இலங்கை பிரதான செய்திகள் முஸ்லீம்கள்

இஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது!

எமது சமுகத்தில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் கருவில் தொடங்கி கல்லறை வரை தொடர்ந்து கொண்டே வருகின்றது. பெண்களது சுதந்திரத்தை தடுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளில் இருந்தும் விடுவித்துக் கொள்வதற்கான உரிமை அவர்களுக்குண்டு. சொத்துக்கள் தேடுவதற்கும் அனுபவிப்பதற்கும், மாற்றீடு செய்வதற்குமான உரிமை இருப்பதுடன் பாதிக்கப்பட்டவர் தமது பாதிப்புக்கெதிராக நீதிமன்றங்களில் நேரடியாக வழக்குத் தாக்கல் செய்வதற்கும், நீதியைப் பெற்றுக் கொள்வதற்கும் உரிமை எமது நாட்டில் பெண்களுக்கிருக்கின்றது. இருபதாம் நூற்றாண்டின் கடைசித் தசாப்தங்களில்தான் இலங்கைப் பெண்களின் வாழ்வில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. சட்டங்களில் சீர்திருத்தம், பெண்களின் பொருளாதார சமூக அந்தஸ்தில் முன்னேற்றம் பெற்றன.

‘சீடோ’ சமவாயம்

சீடோ சமவாயம் என்றால் பெண்களின் உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் தாபனம் 1979ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதி உருவாக்கப்பட்டிருக்கும் மிகப் பெருமதிமிக்க ஒரு ஆவணம். இதில் இலங்கை 1981ஆண் ஆண்டு அக்டோபர் மாதம் 5ந் திகதி கையெழுத்து வைத்து நாட்டில் வாழ்ந்து வரும் பெண்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு இணங்கியுள்ளது.

பெண்ணுரிமையும், இஸ்லாமும்

புனித இஸ்லாம் ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களின் காலத்திலேயே இறைவனால் ஏற்படுத்தப்பட்டு காலச் சூழல்களுக்கேற்ப வேதங்கள் மூலமும். ஸூஹூபுகல் மூலமும், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நிறைவு செய்யப்பட்ட உன்னத மார்க்கமாகும்.

இஸ்லாமிய போதனைகள் வளர்ச்சியடையத் தொடங்கிய காலெங்களிலெல்லாம் பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்களை சமுகத்தில் மதிக்கத்தக்கவர்களாக மாற்றிய பெருமை இறுதித் தூதரர் நபி (ஸல்) அவர்களுக்குரியது என்பதை இன்று உலக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இஸ்லாத்தில் மனிதாபிமான அடிப்படைகள் தாராளமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டல்களும், தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப கால இஸ்லாமிய சரித்திரங்களை புரட்டிப்பார்கின்ற போது, போர்க் காலங்களில் பெண்கள் மற்றும் சிறுமியர்களைப் பாதுகாப்பதில் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் கடமை என இஸ்லாம் வலியுறுத்துகிறது. ‘ பெண்கள், குழந்தைகளைக் கொல்வதை இறைதூதர் தடுத்துள்ளார்கள். (ஸஹீஹூல் புஹாரி-3015) சுதந்திரமும் வாழ்வுரிமையும் கொண்ட மனித இனத்தின் ஒரு பகுதியாக உள்ள பெண்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் கருத்தாகவே இஸ்லாமியப் போதனைகள் இருக்கின்றது.

கலீபா அபூபக்கர் (றழி) ‘ஸாம்’ தேசத்திற்குப் படைகளை அனுப்பிய போது, போர்த் தளபதியை நோக்கி, நான் உனக்கு 10 விடயங்கள் குறித்து உபதேசி;க்கின்றேன். பெண்களை, குழந்தைகளை, வயோதிபர்களை, கொல்ல வேண்டாம். பிரயோசனமளி;க்கக்கூடிய மரங்களை வெட்ட வேண்டாம். விவசாயத்தில் ஈடுபடுகி;ன்றவர்களை வெளியேற்ற வேண்டாம். ஆடுகளையோ வேறு கழுதைகளையோ கொல்ல வேண்டாம். பேரீச்ச மரங்களை அழிக்க வேண்டாம் என உபதேசம் செய்தார்கள்.

பெண்ணானவள் வளரும் வறுமையின் சுமைகளைத் தாங்குவதோடு, பொருளாதார சுரண்டல், சமூக பாரபட்சம், மற்றும் சுமைகளுடன் கூடிய குடும்பப் பொருப்புக்களை இன்னமும் தாங்கிக் கொண்டு வருகிறாள். இந்நிலையில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுடன் பெண்களுக்குரிய வன்முறையானது இன்று சமுகத்தின் மத்தியில் கட்டவிழ்க்கப்பட்டிருப்பது கவலைக்குரியது. இருப்பினும் கடந்த காலங்களை விட இப்போது பெண்களின் உரிமையும், சமூகப்பாங்கும் எவ்வளவோ மேம்பட்டுள்ளன என்றே கூறவேண்டும். ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் பெண்களின் விடயம் மிகவும் தெளிவாக இருக்கின்றது.
அண்ணல் நபிகள் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதிப் பிரசங்கத்தில் பின்வருமாறு கூறினார்கள் .மக்களே உங்களுக்கு உங்கள் மனைவியரின் மீது உரிமைகள் இருக்கின்றன. அதேவேளை உங்கள் மனைவியருக்கு உங்களின் மீது உரிமைகள் இருக்கி;ன்றன. அன்புடனும் நேசத்துடனும் உங்கள் மனைவியரை நடத்துங்கள். அல்லாஹ்வின் அமானிதமாகவே அவர்கள் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வாழ்கைக்கும், வழிகாட்டல்களுக்கும் உதாரணமாய்த் திகழ்ந்த உத்தம நபி (ஸல்) அவர்கள் பெண்களின் உரிமையினை மதித்து அவர்களுக்கான பாதுகாப்பை மேற்கண்ட உபதேசம் மூலம் உத்தரவாதப்படுத்தியிருக்கிறார்கள்.


ஸஹீஹூல் முஸ்லிம் பின்வருமாறு வலியுறுத்துகின்றது. ‘ஒரு கன்னிப் பெண் அவளது பாதுகாவலரின் மூலம் திருமணம் செய்து வைக்கப்படும் போது, அப்பெண்ணிடம் கலந்தாலோசிப்பது அவசியமா? என நான் அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டேன். உடனே அல்லாஹ்வின் தூதர் ‘ஆம் நிச்சயமாக அப்பெண் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்’ என்று கூறினார்கள். நான் மீண்டும், அப்பெண் வெட்கப்பட்டால் என்ன செய்வது என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர், அவளின் வெட்கமானது அப்பெண்ணி;ன் சம்மதத்தைக் குறிக்கும் என பதிலளித்தார்கள்’ என ஆயிஸா (றழி) அவர்கள் கூறினார்கள். இதிலிருந்து வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் பெண்களது கருத்துக்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டுமென்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எடுத்தியம்பியுள்ளார்கள்.

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்திலும் பெண்களைப் பற்றிய மனப்பாங்குகள் சட்ட ஏற்பாடுகளில் செல்வாக்கு செலுத்துவதைக் காணலாம். இச்சட்டத்தின்படி, ஒரு பெண் பருவமடைந்ததும் திருமணம் செய்ய முடியும். ஆனால் 12 வயதுக்குக் குறைவாக இருப்பி;ன் காழி நீதிபதியின் அனுமதி பெறப்பட வேண்டும். இச்சட்டமானது ஆண்களுக்கான திருமண வயது, இணக்கத்துக்கான தேவை பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. பெண்களின் விடயத்திற்கே முன்னுரிமை அளிக்கின்றது.


இலங்கையிலுள்ள தனியார் சட்டத்திற்கமைவாக முஸ்லிம் சட்டம், தேசவழமைச் சட்டம் மற்றும் கண்டியச் சட்டங்கள் திருமண, விவாகரத்து மற்றும் சொத்துக்கள் விடயங்களில் பெண்களி;ன் உரிமைகளை வலியுறுத்தியே ஆக்கப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான சர்வதேச சட்டத்தின் கீழான பாதுகாப்புக்கள் மனிதாபிமான, மனித உரிமைகள் மற்றும் அகதிகள் சட்டங்களுக்கு உட்பட்ட முறையில் அரசுகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதக் குழுக்கள் மனிதாபிமான சட்டத்தின் அடிப்படையில் மக்களை பாதுகாக்கவும், அதனை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.

‘ஆண்கள் மற்றும் பெண்களில் எவர் நம்பிக்கையாளராகவும், கீழ்ப்படிவானவர்களாகவும,; வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும,; அல்லாஹ் முன்னிலையில் பணிவானவராகவும, தான தர்மம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தமது வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும,இன்னும் அல்லாஹ்வை அதிகம் நினைவுகூருபவர்களாகவும் இருக்கிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அல்லாஹ் பாவ மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்துள்ளான். (அல்குர்ஆன் 33:35)

எனவே மனித உரிமைகளுக்குள் பெண்களின் உரிமையும் உள்ளடக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கம் பல்வேறு விதமான பாரபட்சங்களிலிருந்தும் பாதுகாப்புப் பெற்றுக் கொள்வதற்கான உரிமைகள் புனித இஸ்லாத்தில் உள்ளது என்பதை அனைவர்களும் இந்நாளில் புரிந்து கொள்ள வேண்டும்.


அப்துல் அஸீஸ், பிராந்திய இணைப்பாளர், மனித உரிமைகள் ஆணைக்குழு, கல்முனை
.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.