மலையக முஸ்லீம் மக்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமது விசாரணை அறிக்கையை வெளியிடத் தவறியுள்ளது.
2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி இரவு முதல் கண்டியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் அதே ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடுகமகே மற்றும் ஏனைய ஆணையாளர்களின் தலைமையில் கண்டியில் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றதுடன், அதே ஆண்டு ஜுலை மாதம் விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் கூறியிருந்தார்.
முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க தவறியிருந்த அரசாங்கம், கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்கள கடும்போக்குவாதிகளுக்கு பாதுகாப்பு தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கியதாக அரசாங்க அமைச்சர்கள் விமர்சனம் முன்வைத்திருந்தனர்.
அத்துடன் ஆயுதமேந்திய விசேட அதிரடிப் படையினர் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதுபோன்ற காணொளிகளும் வெளியாகியிருந்தன.
விசாரணைகளுக்கான ஆணையாளர் கசாலி உசேன், பரிசோதனை மற்றும் விசாரணைப் பிரிவு பணிப்பாளர் நிஹால் சந்திரசிரி, சட்டத்தரணி ஏ.டபிள்யூ.எம். அஹமட், கண்டி ஒருங்கிணைப்பாளர் குமுதுனி விதான மற்றும் சட்ட அலுவலர் பிரதீபா வீரவிக்ரம ஆகியோர் இந்த சாட்சிப் பதிவுகளை மேற்கொண்டனர்.
முஸ்லீம் விரோத வன்முறைகளைத் தடுக்க சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காத அரசாங்க பாதுகாப்புப் படையினர், கிளர்ச்சியடைந்த சிங்கள பிரிவனைவாதிகளுக்கு உதவியதாக அந்த நேரத்தில் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டின் போது ஆயுதமேந்திய விசேட அதிரடிப்படையினர் முஸ்லிம்களைத் தாக்கும் காணொளிக் காட்சிகளும் வெளியிடப்பட்டன.
திகனயில் அமைந்துள்ள ஹிஜ்ரபுரா ஜும்மா பள்ளிவாசலில், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி 4.59ற்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்து காணொளி ஒன்றை ஜே.டி.எஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
முஸ்லீம்-விரோத தாக்குதலில் அரசாங்க பாதுகாப்புப் படையினர் ஈடுபடுவது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பபடாமை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கலவரத்தின் போது அரசாங்க அதிகாரிகளின் பங்கு குறித்து மாத்திரமே விசாரணையில் ஆராயப்பட்டதாக, கண்டியில் ஏற்பட்ட மோதல்கள் குறித்து மூன்று நாள் விசாரணையின் முடிவில், கருத்து வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார்.
எவ்வறெனினும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதுவரை அறிக்கையை பகிரங்கப்படுத்தத் தவறியது ஏன் என்பதைக் கண்டறியும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
ஜெனீவா அறிக்கை
மத சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் கலாநிதி அஹமட் ஷாஹீட், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது அமர்வில் சமர்ப்பித்த இலங்கைத் தொடர்பான அறிக்கையில் தாக்குதல் தொடர்பில் குறிப்பிடும் போது, மூன்று நாட்கள் இடம்பெற்ற தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 400ற்கும் அதிகமான சொத்துக்கள், பள்ளிவாசல்கள் மற்றும் வாகனங்கள் அழிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரிகளால் சிலர் இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட போதிலும் அரசியல்வாதிகளின் தலையீட்டின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் பதவிகள்
முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்களின் போது மத்திய மாகாணத்தின் பொறுப்பில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு கடந்த வருடம் அரசாங்கத்தில் ஒரு உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
கண்டி மாவட்டத்தில் முஸ்லீம் விரோத வன்முறையின் போது, மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான உயர் அதிகாரியாக செயற்பட்ட எஸ்.எம் விக்ரமசிங்க, “பொது முறைப்பாடுகள் மற்றும் குறைகளை விசாரணை செய்து உடனடி நிவாரணம் வழங்குவதற்கான” குறைகேள் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
நியமனத்தை அறிவித்த ஜனாதிபதி செயலகம், நிர்வாக அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் போது அரச அதிகாரிகள் பொறுப்பிலிருந்து விலகியிருந்தால் அல்லது அதனை தாண்டி செயற்பட்டிருந்தால் அதன் மூலம் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் அல்லது அழுத்தங்கள் ஏற்பட்டிருக்குமானால் அது பற்றி கண்டறிந்து தீர்வுகளை வழங்குவது ஒம்புட்ஸ்மன் அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கமாகும் எனத் தெரிவித்திருந்தது.
வன்முறை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள மஹசோன் படையணியின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்க, கலவரம் இடம்பெற்ற தினம் இரவு சிரேஷ்ட பிரத பொலிஸ்மா அதிபர், எஸ்.எம் ஜயசிங்கவினால், திகனவிற்கு அழைத்து வரப்பட்டதாக, அந்த நாட்களில் குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியும் ஒரு பௌத்த பிக்குவும் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவில்லை.
“கண்டி டி.ஐ.ஜியே அமித் வீரசிங்கவை இந்த நேரத்தில் அங்கு வரச் சொல்லி, அவரை இந்த பிரச்சினையில் சிக்கவைத்தார்” என ஜயங்கனி சிதுமி குமாரி ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
மார்ச் 5ஆம் திகதி, முஸ்லீம் எதிர்ப்புத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டபோது, சிரேஷ்ட பிரத பொலிஸ்மா அதிபர், எஸ்.எம் ஜயசிங்கவினால், மோதலுக்கு ஆட்கள் அழைக்கப்பட்டதாக, மட்டக்களப்பு மங்களராம விகாரையின் தலைமைத் தேரர், அம்பிடிய சுமனரதன தேரர் தெரிவித்திருந்தார்.
மன்னிப்பு கேட்ட முகப்புத்தகம்
முகப்புத்தகம் ஊடாக முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டிய விடயத்தில் பங்களிப்பு செய்தமை தொடர்பில் முகப்புத்தகம் நிறுவனம் மன்னிப்பு கோரியிருந்தது.
முகப்புத்தகம் முழுவதும் பரந்துபட்ட வகையில் வதந்திகள் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிராக வன்முறைகளுக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக முகப்புத்தகம் நிறுவனம் தெரிவித்திருந்தது.
திகன மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளின் போது சமூக வலைத்தளங்கள் ஊடாக முஸ்லீம் விரோத வெறுப்புணர்வு பேச்சுகள் பரப்பட்டதுடன், அதனை முகாமைத்துவம் செய்யும் வகையில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய அரசாங்கம் முகப்புத்தகத்திற்கு தற்காலிக தடைவிதித்திருந்தது.
முகப்புத்தகம் மூலம் பரிமாறப்பட்ட மூர்க்கத்தமான செய்திகள், முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு பங்களிப்பு செய்திருக்கலாம் என இந்த சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
இந்த நிலையில் தமது சமூக வலைத்தளத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் ஆழ்ந்த கவலை அடைவதாக முகப்புத்தகம் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதன் விளைவாக, மனித உரிமைகளில் உண்மையான தாக்கம் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ள முகப்புத்தகம், அதற்கான மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருந்தது. #திகன #முஸ்லீம்_எதிர்ப்பு #தாக்குதல் #ஜெனீவா #இலங்கைமனிதஉரிமைகள்ஆணைக்குழு #முகப்புத்தகம்