உள்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்கு, அரசியல் ரீதியான பல்வேறு அழுத்தங்கள் காணப்படுவதாகவும் உடனடியாக இது தடுத்து நிறுத்தப்படாவிடின், தடுப்பூசி ஏற்றும்பணியிலிருந்து தமது சங்கம் விலகும் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாக, தடுப்பூசிக் கொத்தணியொன்று உருவாகுவதைத் தடுக்க முடியாது என அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தொிவித்துள்ளாா்.
உலக சுகாதார ஸ்தாபனம், சுகாதார அமைச்சின் ஆலோசனைகள், பரிந்துரைகளின் பிரகாரம், உள்நாட்டில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், சில அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாக, ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அரசியல் தலையீடுகள் காரணமாக, தடுப்பூசி ஏற்றுவதற்காகப் பதியப்பட்டுள்ள பொதுமக்களின் பெயர்ப் பட்டியல்கள் அனைத்தையும் மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதென்வும் இதனால், மக்கள் மத்தியில் அமைதியின்மை தோன்றியுள்ளதாகவும் இதனால் தடுப்பூசி ஏற்றப்படும் சில நிலையங்கள், யுத்தகளம் போன்று காட்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #கொரோனா #பொதுச்சுகாதாரப்பரிசோதகர்களின்சங்கம் #தடுப்பூசி