Home உலகம் இளவரசர் ஹரி – சீமாட்டி மேகன் அரச குடும்பம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

இளவரசர் ஹரி – சீமாட்டி மேகன் அரச குடும்பம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

by admin

பிரபல அமெரிக்க தொலைக்காட்சியான சிபிஎஸ் ப்ரைம்டைம் ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் பிாித்தானிய இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன் மார்க்கல் வெளியிட்டு வரும் நேர்காணலில் வெளியிடும் விவரங்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.

பிாித்தானிய அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்த இளவரசர் ஹரி, மேகன் மார்க்கல் ஆகியோர் தங்களது மகனுடன் தற்போது அமெரிக்காவில் குடியேறி விட்டனர்.

அடிப்படையில், ஹரியும் மேகன் மார்க்கலும் இன்னமும் அரச குடும்பத்தின் உறுப்பினர்களாக தொடர்ந்தாலும், கடந்த மாதம் இவர்கள் இருவரும் அரசு குடும்ப உறுப்பினர்களுக்கான பொறுப்புகளிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக பிாித்தானிய மகாராணி எலிசபெத் அறிக்கையொன்றின் மூலம் கூறியிருந்தார்.

"நான் இனி உயிருடன் இருக்க விரும்பவில்லை" - அதிர்ச்சியளித்த இங்கிலாந்து இளவரசி மேகன் மெர்கல்லின் பேட்டி

இந்த நிலையில், இன்று ஒளிபரப்பான இரண்டு மணி நேர நேர்காணலில் ஹரி, மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், தங்களது தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள், தங்களுக்கு பிறக்கவிருக்கும் அடுத்த குழந்தையின் பாலினம் உள்ளிட்டவை குறித்து பேசினர்.

அவற்றில் சில முக்கியமான விடயங்களை இங்கே பார்ப்போம்.

‘நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை’

அரச குடும்ப வாழ்க்கை குறித்த மேகனின் கருத்துக்களை ஓப்ரா கேட்டபோது, “நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை” என்று கூறிய அவர், இதை நான் ஹரியிடம் கூறுவதற்கு “வெட்கப்படுகிறேன்”, ஏனெனில் அவர் “சந்தித்த இழப்புகள்” அவ்வளவு அதிகம் என்று கூறினார்.

அப்போது நீங்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கொண்டிருந்தீர்களா என்று ஓப்ரா கேட்டதற்கு, “ஆம்” என்று மேகன் பதிலளித்தார். “அது எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என்று நினைத்தேன்” என்று அவர் கூறினார்.

மேலும், தனது இந்த எண்ணத்திலிருந்து விடுபட தேவையான ஆலோசனையை பெற “அமைப்பொன்றின்” உதவியை நாடும் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் மேகன் தெரிவித்துள்ளார்.

“குடும்பத்தினர் என்னை பொருளாதார ரீதியில் கைவிட்டனர்”

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - இளவரசி மேகன் அதிர்ச்சி பேட்டி

ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தினர் தன்னை பொருளாதார ரீதியில் முற்றிலும் கைவிட்டதாகவும், தனது பாதுகாப்புக்கு தானே பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இளவரசர் ஹாரி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அரச குடும்ப பொறுப்பை துறக்க என்ன காரணம்?

எனினும், தன்னுடைய தாய் விட்டுச்சென்ற பணம் தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார். “என்னைப் பொறுத்தவரை, நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். என் மனைவி என் பக்கத்தில் அமர்ந்திருக்க, உங்களுடன் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

அரச குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகியபோது சந்தித்த விடயங்கள் குறித்து மேலும் பேசிய அவர், “இது எங்கள் இருவருக்கும் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருந்தது. ஆனால் குறைந்தபட்சம் நாங்கள் ஒருவருக்கொருவராக இருந்தோம்” என்று ஹரி கூறினார்.

அரச குடும்ப பொறுப்பில் இருந்து விலக என்ன காரணம் என்று ஓப்ரா கேட்டபோது, “அது அவசியப்பட்டது,” என்று ஹரி கூறினார். “நாங்கள் எல்லா இடங்களுக்கும் தனித்தனியாகவும் இணைந்தும் சென்று உதவி கேட்டோம்” என்று அவர் கூறினார்.

அப்படியென்றால் நீங்கள் உதவி கேட்டு அது கிடைக்காமல் போனதால்தான் அந்த முடிவை எடுத்தீர்களா என ஓப்ரா கேட்டதற்கு, “ஆமாம்” என தெரிவித்த ஹரி, “அப்போதும் கூட நாங்கள் குடும்பத்தை விட்டு விடவில்லை,” என்று கூறினார். அப்போது மேகன், “அவர்கள்தான் ஏற்கெனவே உள்ள ஒரு வகை பொறுப்பில், அதாவது அரச குடும்பத்து மூத்த உறுப்பினர் பொறுப்பில் இல்லாதவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என விரும்பினார்கள்,” என்று தெரிவித்தார்.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு: இளவரசர் ஹாரி, சீமாட்டி மேகன் மார்க்கல் அதிர்ச்சிப்பேட்டி

எனது ஒரே வருத்தம் எல்லாம் வரலாறு மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதுதான் என்று கூறிய ஹரி, சமூக ஊடக பரிணாமங்களும் போட்டியும், எனது தாய்க்கு நேர்ந்த நிலையை விட இது மிகவும் அபாயகரமானது என்பதை உணர்த்துகிறது என்று தெரிவித்தார்.

முன்னதாக நேர்காணலின் தொடக்கத்தில் கர்ப்பிணியான தனது கருவில் வளரும் குழந்தையின் பாலினம் பற்றி கூட தாங்கள் அறிந்திருந்ததாகவும், நேர்காணலின் இடையே ஹரியும் சேரும்போது அந்த தகவலை இருவரும் சேர்ந்து பகிர்வதாக மேகன் கூறினார்.

ராணியுடன் முதல் சந்திப்பு அனுபவம்

மகாராணியுடனான முதல் சந்திப்பு அனுபவம் பற்றி கேட்டதற்கு, “முதல் முறையாக பார்த்தபோது அது ஒரு பெரிய சம்பிரதாயமாக எனக்கு தோன்றவில்லை,” என மார்க்கல் கூறினார். ஆனால், ஹரி தன்னிடம் மரியாதை செய்வது எப்படி என தெரியுமா என கேட்டபோது, “எப்படி செய்வது” என வியந்தேன் என்கிறார் மேகன்.

“உண்மையில் வெளியில்தான் அப்படி எல்லாம் நடக்கும். அரண்மனைக்கு உள்ளே அப்படி இருக்காது என்றே நினைத்தேன்,” என்று மேகன் கூறினார். அப்போது தானும் ஹரியும் முழங்கால் மண்டியிட்டு மகாராணிக்கு மரியாதை தெரிவித்ததாக கூறிய அவர், அந்த நேரத்தில் எப்படி செய்தேன் என்பதை சரியாக நினைவுபடுத்திப் பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

நல்ல வேளையாக அரச குடும்பம் பற்றி அதிகமாக நான் அறிந்திருக்கவில்லை. அது பற்றி நான் ஆராயவும் இல்லை என்று மேகன் மேலும் கூறினார்.

மூன்று நாட்களுக்கு முன்பே நடந்த திருமணம்

“எங்களுடைய திருமணம் தேவாலயத்தில் முறைப்படி நடக்கவிருந்த மூன்று நாட்களுக்கு முன்பே எங்களுக்கு திருமணம் நடந்து விட்டது. இதுவரை அது பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. கேட்டர்பரி பேராயரை அழைத்து, உலகின் பார்வைக்குதான் பெரிய திருமணம், ஆனால், எங்களுடைய இணைப்புக்கான திருமணமாக இது நடக்க வேண்டும்” என்று கூறினோம் என்றார் மேகன். இந்த தகவலை முன்பே பதிவு செய்த கலந்துரையாடல் தொகுப்பின்போது மேகன், ஹாரி தம்பதி ஓப்ராவிடம் தெரிவித்தனர்.

மகாராணி எனக்கு அற்புதமானவர்

மேகன்

அரச குடும்பத்துக்கும் அமைப்புக்கும் இடையிலான வேறுபாட்டை வலியறுத்திக் குறிப்பிட்ட மேகன், “அது மக்கள் பற்றியும் அவர்களைச் சுற்றி நடக்கும் தொழில்கள் பற்றியுமானது. எனக்கு எப்போதுமே மகாராணி அற்புதமானவராக இருந்தார். அவருடன் இருப்பதை நேசித்தேன். 2018இல் அவரை முதலாவதாக பார்த்தபோது எனக்கு தனது பவள காதணிகளையும் நெக்லஸையும் பரிசாக வழங்கினார். எப்போதுமே அவர் உள்ளார்ந்த வரவேற்பை வழங்குபவராக இருந்தார் என்று மேகன் கூறினார்.

அவரைப் போலவே அரச குடும்பத்தில் உள்ளவர்கள் செய்தார்களா என ஓப்ரா கேட்டபோது, எல்லோரும் அப்படித்தான் இருந்ததாக நினைக்கிறேன் என மேகன் பதிலளித்தார்.

“தனிமை உணர்வு மேலோங்கியது”

மேகன்

அரச குடும்பத்தில் இருப்பது பற்றி அதிகம் விவரித்த மேகன் மார்க்கல், நினைத்தபடி நண்பர்களுடன் மதிய உணவுக்கு செல்ல முடியாதது போன்ற கட்டுப்பாடுகள் போடப்பட்டபோது, தனிமையில் இருப்பது போன்ற உணர்வு மேலோங்கியது என்று தெரிவித்தார்.

அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சிறிது காலம் எங்கும் செல்லாமல் இருக்குமாறு கூறியதாகவும், அவரிடம் மாதக்கணக்கில் நான் எங்குமே வெளியே செல்லவில்லை என்று குறிப்பிட்டதாகவும் மேகன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் மக்கள் கடந்த ஆண்டில் முடங்கியபோது அவர்கள் எவ்வாறு சுதந்திரத்தை இழந்திருப்பார்கள் என்ற நிலையுடன் தனது நிலையை மேகன் ஒப்பிட்டார்.

“பிள்ளைக்கு பட்டத்து உரிமையை கூட கிடைக்க விடவில்லை”

மேகன்

தங்களுக்கு ஆர்ச்சி மகனாக பிறந்தபோது அவரை இளவசர் ஆக அறிவிக்கவில்லை. அந்த தகவல் கிரகித்துக் கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. காரணம் அது பட்டம் பற்றியது மட்டுமல்ல. அவருக்கு பாதுகாப்பு கிடைக்காது என்பதுதான்.

இது எல்லாவற்றையும் எனக்கு அதுவரை கிடைத்திராத தாய் என்ற பட்டம் இருந்தது மிக முக்கியமானது. எனது மகன் பாதுகாப்பாக இல்லாதது மற்றும் இந்த குடும்பத்தின் முதல் வாரிசு, மற்ற பேரப்பிள்ளைகளைப் போல பட்டத்துடன் அழைக்கப்படாதது வருத்தம்தான். நான் கர்ப்பமாக இருந்தபோதே எனது பிள்ளைகளுக்கு இளவரசர் பட்டமோ இளவரசி பட்டமோ வழங்கப்படாமல் இருக்க விதிகள் மாற்றப்பட்டன. அப்படி பறிப்பது அவர்களின் உரிமை கிடையாது. ஏன் எப்படி செய்ய வேண்டும்?”

பட்டப்பெயர் தொடர்பாக நானும் ஹாரியும் முடிவு எடுத்ததாக வெளிவந்த தகவல்கள் தவறு” என்றும் மேகன் கூறினார்.

மகனின் நிறம் குறித்து கவலைப்பட்ட அரச குடும்ப உறுப்பினர்

“ஆர்ச்சிக்கு ஏன் இளவசர் பட்டம் கிடைக்கவில்லை. அது இன ரீதியிலானதா, நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?” என ஓப்ரா கேட்டபோது, “உண்மையான பதிலை தெரிவிக்கிறேன்.”

“அது நான் கர்ப்பமாக இருந்த மாதங்கள். அப்போதே எனது பிள்ளைக்கு பாதுகாப்பு கிடைக்காது, பட்டம் கிடைக்காது என்று நாங்கள் பேசத் தொடங்கியிருந்தோம். பிறப்பிலேயே மகனின் கருப்பு நிறம் பற்றிய கவலைகளும் பேச்சுகளும் எழுந்தன,” என மேகன் கூறியபோது, “யார் என்ன பேசினார்கள்” என ஓப்ரா கேள்வி எழுப்பினார்.

ஆனால் அதை வெளியிட மறுத்த மேகன், “அது அவர்களுக்கு மிகவும் பாதிப்பை தரலாம். அரச குடும்பத்திடம் இருந்து ஹரிக்கும் அவர் மூலமாக எனக்கும் வந்த பதில்கள் அவை. பகுதி, பகுதியாக நடந்த அந்த உரையாடல்களை கேட்பது மிகவும் கடுமையானதாக இருக்கும்” என்று கூறினார். #இளவரசர்_ஹரி #மேகன் #அரசகுடும்பம் #ஆர்ச்சி #குற்றச்சாட்டுகள்

நன்றி பிபிசிதமிழ்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More