14 வயது பள்ளி மாணவி ஒருத்தி சக மாணவன், மாணவி இருவரால் தாக்கப் பட்டு சென் (Seine) நதியில் தள்ளி வீழ்த்திக் கொல்லப்பட்டிருக்கிறார். பாரிஸ் நகருக்கு வெளியே ஆர்ஜொந்தை (Argenteuil) என்னும் பகுதியில் நேற்றிரவு ஊரடங்கு நேரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களின்படி பள்ளியில் இடம்பெற்ற துன்புறுத்தல்களின் தொடர்ச்சியாகவே அந்த மாணவி பலியாகி உள்ளார் என்பது தெரியவருகிறது.
ஆர்ஜொந்தையில் அமைந்துள்ள தொழில் பள்ளியில் (lycée professionnel Cognacq-Jay d’Argenteuil) பயிலும் மாணவியை 15 வயதான சக மாணவன் ஒருவனும் மற்றொரு மாணவியும் இணைந்தே தாக்கி நதியில் தள்ளி உள்ளனர் எனக் கூறப்படுகிறது.
ஆர்ஜொந்தையில் A15 நெடுஞ்சாலை பாலம் அமைந்துள்ள பகுதியில் நதி நீரில் இருந்து மாணவியின் சடலத்தை காவல்துறை சுழியோடிகள் நேற்றிரவு மீட்டெடுத்தனர்.
சடலத்தின் தலையிலும் முகத்திலும் தாக்கப்பட்ட அடையாளங்கள் காணப்படுவதாக பிரேதப் பரிசோதனை யில் தெரியவந்துள்ளது.மாணவியை ஆற்றில் தள்ளிய தகவலை வீட்டில் தனது தாயாரிடம் கூறிவிட்டு சக மாணவியையும் அழைத்துக் கொண்டு தலைமறைவாகிய மாணவனை காவல்துறையினா் இன்று அதிகாலை கைது செய்து இருவரையும் தடுத்து வைத் துள்ளனர்.
கொல்லப்பட்ட மாணவிக்கும் கொலையில் சம்பந்தப்பட்ட மாணவிக்கும் இடையே பள்ளியில் இருந்துவந்த பகைமையே கொலைக்கான காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
உயிரிழந்த மாணவியின் ‘ஸ்னப்சற்’ கணக்கினுள் ஊடுருவி படங்கள் மற்றும் பதிவுகளை அபகரித்து வெளியிட்டு அவரைத் துன்புறுத்தும் செயல்கள் பள்ளியில் இடம்பெற்றிருந்தன என்று சக மாணவர்கள் சிலர் சாட்சியம் வழங்கி உள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தினரும் காவல்துறையினரும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தி னருக்கு ஆர்ஜொந்தை நகர மேயர் Georges Mothron தனது ருவீற்றரில் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
*படம் :சம்பவம் நடந்த நதிப் பகுதியின் ஒரு தோற்றம் (Seine sous le pont A15) #மாணவி #நதியில் #கொலை #Argenteuil
—————————————————————-
–குமாரதாஸன். பாரிஸ்.09-03-2021