யாழ்ப்பாணம் நாவலடி கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது எட்டு மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் ஒருவா் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
திருகோணமலையை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் , அப்பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வருகின்றார். அவரது கணவர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்ற நிலையில் , தனது தாய் , சகோதரர்களுடன் வசித்து வருகின்றார்.
குறித்த பெண் நேற்றைய தினம் திங்கட்கிழமை தனது எட்டுமாத குழந்தையை தடி ஒன்றினால் அடித்து துன்புறுத்தியுள்ளார். அதனை அவரது சகோதரன் கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி இருந்தார்.
குறித்த காணொளி நேற்றைய தினம் இரவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை அடுத்து ஊடகவியலாளர்கள் சிலரினால் குறித்த சம்பவம் குறித்து , நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் , யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனை அடுத்து இன்றைய தினம் காலை குறித்த வீட்டிற்கு நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் , குடும்ப நல உத்தியோகஸ்தர் உள்ளிட்டவர்களுடன் யாழ்ப்பாண காவல்துறையினா் சென்று குழந்தையை மீட்டதுடன் , குறித்த பெண்ணை விசாரணைக்காக யாழ்ப்பாண காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். #யாழ்ப்பாணம் #குழந்தை #துன்புறுத்திய_தாய் #கைது