யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள பெண் உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரங்கள் பெரும்பாலான சபைகளில் வழங்கப்படுவதில்லை என பெண் உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர்
யாழ் சமூக செயற்பாட்டு மையம் மற்றும் மகளிர் அபிவிருத்தி மையம் ஆகியவற்றுடன், இணைபங்குதாரராக “சேர்ச் போர் கொமன் கிறவுண்ட்” நிறுவனம் ஆகியன இணைந்து “கற்றல் மற்றும் தலைமத்துவத்தில் பெண்கள்” எனும் நிகழ்ச்சி திட்டம் மற்றும் “அரசியலில் பெண்களை வலுப்படுத்துதல்” எனும் நிகழ்ச்சி திட்டங்களின் கீழ் அரசியலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான கழகம் ஒன்றை அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடலும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
அதன் போதே பெருமளவான பெண் உறுப்பினர்கள் தமக்கு சபைகளில் உரிய அங்கீகாரங்கள் கிடைப்பதில்லை என குற்றம் சாட்டினர்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவாகியுள்ள பெண் உறுப்பினர்களான தமக்கு சபைகளில் கருத்துக்களை முன்வைப்பதற்கு நேரம் ஒதுக்கப்படுவது போதுமானதாக இல்லை என கவலை தெரிவித்துள்ளனர்.
அது மாத்திரமன்றி சபையின் வேலை திட்டங்களின் போது , தாம் புறக்கணிக்கப்படுவதாகவும் , வட்டாரத்தில் இருந்து நேரடியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தாம் நேரடி உறுப்பினர்கள் என கூறி தம்மை புறக்கணித்து வட்டாரங்களில் வேலை திட்டங்களை முன்னெடுப்பதாகவும், பல சமயங்களில் வட்டாரங்களில் தாம் முன்மொழிந்த வேலை திட்டங்களை கூட இவர்கள் நேரடியாக சென்று எம்மை புறக்கணித்து வேலை திட்டங்களை முன்னெடுத்து அதற்கு உரிமை கோருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.
இவை தொடர்பில் தவிசாளர்களுக்கோ , எமது கட்சி தலைமைகளுக்கோ தெரியப்படுத்தினால் , அவர்கள் அது தொடர்பில் கவனத்தில் எடுப்பதில்லை எனவும் கவலையுடன் தெரிவித்தனர். #சபைகளில் #அங்கீகாரம் #பெண்_உறுப்பினர்கள் #குற்றச்சாட்டு