிணைப் பத்திரமும் தாக்கல் செய்து பிணையினை பெறும்படி உத்தரவிட்டார்.
BBC