வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்தைச் சீர்செய்ய யாழ்ப்பாணம் மாம்பழம் சந்தியிலும் கச்சேரி – நல்லூர் வீதியிலும் காவல்துறையினர் மாற்றுப் பாதைகளில் வாகனங்களை அனுப்பி வைத்தனர்.
தமக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் அதனை மீளப் பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கடந்த முதலாம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களது போராட்டம் உணவுதவிர்ப்பு போராட்டமாக மாற்றம் அடைந்து இன்றைய தினம் மூன்றாவது நாளாக உணவுதவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இந்த நிலையில் இன்று முற்பகல் அவர்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2019ஆம் ஆண்டு ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு சுகாதார பணியாளர்கள் நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது .
எனினும் குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நிரந்தர நியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறு கோரியே வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் #வடமாகாண #சுகாதார_தொண்டர்கள் #வீதி_மறியல் #போராட்டம் #நியமன_கடிதம்