நைஜீரியாவில் சம்பாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பாடசாலையைச் சேர்ந்த 317 மாணவிகளைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
கடந்த வாரம் நைகர் மாகாணத்தின் காகரா நகரில் உள்ள பாடசாலையில் தீவிரவாதிகள் ஒரு மாணவரைச் சுட்டுக் கொன்றதுடன் 40 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களைக் கடத்திச் சென்ற நிலையில் தற்போது மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர்.
நைஜீரியாவில் கடந்த சில வருடங்களாகவே அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய போகோ ஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
போகோ ஹராம் தீவிரவாதிகள் இதுவரை சுமார் 27,000 பேரைக் கொன்றுள்ளதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதேவேளை தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
டிசம்பர் மாதத்திலிருந்து இது மூன்றாவது கடத்தல் சம்பவம். இது குழந்தைகள் மீது செலுத்தப்படும் பயங்கரமான வன்முறை எனத் தொிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அவர்கள் மனநிலை மிகவும் பாதிக்கப்படக் கூடும் எனவும் கடத்தப்பட்ட மாணவிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் தொிவித்துள்ளது. #நைஜீரியா #மாணவிகள் #போகோஹராம்