Home உலகம் “வெளிநாட்டவர் மீது வெறுப்பு இல்லை, குடியேற்றம் எமது நாட்டுக்கு கெடுதல்!”

“வெளிநாட்டவர் மீது வெறுப்பு இல்லை, குடியேற்றம் எமது நாட்டுக்கு கெடுதல்!”

by admin


தேசியவாதத் தலைவி மரின் லு பென்


குடியேற்றவாசிகளை நான் எதிர்க்க வில்லை. வெளிநாட்டவர்கள் மீது அச்சமோ வெறுப்போ கிடையாது. ஆனால் குடியேற்றம் நாட்டுக்குப் பெரும் கெடுதலை ஏற்படுத்துகிறது. பிரான்ஸின் சர்ச்சைக்குரிய தேசியவாதக் கட்சியின் (Rassemblement national) தலைவி மரின் லு பென்( Marine Le Pen) இவ்வாறு கூறியிருக்கிறார்.

நேற்றிரவு BFM தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
அதிபர் தேர்தலில் வெற்றி அடைவார் என்ற நம்பிக்கை வலுவாக இருப்பதாகக் குறிப்பிட்ட மரின் லு பென், தனது ஆட்சியில் அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கக் கூடியவர்கள் யார் என்பது தொடர்பில் சிலரது பெயர்களையும் வெளியிட்டார்.


பதவிக்கு வந்தவுடன் “தேசிய ஒற்றுமை அரசாங்கம்” (gouvernement d’union nationale) ஒன்றை நிறுவப்போவதாகவும் தனது முதல் அரசியல் நடவடிக்கையாக வெளிநாட்டவர் குடியேற்றம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு (un référendum sur l’immigration) நடத்தப் படும் எனவும் அந்த நேர்காணல் நிகழ்ச்சியில் அவர் அறிவித்தார்.


“எனக்கு வெளிநாட்டினர் மீது எதிர்மறையான உணர்வுகள் இல்லை, வெறுப்பு இல்லை, வெளிநாட்டினர் மீது எனக்கு எந்தவித பயமும் இல்லை.(Je n’ai pas peur des étrangers) ” “குடியேற்றத்தைப் பற்றியும் நான் பயப்படவில்லை, நான் அதை என் நாட்டுக்கு மோசமாகக் கருதுகிறேன். சட்டவிரோத குடியேற்றத்தின் எதிர்மறையான விளைவுகளை நான் காண்கிறேன், அது நமது பொது நிதிகளை ஏப்பமிடுகிறது. நம் நாட்டில் பாதுகாப்பின்மை மோசமடைந்து வருவதற்கான முக்கிய காரணிகளில் அதுவும் ஒன்றாகும். பொது ஒழுங்கிற் கும் இடையூறுகளை உருவாக்குகிறது, அதை நாங்கள் பொறுப்பேற்க வேண்டும்” -இவ்வாறு அவர் விவரித்துக் கூறினார்.


நேற்றைய நேர்காணலில் அரசின் தடுப்பூசி வேகத்தைக் கடுமையாக விமர்சித்த அவர், ‘அஸ்ராஸெனகா’ தடுப்பு மருந்து குறித்து ஆழமான ஆய்வு அவசியம் என்று குறிப்பிட்டார்.


பிரான்ஸில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடிய அளவுக்கு செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார் மரின் லு பென்.


நாட்டின் 48 வீதமானவர்கள் – அல்லது இரண்டு பேரில் ஒருவர் – அவரது வெற்றிவாய்ப்பு உறுதி என்று நம்புகின்றனர். கருத்துக்கணிப்புகள் அதனை உறுதி செய்துள்ளன.

( அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவை பிரெஞ்சு மொழிச் சொற்கள்)

குமாரதாஸன். பாரிஸ்.
12-03-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More