நாசா ரோவர் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கி இரண்டு வாரங்களின் பின்னர் தனது முதல் தரை நகர்வை நிறைவு செய்துள்ளது.
பெப்ரவரி 18 ஆம் திகதி செவ்வாயில் “ஜெஸீரோ கிரேட்டர்” (Jezero Crater) என்கின்ற பள்ளத்தாக்குப் பகுதியில் தரையிறங்கிய ரோவரில் அதன் கருவிகளைப் பரிசீலிக்கும் பணியை விஞ்ஞானிகள் கடந்த சில நாட்களாக மேற்கொண்டிருந்தனர். அப்பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்தே விண்கலம் அதன் முதலாவது பயணத் தைத் தொடங்கியது என்ற தகவலை நாசா (NASA) வெளியிட்டிருக்கிறது.
வியாழக்கிழமை அது பரீட்சார்த்தமாக சில மீற்றர்கள் நகர்ந்தபோது தரையில் அதன் சக்கரங்களின் தடயங்களை கமெராக்கள் படம் பிடித்து அனுப்பின. செவ்வாயில் இதற்கு முன்னர் தரையிறங்கிய சிறிய விண்கலகளை விட Perseverance வேகமானது .பலமான ஆறு சக்கரங்களுடன் அது நாளொன் றுக்கு 200 மீற்றர்கள் தூரம் பயணிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர். செவ்வாயில் ஒரு நாள் என்பது பூமியின் ஓரு நாளை விட மிக நீண்டது.
கார் ஒன்றின் அளவைக் கொண்ட Perseverance விண்கலம் இயங்குவதற் கான சக்தி அணு பற்றறி (Nuclear Battery) மூலம் வழங்கப்படுகிறது. அங்கு இரவில் நிலவும் கடுமையான குளிரில் தாக்குப் பிடிப்பதற்கான வெப்பத்தை சிறிய அணு மின் பிறப்பாக்கியே வழங்குகிறது. புளுரோனியம்(plutonium) திரவ எரிபொருள் மூலம் அணு பற்றறிக்கு (Nuclear Battery) மின்னூட்டும் நவீன தொழில் நுட்பம் அதில் பயன்படுத்தப் படுகிறது.அதன் அணு பற்றறி தொடர்ந்து 14 ஆண்டுகள் சக்தி வழங்கக் கூடியது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குமாரதாஸன். பாரிஸ்.
06-03-2021