இலக்கியம் கட்டுரைகள் பிரதான செய்திகள்

குமிழி – ஒருபார்வை – தேவ அபிரா!

குமிழி என்கிற இப்படைப்பு  திரு பா.ரவீந்திரனால் எழுதப்பட்டது. பா.இரவீந்திரன் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் இணைந்திருந்து பின்னர் அதன் சனநாயகமற்ற போக்கினால் விலகியவர். புலம் பெயர்ந்து தற்பொழுது சுவிற்சிலாந்தில் வசித்து வருகிறார். சமூக ஆர்வலரான இவர்  தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டுத்தளத்திலும் அரசியற் தளத்திலும் நிகழ்கின்றவைகள் பற்றிய கூர்மையான பார்வையைக் கொண்டிருப்பவர். அவைபற்றிய விமர்சனங்களை வெளிப்படுத்துபவர். இவர் ஊடறு  என்னும் பெண்களுக்கான செயல் தளத்தையும் இணைய வெளியையும் செயற்படுத்தும் பத்மனாதன் ரஞ்ஜனி அவர்களின் தோழர்.

இப்படைப்பு 1984 க்கும் 1985 க்கும் இடையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்னும் விடுதலைப் போராட்ட அமைப்புள் நிகழ்ந்தவற்றை  அதில் இணைந்திருந்த இளைஞன் ஒருவனின் பார்வையிற் பதிவு செய்கிறது. விடுதலைக்கான கனவுகளைச் சுமந்து சென்ற இளைஞர்கள் விடுதலைப் போராட்ட அமைப்பொன்றினுள் நிகழ்ந்த பெரும் பிழைகளால் உயிர் இழந்தும் உளக் காயம் அடைத்தும் போராட்டக்களத்தைவிட்டு நீங்கிய அவலத்தை இப்படைப்புச் சொல்கிறது

எனது, நட்பு மற்றும் உறவுத்தளங்களினூடாக நான் அறிந்துகொண்ட பல விடையங்கள் இப்படைப்பில் வந்து செல்கின்றன. ஆயினும் வாசிக்கத் தொடங்கியபொழுது இப்படைப்பு  இடைநிறுத்த முடியாதபடி ஆர்வமூட்டி என்னைத் தொடர்ந்து வாசிக்க வைத்தது.

கீழ் வருவன இப்படைப்பிற் தெரிகிற களங்களாகும்

 • இலங்கையின் தென் பகுதியில் நிகழ்ந்த இனக்கலவரம்
 • கதை நாயகனின் குடும்பநிலமை
 • ஈழத்தின் விடுதலைப்போராட்ட அரசியற்சூழ்நிலை
 • தமிழ் நாட்டில் இவ்வமைப்பைச் சேர்ந்த  இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட மூன்று வேறுபட்ட முகாம்களில் நிகழ்ந்தவைகள்
 • திரும்பி ஈழம்  வந்தபோது இருந்த நிலமை
 • புலம் பெயர்வு

இக்களங்களில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட காலத்தில் பேசுபொருட்களாக இருந்த பல விடையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவையாவன:

 • சாதியம்
 • மதம் அல்லது கடவுள் நம்பிக்கை
 • இலங்கை அரசின் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியிற் கொண்டு வரப்பட்ட கல்வித் தரப்படுத்தல் முறைமை
 • இனப்பிரச்சனையை இடது சாரிகள் அணுகிய விதம்
 • போராளிகள் சட்டத்தையும் நீதியையும் கையில்  எடுத்துகொண்டமை (எடுப்பதாக நினைத்துக் கொண்டு நீதியின்மையை நிகழ்தியமை)
 • சோசலிச தமிழீழம் பற்றிய சிந்தனைகள்
 • சோசலிச ராணுவம் பற்றிய சிந்தனைகள்
 • தென்னிந்தியத் தமிழ் மக்கள் போராளிகள்மீது கொண்டிருந்த பரிவு;கொடுத்த ஆதரவு
 • பயிற்சி முகாம்  வாழ்க்கையின் பரிமாணம், அங்கிருந்த மனிதர்களின் உடல்  உளப் போராட்டங்கள் மற்றும் வாதைகள்
 • ஆளுமையற்ற தலைமைத்துவம் 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ஈழத்தில் அரசியல் வேலைகளில் ஈடுபட்ட ரகு, ஆயுதப்பயிற்சி பெறுவதற்காக இந்தியா செல்கிறான். இந்தியாவில் பயிற்சி முகாம்களில் நிகழும் சம்பவங்கள்,   தான் இணைந்திருந்த அமைப்புப்பற்றி அவன் கொண்டிருந்த கனவுகளைத் தகர்த்துவிடுகின்றன. இந்தியாவிலிருந்து மீண்டும் ஈழத்துக்குத் திரும்பி வரும் ரகு இங்கும், வாழ்வதோ அரசியல் வேலைகளில் ஈடுபடுவதோ சாத்தியமற்றதாக இருப்பதை உணர்கிறான்.  இறுதியில். வெளிநாட்டுக்குப் புலம்பெயர்கிறான். இது தான் இப்படைப்பின் பருமட்டான வரைவு.

தமிழீழ  மக்கள்  விடுதலைக்கழகத் (People Liberation Organisation Tamil Eelam) தினுள் நிலவிய கொடுமையான நிலைமைகள் அதன் அமைப்பு வடிவத்தையே தகர்த்துவிட்டன என்பதை இப்படைப்பை வாசிக்கும்போது உணர முடியும்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் உருக்கொண்ட ஒரு அமைப்பு என்னவிதமான அதிகாரப் பண்பாட்டைக் கொண்டிருந்தது? என்ன விதமான அரசியல் பாண்பாட்டைக் கொண்டிருந்தது? அதன் தலைமைத்துவம் எப்படித்தொழிற்பட்டது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாக முகாம்களில் நிலவிய வாழ்க்கைமுறை விரித்து வைக்கப்பட்டுள்ளது. சனநாயக மற்ற இராணுவவாத  அதிகாரமே அங்கு நிலவியது  என்பதை மிகத்தெளிவாக இப்படைப்பு முன் வைக்கிறது.

திறமையும் அர்பணிப்பும் சமதர்ம வாழ்க்கையில் ஈடுபாடும் கொண்ட போராளிகள் பொறியிற் சிக்கிக் கொண்ட எலிகள்போலச்  சிதைந்துபோவதைப் படைப்பாளி துயரம் தோய்ந்த வார்த்தைகளால் விபரிக்கிறார்.

இப்படைப்பில் வரும் சில சம்பவங்களைச் சுட்டி  அவற்றில் வெளிப்படும் விடையங்களையும் குறிப்பிட விரும்புகிறேன்.

சம்பவம் 1 :

போராளிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும் முகாமில் இருந்த கொட்டில்கள் ஒன்றிலிருந்து(சித்திரவதைக் கொட்டில்) நள்ளிரவில் இதயத்தைப் பிளக்கக் கூடியஅவல  ஒலி கேட்கிறது. இரவுக்காவலில் இருந்த பரம் என்கிற போராளிக்கு  அவ்வவல ஒலிக்கான காரணம் புரிகிறது. அவன்அதிர்ச்சியில் மயங்கி விழுகிறான்.

PLOTE இன் உளவுப்பிரிவின் சந்தேகக்கண்களுக்குள் அகப்பட்டுக்கொள்ளும்  போராளிகளும் முகாம்களிலிருந்து தப்பிச் செல்லமுயலும் போராளிகளும் கைது செய்யப்பட்டுச்  சித்திரவதை செய்யப்படும்பொழுது  எழுந்த அவல ஒலியைக்கேட்டே பரம் மயங்கி விழுந்தான்.

முகாமிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற மதன் எனப்படும் போராளி(முன்னாள் முகாம் பொறுப்பாளன்)  புலிகளின் உளவாளியெனக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகள் எதுமின்றி உளவுப்பிரிவுப் பொறுப்பாளனான மொட்டை மூர்த்தியால்  தாக்கப்படுகிறான். அப்பொழுது,  முன்பு மயங்கி விழுந்த பரம் என்கிற போராளியும் அழைக்கப்பட்டு  மதனைத் தாக்கும் படி நிர்பந்திக்கப்படுகிறான். மனிதத்தன்மை கொண்ட  பரம் என்கிற  போராளியை மிருகமாக மாற்றும் முயற்சியில் மொட்டை மூர்த்தி என்னும் உளவுப்படைத் தலைவன் ஈடுபாடு காட்டுகிறான்.

இச்சம்பவம் அங்கு என்னவிதமான அதிகாரக் கலாசாரம் நிலவியது என்பதைச் சொல்லிவிடுகிறது. 

வெறும் சந்தேகத்துடன் கூடிய இராணுவ வாத அணுகு முறை அங்கிருந்த போராளிகளுக்கு  உடல் உளச் சித்திர வதைகளைத் தருவதாக மாறிவிட்டிருந்தது. அச்சம் நிறந்த சூழல்கள் முகாம்களுக்குள் உருவாகி விட்டிருந்தன.

ரகு முகாம் மாறி வேறு முகாமுக்குப் போகும்போதும் கூட அங்கும் இவ்வச்சமான சூழ்நிலை  தொடர்வதையும் காண்கிறான். அர்ப்பணிப்புள்ள போராளிகள் ஒரு புறமும் உண்மையான தலைமைத்துவப் பண்புகள் அற்ற எல்லோரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிற உளவுப்படையுடன் கூடிய தலைமை மறுபுறமுமாக இந்த அமைப்பு அல்லாடிக்கொண்டிருந்ததைப் படைப்பு எங்கள் முன் விரித்து வைக்கிறது.

இராணுவ வாதம் பாசிச வாதம் போன்றவை ஒரு சமூகத்துள் அல்லது கட்டமைப்புக்குள் நுழையும்போது ஒருவரை ஒருவர் சந்தேகிப்பதும் ஒருவர் மீது இன்னொருவர் அச்சம் கொள்வதும் நிகழத் தொடங்கும். இறுதியில் இவ்விரு வாதங்களும் அது நிலவும் களத்தில் உள்ளவர்களை இறுகப்பற்றி அவர்களின் கலாசாரமாகியும் விடும். இந்நிலமை  தன்னழிவுடன் மற்றவர்களையும் அழிப்பதிற் கொண்டு சென்று விடும்.

சம்பவம் 2 :

இளம் வயதில் பாடசாலையில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட  வாங்கில் அமர்ந்திருக்கும் ஜெயவீரசிங்கத்தின் மீது ஏற்படுகிற அனுதாபத்தினால் அவனுக்கருகில்  போய் இருக்கும் ரகு அதற்காக ஆசிரியரால் தண்டிக்கப்படுகிறான் இது தொடர்பாக ரகுவின் தந்தையாரிடம் முறையிடப்படுகிறது. அவரோ, அவன் தான் விரும்பிற இடத்தில் போய் இருக்கட்டும் அது அவன் சுதந்திரம் என்று சொல்லி விடுகிறார். பாடசாலை அதிபரும் ஆசிரியரும்  எதிர்பார்த்த படி ரகுவின் அப்பா ரகுவைத் தண்டிக்க வில்லை.

உண்மையிலும் ஜெயவீர சிங்கம் என்கிற மாணவனுக்குத்தான்  மற்றைய மாணவர்களைப் போலத் தான் விரும்பிய இடத்தில் போயிருக்கச் சுதந்திரம் கிடைத்திருக்க வேண்டும்.

சம்பவம் 3 :

முகாமில், தாழ்த்தப்பட்டவன் எனச் சொல்லப்படும் சிவனை  உயர் சாதி எனப்படும் சங்கர் வார்த்தைகளாலும் நடத்தைகளாலும் அவமானப்படுத்துகிறான். அதனாற் கோபம் கொண்ட சிவன் சங்கரைத் தாக்குகிறான். அவ்வாறு தாக்கியதற்காக முகாம் பொறுப்பாளனாற் சிவன் தண்டிக்கப்படுகிறான். அது முகாமின் இராணுவ விதிகளை மீறியமைக்கான தண்டனையெனச் சொல்லப்படுகிறது. மறுவளத்தில் அமைப்புள் சாதிய ஒடுக்குமுறைக்கு இடமில்லையென முகாம் பொறுப்பாளன் கடுமையாகக் கூறவும் செய்கிறான். அதன் வழி பிற்பாடு சங்கர் காணாமல் ஆக்கவும் படுகிறான்.

உண்மையிலும் சிவனுக்கும் சங்கருக்கும் இடையில் மனிதத்தன்மையும் அரசியற் தெளிவும் கொண்ட உரையாடலை, ஏற்படுத்துவதன் மூலம் சங்கர் கொண்டிருக்கும் பிழையான மனப்பான்மையை உணரச் செய்து அவனுள் மனமாற்றத்தை ஏற்படுத்துவதே அரசியல் அமைப்பொன்றின் பணியாகும் ஆனால் அவ்வாறு நிகழவில்லை.இங்கும் இராணுவ வாதமே பிரச்சனையைக் கையாள்கிறது

சம்பவம் 4 :

இதரா என்னும் பெண்போராளி வீட்டுக்குத்திரும்பிச்செல்ல அல்லது தப்பிச் செல்லமுடியாதவாறு அமைப்பின் அதிகாரத்திடம் சிக்கி இருக்கிறாள். ஈழத்துக்குத் திரும்பிச் செல்லும் ஜோனிடம் (ரகு- கதையின் நாயகன்) முடிந்தால் அம்மாவைச் சந்தியுங்கள் என்று மட்டும் இதரா சொல்கிறாள். அந்த மூன்று வரிகளுக்குள் அவளது முகாம் வாழ்க்கையும் அவளது தன்னுணர்வுகளும் அடங்கியுள்ளன.   அதனை விரித்துச் சொல்ல வேண்டியது ஜோனின் கடமை ஆகிறது. ஆனால் ஈழம் சென்று இதராவின் அம்மாவைச் சந்திக்கும் ஜோனால் உங்கள் மகள் நலமாக இருக்கிறாள். படிப்படியாக அவர்கள் எம்மை ஊருக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதரா விரைவிற் திரும்பி வருவாள் என்று மட்டுமே சொல்ல முடிகிறது.

பின்னர்  மீண்டும் அந்தத் தாயைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது  ரகு(ஜோன்) இதராவின் உண்மை நிலைமையைச் சொல்கிறான். அவன் சொல்வதைக்  கீழே தருகிறேன்

 “முன்பு அந்தத் தாய்க்குச் சொன்னதை தலைகீழாக இன்று மாற்றிச் சொல்லவேண்டி ஏற்படுவதில் எழும் குற்றவுணர்ச்சியுடன் சென்றேன்.என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கள் அம்மா என்று நான் சொன்னபோது என்னை என்னாற் கட்டுப்படுத்த முடியவில்லை. 

இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்தியடி தேம்பி அழ ஆரம்பித்தேன். எனது அம்மாவுக்குச் சொல்லமுடியாமல் எனக்குள் தேங்கித் தழும்பி நின்ற வார்த்தைகள் கண்ணீராய் மேவி வந்தன. அருகே வந்த அந்தத் தாய் எனது தலையைத் தடவியபடி மௌனமாக இருந்தாள்.”

நாவல் ஒன்றுக்கு இப்படியான சம்பவங்கள்தான் ஆதார இழைகள் ஆகவமையும். இவ்வாதார இழைகளினூடு தான் நாவல் ஒன்று நகர்கிறது.  இப்படியான சம்பவங்களும் இவற்றின் மூலம் உருவாக்கப்படுகிற விம்பஉலகமும்  உணர்வுகளும் தான் படைப்பிலக்கியத்தின் அச்சாணி.

படைப்பினை விமர்சன நோக்கில் வாசிக்கும்போது தனிமனித அனுபவங்களும்  காட்சிக்களங்களும் எப்படி முன்வைக்கப்படுகின்றன?  அவை எப்படி இணைக்கப்பட்டுப் படைப்பு நகர்த்தப்படுகிறது? போன்ற கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது.

படைப்பாளியின் வியாக்கியானங்கள் எதுவுமின்றி வாசிப்பவர் தனக்கான உணர்வுகளையும் உலகங்களையும் உருவாக்குவதற்கு  ஒரு படைப்பு இடமளிக்க வேண்டும். படைப்பாளி தான் சொல்ல வருவதைச் சொல்லாமற் சொல்கிறபொழுது கலைத்துவம் உருவாகிறது. வாசிக்கிறவர் சொல்லாமற் சொல்லப்பட்டவற்றுள் தனக்கான அர்த்தங்களைக் கண்டடைவதற்கான விரிவைப் படைப்பொன்று கொண்டிருக்கிறபொழுது படைப்பின்  கலைத்துவம் முழுமை பெறுகிறது.

நான் மேலே குறித்த நான்கு சம்பவங்களையும் குறிப்பிட்டமைக்கு அவை கொண்டுருந்த உள்ளீடு மட்டும் காரணமல்ல. குறித்த நான்கு சம்பவங்களிலும் படைப்பாளியின் வியாக்கியானங்கள் எதுவுமின்றி  எனக்கான வாசிப்பை (நான்  மேலே விபரித்தபடி)  என்னால் நிகழ்த்த முடிந்தது  என்பதைச் சுட்டவும் விரும்பினேன்.

இப்படைப்பு முழுமையும் மேற்குறித்தவாறான இழைகளாற் பின்னப்பட்டதா? என்ற கேள்விக்கு விடை இல்லை என்பதாகும்.

இங்கு இறைநம்பிக்கை அல்லது மதம்பற்றிய சிந்தனைகள்,  சோசலிஸ தமிழீழம் பற்றிய சிந்தனைகள், இலங்கையில் கொண்டுவரப்பட்ட  உயர்கல்விக் தரப்படுத்தல் பற்றிய பார்வை. இடது சாரிகள் இனப்பிரச்சனையைக் கையாண்ட விதம்பற்றிய பார்வை போன்றவை பெருமளவு அரசியல் வகுப்புகள்போல் உரையாடல் வடிவில் தரப்பட்டுள்ளன. இதனைத்  தவறென்று கூற முடியாது.  ஆனால் படைப்பிலக்கியம் என்று வரும்போது  புனைவின் சாத்தியங்களைப் பயன்படுத்தி இவற்றையும் மேற்கூறியவாறான ஆதார இழைகளாக மாற்ற முடியும்.

இயல்பாகப் படைப்பின் போக்கில்  உணர்ந்துவிடுகிற பல விடையங்களை அல்லது உணர்த்தப்பட  வேண்டிய விடையங்களை  ஆசிரியர் முன்கூட்டியே சொல்லி விடுகிறார்.

இரு  சிறு உதாரணங்கள்:

 • ரகுவின் பல்கலைக்கழகக் கால உற்ற நண்பன் குமார், ரகுவுக்கு முதலில்  இந்தியாவுக்குப் பயிற்சிக்குச் சென்றுவிடுகிறார்.  அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற மனக்கிடக்கை இந்தியாவுக்குப் போகும்போது ரகுவுக்கு வலுக்கிறது.   ரகுவின் நண்பனான குமார்   பலஸ்தீனப் பயிற்சி பெற்றுத் திரும்பி வந்திருக்கிறார் என்கிற சுவாரசியமான சம்பவத்தை ஆசிரியர்  முன் கூட்டியே சொல்லி விடுகிறார்
 • பயிற்சிக்குச் செல்பவர்களின் சொந்த உடுப்புக்களையும் ஏனைய உடைமைகளையும்   முகாம் பொறுப்பாளர்கள் பறித்து வைத்துக்கொள்கிறார்கள்   ஏன் அவ்வாறு செய்யப்படுகிறது என்பதும் உடனேயே ஆசிரியராற் சொல்லப்பட்டு விடுகிறது.

இதனாற்றான் படைப்பாளி பல இடங்களில் வாசகரைப் பின்னோக்கிச் சென்று சிலவற்றை உறுதிப்படுத்த வேண்டுகிறார் அல்லது சிலவற்றை  மீள ஞாபகப்படுத்துகிறார் என்று தோன்றுகிறது.

சில பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட முன்னரேயே கதைக்குள் வந்து விடுகின்றன. சில சம்பவங்கள் அவை இணைக்கப்பட்ட இடங்களை விடவும் வேறு இடங்களில் இணைக்கப்பட்டிருந்தால்  படைப்பின் உணர்வோட்டத்துக்கு வலுச்சேர்த்திருக்கும் என்ற உணர்வும்  ஏற்படுகிறது.

புலம் பெயர்ந்து வாழும் களத்தில் ரகு உணர்பவைகளும்  அனுபவிப்பவைகளும்  ரகுவின் அனுபவங்களினுடே அடைந்த  உளக்காயங்களிலிருந்து வருபவை  இவ்வுளக்காயங்கள் எப்படி உருவாகின என்பது தான் நாவலின் உயிர் பொருள் ஆவி எல்லாமும்  ஆனால் அவற்றுக்கான விளக்கம் படைப்பின் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டு  விடுகிறது.

இப்படைப்பில் சில இடங்களில், வேற்றுமை உருபுகளின் தவறான பாவனை காரணமாக வாசிப்புத் தடங்கலுறுகிறது. மேலும் பல இடங்களில்  எழுவாய் ஒருமையாக இருந்தால் பயனிலை பன்மையாக அல்லது எழுவாய் பன்மையாக இருந்தால் பயனிலை  ஒருமையாகவும் வருகிற வசன அமைப்புகளும் உள்ளன. பல இடங்களில் குற்றெழுத்துக்கள் தவறவிடப்பட்டுள்ளன.

இத்தகைய பிரச்சனைகள் அனேகமாக எல்லா எழுத்தாளர்களுக்கும் ஏற்படுபவைதான். இவற்றைப் படைப்பை ஒழுங்கு படுத்திச்  செப்பனிடும்போது திருத்த வேண்டும். இத்திருத்தங்களைச் செய்வதற்குப்  படைப்பின் கருவுக்குள்ளும் உணர்வுட்குள்ளும் ஆழாது தொழில் முறையாக எழுத்தை வாசிக்க வேண்டியது தேவையாகிறது.

இப்படைப்பில் மொழி அழகு பெறும் பல இடங்கள் உள்ளன. ஜோன் (ரகு)க்கு மாலி மேல் ஏற்படும் காதலைச் சொல்லும் பகுதிகளும் அழகானவை

“வாழ்வை அவன் சிறகுகளின்றி வளர்த்தான். ஆனாலும் அவன் மாலியின் விழிகளுக்குள்தான் அமிழ்ந்துபோய்க்கொண்டிருப்பதை உணர்ந்தான். மெல்லச் சிறகுகள் முளைப்பது போலவும் உணார்ந்தான். ”

 “மாலி தன் முன் இருந்த தாளில்  சூரியகாந்தி மரத்தை வரைந்திருந்தாள். அவ்வொவியத்தில் சூரியகாந்திப் பூவாடித் தலை சரிந்திருந்தது.அவளும் அவளின் விழிகளும் வாடியிருந்தன. ஜோன் சூரியகாந்தியைக் காட்டி இதென்ன இப்படி வாடிப்போச்சு தண்ணியைக் கொஞ்சம் காட்டிறதுதானே! என்றான்.

அவளது ஈர வழிகள் கொஞ்சம் ஒளிவீசின. தனது இலட்சியவாத மூட்டையை மழையில் நனைத்து சுமக்க முடியாமல் சுமந்து சென்றான் முட்டாள் ஜோன்”

ஈழத்துக்குச் திரும்பிச் செல்ல முன்னர் மாலியை ஜோன் சந்திக்கும் சந்தர்ப்பத்தில் வரும் விபரிப்புகளில் வருபவையே மேற் தரப்பட்டவை.

ஜோன் தனது காதலை மாலியிடம் கடைசிவரை சொல்லவேயில்லை.

அராஜகம் நிறைந்த, சனநாயகம் அற்ற, ஆண் போராளிகளும் பெண்போராளிகளும் பிரித்து வைக்கப்பட்டிருக்கிற சூழலில் எந்த வகையான உறவுக்குத்தான் சிறகு முளைக்கும்?

விடுதலைக்குப் போராடிய  எல்லாவகையான அமைப்புக்களிலும் போராட்டக்களத்தில்  ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவுநிலை குறித்த தெளிவு இருக்கவில்லை என்பதையும் இங்கு நினைவு கூர வேண்டும். அனேகமான அமைப்புகளில் மரபுவழியான, ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைக்கும் அணுகுமுறை  நிலவியது அல்லது ஆண்களின் ஆதிக்கம் மேலோங்கிய சூழ்நிலையுள் பெண்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தம்மை இணைத்துக்கொண்டிருந்த ஒவ்வொருவருக்குள்ளும் நிறைய உளக்காயங்கள் உள்ளன. போராட்டத்துக்குப் பின்னான உளவடுக்கள் என்றும் அவற்றைச் சொல்லலாம் இவையும் போருக்குப் பின்னான உளவடுக்கள் போலவே தனி மனித ஆத்மாக்களை அவர்கள் வாழும் காலம்வரை  வதைக்கக் கூடியவை. இப்படைப்பில் வருகிற எல்லாப்பாத்திரங்களுமே பெரும் உளக்காயங்களைச் சுமந்து கொண்டிருப்பவை.

இப்படைப்பில் வேம்பு பல  இடங்களில் வருகிறது கதையின் ஆரம்பத்தில் ரகுவின் இளமைக் காலம்பற்றிய  சித்திரத்தை  அவர்களின் வளவில் நின்ற  வேம்பு சொல்கிறது. பின்னர்  ரகு செல்லும் முகாம்களிலும் வேம்பு அவனைத் தொடர்கிறது.வேம்பு என்பது  வெறும் மரமல்ல.  வாழ்வின் குறியீடு.  வேம்பு நிற்கிற வளவில் வளர்ந்த பிள்ளை வேம்பு இல்லாத வெற்று வளவுக்குத் திரும்புகிறான்.

வேம்புக்கும் எங்களுக்குமான உறவை எப்படி விபரிக்க முடியும்?

எனது கவிதையொன்றில்

இலையிழந்த லிண்ட மரங்களுக்கும் குத்தீட்டியாகச் சிலிர்த்து நின்ற பைன் மரங்களுக்குமிடையிற் பனியுள் எதிலோ தடக்கி விழுந்தேன்.

எங்கள் முற்றத்தில் நின்றதே வேம்பு!

அதன் வேராகத்தானிருக்க வேண்டும்.

என எழுதி இருப்பேன். இக்கணத்தில் கவிஞர் சேரனின் பாடல்  ஒன்று ஞாபகத்தில்   வருகிறது.

வேம்பின் குழல்கள் விசும்பில் நடுங்க

வேனில் இரவுகள் விண்மீனாய் அனுங்க

போக விடு என்று சொன்னான்.

போராடப்போன  தலைமுறையும் போகவிட்ட தலைமுறையும்  துயரில் அழுந்திய  கதையினைக் குமிழி எங்கள் முன் வைத்திருக்கிறது.

அதுதான் என்னை இப்படைப்பை   ஒரே மூச்சில் வாசிக்க வைத்தது. 

நன்றி: பவானி தம்பிராஜா, ராஜ் குலராஜா

குறிப்பு:

திருமதி பவானி தம்பிராஜா அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு திரு  ராஜ் குலராஜா அவர்களாற் தொகுக்கப்பட்டு பைந்தமிட்சாரல் என்ற பெயரில் இணைய வழியில் ஸூம் (Zoom) ஊடாக நிகழ்த்தப்பட்ட விமர்சன அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையின்  திருத்திய வடிவமே- குமிழி ஒரு பார்வை.

Spread the love
 •   
 •   
 •   
 •   
 •  
 •  
 •  
 •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.