பிரான்ஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல செல்வந்தருமாகிய ஒலிவியே டாசோல்ட் (Olivier Dassault) ஹெலிக் கொப்ரர் விபத்தொன்றில் உயிரிழந்தார்.
நாட்டின் வடக்கே நோர்மன்டி(Normandy) பிராந்தியத்தில் அவர் பயணம் செய்த ஹெலி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக் குள்ளானது என்று அறிவிக்கப்படுகிறது.
டூவிலில் (Deauville) உள்ள தனது விடுமுறைக்கால இல்லத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய சமயமே அவரது தனிப்பட்ட ஹெலிக்கொப்ரர் விபத்துக்குள்ளாகியது. விமானியும் உயிரிழந்தார்.
ஹெலிக்கொப்ரர் தரையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் மரம் ஒன்றில் சிக்கியது என்று கூறப்படுகிறது. சிவில் விமானப் பாதுகாப்பு ஆய்வு நிபுணர்கள் குழு ஒன்று சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தொடக்கி உள்ளது.
பிரபல கோடீஸ்வரர் சேர்ஜ் டாசோல்டின் மகனாகிய ஒலிவியே டாசோல்ட்(வயது 69) அரசியல், தொழில்துறை, படைத்துறை எனப் பல துறைகளில் அறியப்பட்ட மூத்த அரசியல் பிரமுகர் ஆவார்.
வலதுசாரி றிப்பப்ளிக்கன் (Les Republicains) கட்சியைச் சேர்ந்த அவர் சுமார் இருபது வருடகாலம் அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தவர்.
பிரான்ஸின் வடபகுதியில் உள்ள Oise தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் விமானப்படையிலும் சேவையாற்றி இருந்தார்.அவரது திடீர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலிச் செய்திகளை வெளியிட்டுவருகின்றனர்.
“நாட்டை நேசித்தவர். தன் வாழ்நாள் முழுவதும் பிரான்ஸ் நாட்டுக்குச் சேவை புரிவதை நிறுத்திக் கொள்ளாத ஒரு வழிகாட்டி ஒலிவியே டாசோல்ட். அவரது கொடூரமான இழப்பு ஈடுசெய்ய முடியாதது ” – என்று அதிபர் எமானுவல் மக்ரோன் தனது ருவீற்றர் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார். #பிரெஞ்சு #விபத்தில் #மரணம் #Olivier_Dassault
——————————————————————–