கூத்துக் கலையில் முதன்மை பெற்று விளங்கும் அண்ணாவிமார்களில் இவரும் ஒருவராக அ.பூ.ம.கிருஷ்னப்பிள்ளை அவர்கள் கூத்துச் சமூகங்களிலிருந்து வாழ்ந்து மறைந்தார்.
இவர் சிறந்த குரல்வளமுடையவராகவும் கூத்தர்களுக்கு மிகவும் சிறந்த முறையில் பாடல் பயிற்சி ஆட்டப்பயிற்சி கற்பிப்பதில் ஒரு வல்லவராகவும் திகழ்ந்து வந்த இவர் கூத்தர்களுக்கு கூத்துபயிற்சி கொடுக்கும் போது கூத்துப்பாத்திரங்கள் பற்றி கூத்தர்களுக்கு விரிவுரை செய்வது பல்கலைகழகங்களில் விரிவுரையாளர்கள் விரிவுரை நடத்துவது போல காணக்கூடியதாக இருக்கும்.
இவர் மத்தளம் வாசிக்கும் போது கூத்துப்பாடல்கள் வாயால் சொல்வது போல கூத்தர்களுக்கும் ஏனையோர்க்கும் கேட்கக் கூடியதாக இருக்கும். இது மட்டுமல்லாது தன் இரு கண்களும் பார்வை அற்ற நிலையிலும் கூத்திற்காக பயன்படுத்தப்படும் ஆயுதங்களான வில், வாள், ஈட்டி, கட்டரி போன்ற ஆயுதங்களையும் உருவாக்குவதிலும் ஆற்றல் பெற்றவராக விளங்கி வந்தார்.
கூத்துக்கள் ஆற்றுகை செய்யப்படும் போது பாடல்கள் இசைக்கு மத்தளம் ஒலிக்காவிடின் உடன் கூத்தை நிறுத்தி மத்தளத்தை திருத்தி மத்தளம் திறமையாக ஒலி எழுப்பும் அளவிற்கு சரி செய்யும் ஆற்றல் மிகுந்தவராக விளங்கினார்.
கூத்துப்பயிற்சி காலங்களில் கூத்தர்களுடைய அங்க அசைவுகளையும் தாளங்களையும் தன் கூர்மையான செவிப்புலன் மூலம் அறிந்து கொள்ளும் இவர் கூத்தர்களுக்கு பாடல் பயிற்சி கொடுப்பது ஒரு தனிச் சிறப்பம்சமாகவே காணப்படும்.
அதாவது கூத்தர்களின் தலையை பின்புறம் ஒரு கையாலும் மற்றொரு கையை கூத்தர்களின் தலைப்பக்கவாட்டிலும் வைத்து பாடல்களின் சொற்களை ஒவ்வொன்றாகப் பிரித்து கூத்தர்களின் காதருகே தன் வாயைக் கொண்டு சென்று பாடல்களைச் சொல்லிக் கொடுப்பது ஒரு புதுவித கற்பித்தல் முறையாகும்.
இச் சந்தர்ப்பத்தில் கூத்தர்கள் அவர் சொல்லிக் கொடுக்கும் பாடல்களை மெட்டிற்கு பாடாமல் தவறுதலாகப் பாடினால் மிகுந்த முன் கோபக்காரரான இவர் நிறுத்து நிறுத்து என தன் தலையில் அடித்துக் கத்திக் கொண்டே கூத்தரை பார்த்து ‘’நீ கூத்திற்கே லாயற்கற்றவன் உன்னுடன் என்னால் மாரடிக்க முடியாது’’ எனக் கோபத்தில் கூறுவார்.
அப்படிக் கோபத்தில் கூறினாலும் தன் கோபம் ஆறிய பிறகு கூத்தரை தன்னருகே வரவழைத்து மெட்ட்டிற்கேற்ற வகையில் மீண்டும் மீண்டும் பாடல்களைச் சொல்லிக் கொடுத்து இறுதியில் தான் விரும்பியவாறு கூத்தரைப் பாடவைக்கும் திறன் கொண்டவராக விளங்கி வந்தார்.
இது மட்டுமல்லாது இன்னுமொரு பரிணாமத்தில் இவருடைய கலை ஞானம் வெளிப்படும். அதாவது நம்பிகுல மக்களுக்கு உரிமையான ஸ்ரீ மகா நரசிங்க வயிரவ ஆலயத்தில் மாரி அம்மன் குளுத்திக் கதை பாடுவதிலும் அப்பாடல்களுக்கு இசைக்கேற்ற வகையில் உடுக்கு வாசிப்பதிலும் ஆற்றல் பெற்றவராகவும் விளங்கினார்.
இதே ஆலயத்தில் தெய்வம் ஆடுவோருக்கு தன் மந்திர சக்தி மூலம் உச்சாடனம் செய்து தெய்வங்களை வரவழைத்து தெய்வங்கள் சிறந்த முறையில் வாக்குச் சொல்ல வைப்பதில் ஒரு பெரும் திறமை வாய்ந்த பூசகராகவும் எல்லோராலும் மதிக்கப்படுபவராகவும் வாழ்ந்து வந்தார்.
மற்றுமொரு பரிணாமத்தில் சோதிடக் கலையிலும் ஆற்றல் பெற்றவர் என்பதை நிரூபிக்கக்கூடிய சம்பவம் ஒன்றை குறிப்பிடுகின்றேன்.
என்னுடைய நெருங்கிய உறவும் பெண் ஒருவர் கர்ப்பம் தரித்து இருந்த போது இவரை அழைத்து வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை பரிசோத்தித்து சொல்லுமாறு கேட்ட போது உடனே அப்பெண்ணின் கைநாடியை பரிசோதித்து வயிற்றில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் எனக் கூறினார். சுமார் ஒரு மாதம் சென்ற பிற்பாடு அப்பெண்ணிற்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
இவர் கூத்துக்கலையில் திறமை வாய்ந்த அண்ணாவியாரகவும் சோதிடக்கலையில் திறமை வாய்ந்த சோதிடராகவும் பாடல்களை உருவாக்குவதில் ஒரு பேரும் கவிஞராகவும் திகழ்ந்துவந்தார்.
கவிஞராக இருந்ததுக்கு சான்றாக தர்மபுத்திர நாடகம் என்ற கூத்தில் அவர் உருவாக்கிய பாடல் ஒன்றை இங்கு குறிப்பிடுகிறேன்.
வஞ்சகச் சகுனி செய்த வாதுசேர் சூதினாலே
வரும்படி ஐவரைத்தான் அழைத்து சொக்கட்டான் ஆடி
ஐவரைத் தோற்கடித்து ஆறி இரு வருடங்களில் அனுப்பவே துரியராசன்
ஆரணியம் தனிலிருந்து ஆறி இரு வருடம் போக்கி
ஐவரும் நகரம் சேர்ந்து ஐக்கிய சவாசம் நீங்கி
அரிமாரின் கிருபையாலே பரிவுடன் பொருதி வென்ற
பாரதக் கதையைப்பாட கரிமுகன் மீது காப்பு.
இப்படி நினைத்தவுடன் பாடலை உருவாக்கும் சக்தி கொண்ட திரு.அ.பூ.ம.கிருஷ்னப்பிள்ளை அவர்கட்கு மக்கள் மத்தியில் பெரும் மதிப்பு இருந்து வந்ததைக் காணக் கூடியதாக இருந்தன. இவரால் உருவாக்கப்பட்ட கூத்துக்களான தர்மபுத்திர நாடகம் , வசந்த சுந்தரி, கல்யாணம் அருள்வேத ராணி, விக்கிரமாதித்தன், அருச்சுணன் பாசுபதம் போன்ற கூத்துக்கள் மக்கள் மத்தியில் பெரும் புகழையும் பெயரையும் பெற்றுக் கொடுத்தன.
இவர் பாடல்களை உருவாக்கும் போது கேட்டு எழுதுவதற்கு பல பேரை வைத்திருந்தார் அவர் ஒருமுறை சொன்னால் உடனே எழுதி விட வேண்டும் அப்படி எழுதா விட்டால் உடனே கோபம் வந்து விடும்.
தர்மபுத்திரநாடகம் என்னும் கூத்தை அவர் உருவாக்கும் போது பாடல்களை எழுதுவதற்கு என்னை நியமித்தார் இவரிடமிருந்து தான் பாடல்களை எப்படி உருவாக்குவதென்பதை கற்றுக் கொண்டேன், இவருடன் வேலை செய்யும் போது நான் வாங்கிய ஏச்சுப் பேச்சுக்கு கணக்கில்லை. இவைகளை நான் பொருட்படுத்தாமல் இருந்ததன் காரணமாகவே தற்போது இவரை எனது குருவாக மதித்து செயற்பட்டு பாடல்களை உருவாக்கும் ஆற்றல் பெற்றுள்ளேன்.
தர்மபுத்திர நாடகம், அருச்சுணன் பாசுபதம் என்ற கூத்துக்களின் பாடல்களை அவர் உருவாக்கும் போது முழுக்க முழுக்க அவருடன் இருந்து எழுதி இருக்கிறேன். பாடல்களை உருவாக்குவதற்கு எனக்கு அவர் கற்றுத்தந்து அவர் மறைந்து விட்டார். அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
கட்டுரை எழுத்துருவாக்கம்
ஏட்டு அண்ணாவியார்
செ.சிவநாயகம்
39/145 ஜேம்ஸ் வீதி,
மட்டக்களப்பு.